சமுர்த்தி தேசிய சமூக வலுவூட்டல் வேலைத்திட்டத்தின் ஊடாக குறைந்த வருமானம் பெறும் மக்களின் சமூக மற்றும் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள், எதிர்காலத் திட்டங்கள் மற்றும் களமட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய செயற்பாடுகள் தொடர்பில் அதிகாரிகளுக்குத் தெளிவூட்டுவதையே பிரதான நோக்கமாகக் கொண்டு இம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இம்மாநாட்டில் கிராமிய அபிவிருத்தி, சமூக வலுவூட்டல் மற்றும் சமூகப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தம்மிக்க முதுகல மற்றும் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் அனுபம மங்கள விக்கிரமாரச்சி ஆகியோர் முதன்மை அதிதிகளாகக் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இதன்போது சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தம்மிக்க முதுகல விசேட விளக்கவுரையாற்றுகையில், “சமுர்த்தி தேசிய சமூக வலுவூட்டல் வேலைத்திட்டத்தின் முக்கியத்துவம், சமூகப் பாதுகாப்பை வலுப்படுத்துதல், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தல், சமூகப் பங்கேற்பை அதிகரித்தல், வறுமை ஒழிப்பு விகிதாசாரம் மற்றும் மக்களை நிலையான பொருளாதார முன்னேற்றத்தை நோக்கி வழிநடத்தும் எதிர்காலத் திட்டங்கள்” குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
இம்மாநாட்டில் மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர்கள், பிரதேச செயலாளர்கள், கணக்காளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன், கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்திச் சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் எனப் பெருமளவிலானோர் பங்கேற்றிருந்தனர்.
மக்கள் மையப்படுத்திய சமூக வலுவூட்டல் நடவடிக்கைகளை மாகாண மற்றும் மாவட்ட மட்டங்களில் மேலும் வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்கான முக்கிய தளமாக இம்மாநாடு அமைந்திருந்தது.
இவ்விசேட நிகழ்வுக்கான பூர்வாங்க ஏற்பாடுகள் அனைத்தும் அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் சுப்ரமணியம் கரன் அவர்களின் தலைமையிலும், அட்டாளைச்சேனை பிரதேச செயலகச் சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.எம். ஹமீட்டின் ஒருங்கிணைப்பிலும் மிகச் சிறப்பாகக் கட்டமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




