அவுஸ்திரேலியா – பங்களாதேஷ் அணிகள் இடையிலான கடைசி மற்றும் 2வது டெஸ்ட் போட்டி மெக்கேவில் உள்ள கிரேட் பேரியர்ஸ் ரீஃப் மைதானத்தில் நேற்று தொடங்கியது. முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹசில்வுட் ஆகியோரது வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 34 ஓவர்களில் 64 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதன் மூலம் அவுஸ்திரேலிய மண்ணில் முதலில் துடுப்பெடுத்தடி குறைந்த ரன்களுக்கு ஆட்டமிழந்த 2வது அணி என்ற மோசமான சாதனையை படைத்தது பங்களாதேஷ். இதற்கு முன்னர் 1932 இல் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில தென்னாபிரிக்க அணி 36 ரன்களுக்கு ஆட்டமிழந்து இருந்தது.
மிட்செல் ஸ்டார்க் வீசிய ஆட்டத்தின் முதல் பந்திலேயே ஷத்மான் இஸ்லாம் ரன் ஏதும் எடுக்காமல் கல்லி திசையில் நின்ற கமரூன் கிரீனிடம் பிடிகொடுத்து வெளியேறினார். தனது அடுத்த ஓவரின் முதல் 2 பந்துகளிலும் தன்ஸித் ஹசன் (0), கப்டன் நஜ்முல் ஹொசைன் ஷான்டோ (9) ஆகியோரை பெவிலியனுக்கு திருப்பினார் மிட்செல் ஸ்டார்க்.
தொடர்ந்து 6வது ஓவரை வீசிய மிட்செல் ஸ்டார்க், மொமினுல் ஹக்கை 9 ரன்னில் வெளியேற்றினார். இதைத் தொடர்ந்து லிட்டன் தாஸ் ரன் ஏதும் எடுக்காத நிலையில் மிட்செல் ஸ்டார்க் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். இதன் பின்னர் முஷ்பிகுர் ரஹிம் 5, மெஹிதி ஹசன் மிராஸ் 11, தஸ்கின் அகமது 1 ரன்னில் பாட் கம்மின்ஸ் பந்தில் ஆட்டமிழந்தனர்.
ஹசன் மஹ்மூத் 10 ரன்னில் ஜோஷ் ஹேசில்வுட் பந்தில் நடையை கட்டினார். கடைசி விக்கெட்டாக ஷோரிபுல் இஸ்லாம் 14 ரன்களில் மிட்செல் ஸ்டார்க் பந்தில் அவுட் ஆனார். தைஜூல் இஸ்லாம் 11 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். அவுஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 10 ஓவர்களை வீசி 6 மெய்டன்களுடன் 12 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்களை வீழ்த்தினார். பாட் கம்மின்ஸ் 3 விக்கெட்களை கைப்பற்றினார்.
இதையடுத்து ஆடிய அவுஸ்திரேலிய அணியும் தடுமாறியது. அந்த அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 40 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. டிராவிஸ் ஹெட் 22, மேட் ரென்ஷா 8, மார்னஷ் லபுஷேன் 4, ஸ்டீவ் ஸ்மித் 42, அலெக்ஸ் கேரி 5, பியூ வெப்ஸ்டர் 0, பாட் கம்மின்ஸ் 0, மிட்செல் ஸ்டார்க் 1 ரன்னில் ஆட்டமிழந்தனர்.
கமரூன் கிரீன் 81 பந்துகளில், 8 பவுண்டரிகளுடன் 51 ரன்களும், நதன் லயன் 28 பந்துகளில், 2 பவுண்டரிகளுடன் 10 ரன்களும் சேர்த்து களத்தில் இருந்தனர்.
இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தில் அவுஸ்திரேலியா 210 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.
கமரூன் கிரீன் 67 ஓட்டங்களை பெற்றார்.
பங்களாதேஷ் அணி சார்பில் ஷோரிபுல் இஸ்லாம் 7 விக்கெட்களை வீழ்த்தினார். தஸ்கின் அகமது, மெஹிதி ஹசன் மிராஸ், தஜ்ஜூல் இஸ்லாம் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். 146 ரன் முன்பின்தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்துள்ளது பங்களாதேஷ்.
10வது இடம் பிடித்தார் ஸ்டார்க்
பங்களாதேஷ் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் டெஸ்ட் அரங்கில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் 10வது இடத்தில் இருந்த தென்னாபிரிக்க அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயினின் சாதனையை மிட்செல் ஸ்டார்க் முறியடித்துள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் டேல் ஸ்டெயின் 439 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ள நிலையில், மிட்செல் ஸ்டார்க் 441 விக்கெட்டுகள் வீழ்த்தி 10வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். மிட்செல் ஸ்டார்க் இதுவரை 107 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 441 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.




