வியாழக்கிழமையன்று பொது நிதிக் குழுவின் (COPF) முன் ஆஜராகத் தன்னால் இயலாது என திறைசேரி செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்ததாக வெளியான ஊடகச் செய்திகளுக்கு, வெகுஜன ஊடகப் பிரதி அமைச்சர் கௌசல்யா அரியரத்ன விளக்கம் அளித்துள்ளார்.
புதன்கிழமை (29) ஊடகங்களிடம் பேசிய COPF தலைவர் ஹர்ஷ டி சில்வா, வியாழக்கிழமை நடைபெறவிருந்த குழு கூட்டத்தில் கலந்துகொள்ள இயலாது என திறைசேரி செயலாளரிடமிருந்து தனக்கு ஒரு கடிதம் வந்ததாகக் கூறினார்.
மேலும், இவ்விஷயம் தொடர்பாக பாராளுமன்றத்தில் ஜனாதிபதி அறிக்கை வெளியிட உள்ளதை திறைசேரி செயலாளர் காரணமாகக் குறிப்பிட்டு, அதற்குப் பிறகு ஒரு மாற்றுத் திகதியைக் கோரியதாகவும் அவர் கூறினார்.
இது தொடர்பில்பேசிய பிரதி அமைச்சர் அரியரத்ன, திறைசேரி செயலாளர், கோப் குழுவின் முன் ஆஜராக மறுக்கவில்லை என்றும், ஆனால் இவ்விஷயம் தொடர்பாக அரசாங்கம் பாராளுமன்றத்தில் ஒரு சிறப்பு அறிக்கை வெளியிட உள்ளதால், மே 5 ஆம் திகதிக்குப் பிறகு ஒரு திகதியை மட்டுமே கோரியதாகவும் தெரிவித்தார்.
மேலும், குழுவால் ஒப்புக்கொள்ளப்பட்ட மாற்றுத் திகதியில் சூரியப்பெரும கோப் முன் ஆஜராவார் என்றும் அவர் கூறினார்.



