கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலக பிரிவின் 2025 ஆம் ஆண்டுக்கான இரண்டாவது ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்றைய தினம் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் காலை பிரதேச செயலாளர் சித்திரவேல் ஒழுங்கமைப்பில் பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான கந்தசாமி பிரபு தலைமையில் இடம்பெற்றது.
கோறளைப்பற்று தெற்கு பிரதேசத்தின் கல்வி, நீர்ப்பாசனம், விவசாயம் மற்றும் காணி,போக்குவரத்து, வீதி அபிவிருத்தி, வங்கி,விவசாய காப்புறுதி,குடிநீர், வனபாதுகாப்பு, கமநல திணைக் களத்தினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி வேலை திட்டம், மிருக வைத்தியசாலை , வனஜீவராசிகள் திணைக்ளத்தினால் யானை வேலி அமைப்பது தொடர்பான பிரச்சினைகள் கலந்துரையாடப்பட்டதுடன், தொடர்ந்து வன இலாகாவிற்கு உரித்தான காணிகளில் மணல் அகழ்வது , அனுமதி அற்ற முறையில் மணல் களஞ்சிய படுத்தி வைத்துள்ளமை இதனால் வீதிகள் சேதமடைவது தொடர்பிலும் மணல் அகழ்வினை கண்காணிக்க வேண்டும் என்றும் அபிவிருத்தி குழு தலைவரினால் பொலிசாருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
கிரான் சுற்று வட்டம், தொடர்பிலும், அதனை அண்டிய பகுதியில் வீதி அபிவிருத்தி திணைக்களத்துக்கு உரித்தான பகுதிகளில் அமையப்பெற்ற சட்டவிரோத கட்டிடங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதுடன் பெரில்லாவெளி கிராம சேவகர் பிரில் தடனை பகுதியில் 10-15 பேருக்கு சொந்தமான காணியை தனியார் ஒருவர் (கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன்) பிடித்து வைத்து இருப்பது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களினால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு அதனை விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பணிக்கப்பட்டது.
மேலும் கோறளைப்பற்று தெற்கு பிரதேச எல்லை நிர்ணயம் தொடர்பிலும், கிரான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஐந்து கிராமங்கள் கோறளைப்பற்று மேற்கு ஒட்டமாவடி பிரதேச செயலகத்துடன் இணைக்க வேண்டும் என்று ஒரு சமூகத்தினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைக்கு கல்குடா பிரதேச சிவில் சமூக அமைப்பினால் அபிவிருத்தி குழு தலைவர் ,பாராளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் பிரதேச செயலாளர், ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் போன்றோரிடம் கோறளைப்பற்று மேற்கு, ஒட்டமாவடி, கோறளைப்பற்று தெற்கு கிரான் , கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகங்கள் , எப்படி உருவாகியது என்றும் அனைத்து பிரதேச செயலகங்களும் கோறளைப்பற்று பிரதேச செயலகத்தில் இருந்து பிரிந்தது எனவும் குறித்த ஐந்து கிராமங்களும் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலாகத்துடன் இருந்துதான் கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாகத்துடன் இனைந்தது என கல்குடா சிவில் சமூகத்தினல் ஆதாரத்துடன் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கூட்டத்தில் கலந்து கொண்ட உத்தியோகஸ்தர்களுக்கும் எடுத்து விரிவாக கூறப்பட்டதுடன் இது தொடர்பான மகஜரும் அபிவிருத்தி குழு தலைவரிடம் வழங்கப்பட்டது.
இக்கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச செயலாளர் மற்றும் ஒட்டமாவடி,வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர்கள் , பிரதேச சவை உறுப்பினர்கள், பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், ஏனைய திணைக்கள தலைவர்கள் மற்றும் உத்தியோகஸ்தர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், விவசாய அமைப்புக்கள் சமூக நலன் விரும்பிகள் கலந்துகொண்டனர்.
- மு.கோகிலதாசன்-




