உள்ளூராட்சி தேர்தலில் தமது வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும், தமிழ் மக்கள் கூட்டணியும் இன்று (25) இலங்கை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளன.
சங்கு சின்னத்தில் போட்டியிடும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினர் யாழ், கிளிநொச்சியில் தாக்கல் செய்த அனேக வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. சங்கு கூட்டணியினர் வேட்புமனுக்களை சில தரப்பாக தயார் செய்திருந்தனர். சுன்னாகம், மானிப்பாய் உள்ளிட்ட சபைகளுக்கு த.சித்தார்த்தனின் தலைமையில் வேட்புமனுக்கள் தயாரிக்கப்பட்டு, தாக்கல் செய்யப்பட்டன. அந்த வேட்புமனுக்கள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
ஜனநாயக போராளிகள் கட்சியினரால் பருத்தித்துறை பிரதேச, நகரசபைகளுக்கு தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
ஈ.பி.ஆர்.எல்.எவ் சுரேஸ் பிரேமச்சந்திரன், ரெலோவின் சுரேன் குருசாமி தரப்பினர் தயாரித்த வேட்புமனுக்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டன. ஆளடையாளத்தை உறுதி செய்யும் ஆவணத்தின் நகலை சமர்ப்பித்ததால் அவை நிராகரிக்கப்பட்டதாகவும், அது தெளிவற்ற நடைமுறையென்றும் அந்த தரப்புக்கள் குற்றம்சுமத்தின.
இதற்கு எதிராக ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் மூலம், சங்கு கூட்டணி இன்று உயர்நீதிமன்றத்தில் அடிப்படை மனித உரிமை மீறல் மனு தாக்கல் செய்தது.
க.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியினர் யாழ் மாநகரசபைக்கு தாக்கல் செய்த வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டது.
இதற்கு எதிராக ஜனாதிபதி சட்டத்தரணி ஜெப்ரி அழகரட்ணம் ஊடாக அந்த தரப்பும் இன்று மனுத்தாக்கல் செய்தது.
இந்த வழக்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமை அல்லது அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வரும் என வி.மணிவண்ணன் நம்பிக்கை தெரிவித்தார்.