இஸ்ரேல் – காசா இடையிலான முதல்கட்ட போர் நிறுத்தம் நாளை (1) முடிவுக்கு வர உள்ள நிலையில், அதனை இரண்டாம் கட்டத்துக்கு நீடிக்க பேச்சுவார்த்தை நடத்த ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடர்பாக ஹமாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், எஞ்சியுள்ள அனைத்து இஸ்ரேல் பணயக் கைதிகளையும் விடுவிக்க தயாராக உள்ளதாகவும், இதற்கான இரண்டாம் கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்வதற்கும், காசாவில் நிரந்தர அமைதியை ஏற்படுத்துவதற்கும் தாங்கள் தயார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “இஸ்ரேல் அமைதிக்கான ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டு, அதனை மீறாமல் செயல்பட வேண்டும். ஏனெனில், போர் நிறுத்தத்தை மீறுவதால், பணயக் கைதிகளும் அவர்களின் குடும்பங்களும் மேலும் இன்னலுக்குள்ளாகும்” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இரண்டாம் கட்ட போர் நிறுத்தம் எப்போது நடைமுறைக்கு வரும் என்பது தொடர்பாக அடுத்த சில நாட்களில் சர்வதேச மத்தியஸ்தத்தினரின் உடன்பாட்டுடன் முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.



