பல பெண்களின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியான சம்பவத்தின் சூத்திரதாரி இதுவரை கைது செய்யப்படவில்லையென குற்றம்சாட்டப்படுகிறது.
பலாங்கொட, பின்னவல பகுதிகளை சேர்ந்த இளம் யுவதிகள் பலரது அந்தரங்க வீடியோக்கள் அண்மையில் வெளியாகியிருந்தது. அதில் பாடசாலை மாணவிகளும் உள்ளடங்குகின்றனர். குளிக்கும், உடை மாற்றும் காட்சிகள் அதில் பதிவாகின.
இதன் சூத்திரதாரி அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவர் சில மாதங்களின் முன்னர் அந்த பகுதிக்கு தொழில் தேடி வந்தவர். வாடகைக்கு வீடொன்றை பெற்று குடியிருந்தவர்.
வேலை தேடி வீடுவீடாக சென்ற போது, பலர் வீட்டு வேலைகளிற்கு அவரை பயன்படுத்தினர். மரம் வெட்டுவது, தேங்காய் பறிப்பது, வீட்டை சுத்தம் செய்வது, வீட்டு கூரைகளை சரி செய்வது முதலான பணிகளை கிராமத்தில் செய்து வந்துள்ளார்.
இதன்போது, தனது நவீன கையடக்க தொலைபேசியின் வழியாக கிராமத்திலுள்ள யுவதிகள் குளிப்பது, உடைமாற்றுவது உள்ளிட்ட பல காட்சிகளை படம் பிடித்துள்ளார்.
பின்னர் அவர் திடீரென காணாமல் போனார். இதற்கு ஒரு வாரம் கழித்து, இந்த வீடியோக்கள் யூடியூப்பில் வெளியாகின.
அந்த நபர் வீடியோக்களை கொழும்பிலுள்ள ஒருவருக்கு பணத்திற்கு விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது.
கிராமத்திலுள்ள பல பெண்களின் காட்சிகள் வெளியாகியுள்ளன. இதனால் சில மாணவிகள் பாடசாலை செய்ய முடியாமலும், சில யுவதிகள் வேலைக்கு செல்ல முடியாமலும் வீடுகளில் முடங்கியிருப்பதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
கிராம மக்களால் இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டாலும், இதுவரை குற்றவாளி கைது செய்யப்படவில்லையென குற்றம்சாட்டுகின்றனர்.