நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மாணவர்களின் தேவைகளை முழுமையாக நிறைவேற்றுவதற்காக திட்டமிடப்பட்ட சிறப்பு பாடசாலை உணவுத் திட்டத்தை உடனடியாக அறிமுகப்படுத்த வேண்டும் என திரு. இரவீ ஆனந்தராஜா வலியுறுத்தியுள்ளார்.
“தற்போதைய திட்டம், குன்றிய உடல் உயர வளர்ச்சி (stunting), வயதுக்கேற்ற உடல் எடையுடன் இல்லாமை (wasting), இவற்றால் குறைவான அறிவாற்றல் மேம்பாடு மற்றும் கல்வி முடிவுகளைச் சரியாகச் சந்திக்க முடியாமல் இருப்பவை போன்ற காரணங்களை முழுமையாக ஆராய்ந்து செயற்படுத்தப்படுகிறதா?,” என திரு. இரவீ ஆனந்தராஜா கேள்வி எழுப்பி தனது ஆழமான கரிசனையை தெரிவிக்கிறார்.
இலங்கையில் உள்நாட்டு யுத்தம் நடைபெற்ற காலத்தில், 2003–2009, சிறப்பு பாடசாலை உணவுத் திட்டத்தின் வெற்றியின் அடிப்படையில் இந்தப் பரிந்துரையை முன்வைக்கிறார்.
2003 முதல் 2009 வரை, 15 மாவட்டங்களில் உள்ள (வடக்கு, கிழக்கு, அநுராதபுரம், பொலன்றுவை, மொனராகலை, சுனாமியின் பின்னர் காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை அடங்கலாக) 1,600 பாடசாலைகளில் அண்ணளவாக 4 இலட்சம் மாணவர்களுக்கு ஒவ்வொரு பாடசாலை நாட்களிலும் உணவுகளை வழங்கிய சிறப்பு பாடசாலை உணவுத் திட்டத்தின் வெற்றியை அடிப்படையாகக் கொண்டு, திரு. ஆனந்தராஜா கீழ்காணும் பகுதிகளில் கவனம் செலுத்த வேண்டிய தேவையை வலியுறுத்தியுள்ளார்:
1. குறுகியகால பசியை நீக்குதல் மூலம், மாணவர்களின் வருகை விகிதம் அதிகரிக்கும்.
2. உடல் மற்றும் அறிவாற்றல் ஆரோக்கியம் மேம்பாடு, இது அவர்களின் கற்றல் திறன்களை நேரடியாக மேம்படுத்தும்.
3. கல்வி முடிவுகளில் மேம்பாடு, தேசிய மனித மூலதனத்தின் வளர்ச்சியில் பங்களிப்பை செலுத்த உதவும்
4. சிறுவர்களை வேலைக்கமர்த்தும் செயற்பாடுகள் கணிசமாக குறைவடையும்.
மீண்டும் அமுலாக்க கோரும் சிறப்பு பாடசாலை உணவுத் திட்டத்திற்கு பரிந்துரைகள்:
திரு. இரவீ ஆனந்தராஜா, 5 ஆண்டுகள் செயல்படுத்தக்கூடிய சிறப்பு பாடசாலை உணவுத் திட்டத்தை, முதற்கட்டமாக மாணவர்கள் மேலேகுறிக்கப்பட்ட காரணிகளால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களைக் கொண்ட கல்விவலயங்களில் பாகுபாடின்றி எல்லா மாணவர்களையும் உள்வாங்கவேண்டும் என பரிந்துரை செய்கிறார், இதன் முக்கிய அம்சங்கள்:
•மாணவர்களின் உடல் ஆரோக்கியம் மற்றும் அறிவாற்றல் மேம்பாடுகளை மதிப்பீடு செய்ய கூடிய உயர்ந்த கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு முறைகள்.
•முக்கியமாக பாதிக்கப்பட்ட பகுதிகளை இலக்காகக் கொண்டு செயல்படுவது, இதில் மிகவும் பாதிக்கப்பட்ட மாணவர்கள் பயன் பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.
•திட்டத்தின் தாக்கத்தை மதிப்பீடு செய்யும் சரியான மதிப்பீட்டு செயல்முறைகள்.
“ஒரு உணவுத்திட்டம் என்பது வெறும் உணவுகளை வழங்குவதற்காக மட்டுமல்ல; அது நமது குழந்தைகளின் ஆரோக்கியம், கல்வி, மற்றும் நாட்டின் எதிர்காலத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் முதலீடாகும்,” என அவர் கூறினார்.
பணிவான விண்ணப்பம்:
இலங்கையின் மாணவர்களின் தேவைகளை சந்திக்கத் தகுந்த திட்டத்தை முன்னெடுக்க இலங்கை அரசின் செயல்முறைகள், குறிப்பாக இலங்கை அதிபர், கௌரவ பிரதமர் மற்றும் கல்வி அமைச்சரின் உடனடி தலையீடு தேவைப்படுகிறது என திரு. இரவீ ஆனந்தராஜா வலியுறுத்துகிறார். மேலும், ஐநா உலக உணவுத்திட்டம் (WFP) போன்ற சர்வதேச அமைப்புகள் இந்த முயற்சியை நிதி மற்றும் செயல்பாட்டில் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கோருகிறார்.
What’s your Reaction?
+1
1
+1
+1
+1
+1
+1
+1