சீனாவிற்கு நான்கு நாள் அரசு முறைப் பயணமாகச் சென்றுள்ள ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, நேற்று (15) சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடன் மக்கள் மண்டபத்தில் உத்தியோகபூர்வ சந்திப்பை நடத்தினார்.
ஜனாதிபதி திசாநாயக்க, மக்கள் மண்டபத்திற்கு வருகை தந்ததும், ஜனாதிபதி ஜி ஜின்பிங்கினால் அவர் அன்புடன் வரவேற்கப்பட்டார். வரவேற்பு விழா பெருமெடுப்பில் நடைபெற்றது. இதில் சம்பிரதாய ரீதியான துப்பாக்கிச் சூட்டு வணக்கம் செலுத்தப்பட்டது.
இரு தலைவர்களுக்கும் இடையிலான ஆரம்ப சுமுகமான கலந்துரையாடல்களுக்குப் பிறகு, இருதரப்பு பேச்சுவார்த்தைகள் தொடங்கின. கலந்துரையாடல்களின் போது, புதிய வளர்ச்சி சகாப்தத்தை ஏற்படுத்துவதில் இலங்கையுடன் நெருக்கமாகப் பணியாற்ற சீனா தயாராக இருப்பதாக ஜனாதிபதி ஜி ஜின்பிங் வலியுறுத்தினார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவையும் அவர் நினைவு கூர்ந்தார், பல தசாப்தங்களாக நிலவும் நெருங்கிய நட்பை எடுத்துக்காட்டினார். எதிர்காலத்தில் இலங்கையுடனான ஒத்துழைப்பைத் தொடர சீனாவின் உறுதிப்பாட்டை ஜனாதிபதி ஜி மீண்டும் வலியுறுத்தினார்.
உத்தியோகபூர்வ சந்திப்பின் முடிவில், பொருளாதாரம், சமூக மேம்பாடு மற்றும் தொழில்துறை போன்ற துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பல முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் இரு தரப்பினரும் கையெழுத்திட்டனர்.
வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க உள்ளிட்டோரும் ஜனாதிபதி திசாநாயக்கவுடன் சீனா சென்றிருந்தனர்.