தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான கையெழுத்துப் போராட்டம் இன்று (13.01.2025) திருகோணமலை சிவன் ஆலய முன்றலில் காலை 9 மணியிலிருந்து நடைபெற்று வருகிறது.
இந்த போராட்டத்தை போராளிகள் நலன்புரி சங்கம் முன்னெடுத்து வருகின்றது. இதற்காக திருகோணமலையைச் சேர்ந்த அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மிகுந்த ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனர்.
பொதுமக்களும் இந்நிகழ்வில் ஆவலுடன் பங்கேற்று, தங்கள் கையொப்பத்தை இட்டு, அரசியல் கைதிகளின் விடுதலைக்கான ஆதரவை உறுதிப்படுத்தி வருகின்றனர். இந்த போராட்டம் விசாரணை எனும் பெயரில் நீண்ட காலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளுக்கு துரித தீர்வு அளிக்க அரசாங்கத்தை வலியுறுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகும்.
அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், நீதிமுறை விசாரணைகளை துரிதமாக மேற்கொள்ளப்பட்டு நீதி வழங்கப்பட வேண்டும், கைதிகளின் அடிப்படை மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டும் எனும் முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து இக் கையெழுத்துப்போராட்டம் இடம்பெற்று வருகின்றன.
இந்த போராட்டம் அரசியல் அடக்குமுறைக்கு எதிரான தமிழர்களின் ஒருமித்த குரலாக உருவெடுத்துள்ளது. விசாரணை என்ற பெயரில் நீடிக்கும் இந்த தடுப்புகளுக்கு முடிவுக் கட்டும் நடவடிக்கைகளை அரசாங்கம் விரைவாக மேற்கொள்ள வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.