திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களினால் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நற்பணி இன்றைய தினம் (11.01.2025) கிண்ணியா கோவிலடி கடற்கரையில் நடைபெற்றது. இந்த நிகழ்வு, UNFPA மற்றும் ADT நிறுவனங்களின் அனுசரணையில், கப்சோ [GAFSO] நிறுவனத்தின் கீழ் நடைமுறைக்கான ஒரு சமூக ஒற்றுமை ஊக்குவிக்கும் திட்டமாக நடைபெற்றது.
“எங்கள் கடற்கரைகளை சுத்தம் செய்வதன் மூலம், மரங்கள் நடுவதன் மூலம், கடல் வாழ் உயிரினங்களை பாதுகாப்பதோடு, அனைவருக்கும் பசுமையான மற்றும் ஆரோக்கியமான எதிர்காலம் உருவாக்க உதவுவது” எனும் நோக்கத்தில், இளைஞர்களால் கடற்கரை சுத்தப்படுத்தல் மற்றும் மரம் நடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதன்போது, சுற்றுச்சூழல் சவால்களான கடல் மாசுபாடு மற்றும் காடழிப்பு போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண வழிகள் மற்றும் செயற்பாடுகள் குறித்து கற்கைகளும், ஆராய்ச்சிகளும் நடைபெற்றன. இந்த நடவடிக்கையில், கடல் வாழ் உயிரினங்களை பாதுகாப்பதற்கான முக்கியத்துவம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை தவிர்ப்பதற்கான வழிமுறைகள் வலியுறுத்தப்பட்டிருந்தன.
இந்த நிகழ்வில் கப்சோ [GAFSO] நிறுவனத்தின் திட்டப்பணிப்பாளர் A.J. காமில் இம்டாட் தலைமையிலான குழு, கிண்ணியா நகரசபை செயலாளர் எம். கே. அனீஸ், நகர சபை மேற்பார்வையாளர்கள், ஊழியர்கள் மற்றும் கள உத்தியோகத்தர்கள் K.F. மதீனா, S. சுமன் ஆகியோர் கலந்துகொண்டு இளைஞர்களுடன் பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.