சென்னையில் நாளை (12.01.2025) நடைபெறவுள்ள தமிழ்நாடு அரசின் அயலக தமிழர் தின விழாவில் பங்கேற்பதற்காக இன்று கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட முயன்ற நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் விழாவில் சிறீதரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இருக்கிறார். இந்நிலையில், குற்றப்புலனாய்வு துறையின் மூலம், சிறீதரனுக்கு பயணத் தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிறீதரனின் பழைய கடவுச்சீட்டில் பிழை இருப்பதாகக் கூறி, குடிவரவு குடியகல்வு அதிகாரிகள், அவரின் பயணத்தை தடுத்து நிறுத்த முயன்றதாக கூறப்படுகிறது. அதேவேளை, புதிய கடவுச்சீட்டின் மூலம், இப்போது வரை 4 வெளிநாட்டு பயணங்களை சிறீதரன் மேற்கொண்டிருந்தார் என்பதால், இந்த திடீர் தடை எப்படி ஏற்பட்டது என்பது கேள்விகளை எழுப்பியுள்ளது.
சிறீதரனின் அரசியல் நடவடிக்கைகளையும் முன்னேற்றத்தையும் பொறுக்க முடியாத சில தரப்புகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருக்கலாம் என விமான நிலைய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். மேலும், இத்தகைய தடை நடவடிக்கை, அந்த தரப்பின் கீழ்த்தரமான செயல்பாடுகளையே வெளிப்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.
தற்போதைய அரசியல் சூழ்நிலையில், இதன் பின்னணியில் உள்ளக பிரச்சினைகளும் இருக்கக்கூடும் என சந்தேகம் எழுந்துள்ளது. ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை தடுத்து நிறுத்துவதற்கு சட்டப்படி சில கடைமைகள் இருப்பதை விட, இங்கு அவை முறையாக பின்பற்றப்படாதது குறிப்பிடத்தக்கது.
விமான நிலையத்தில் ஏற்பட்ட இச்சம்பவம் குறித்து, சிறீதரன் உடன் பயணித்த மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கூட விசாரிக்கலாம் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம், அரசியல் மற்றும் சட்டரீதியாக சிக்கலான விவகாரமாக உருவெடுக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்படுகிறது.