இன்று (10.01.2025) மட்டக்களப்பில் “க்ளீன் சிறிலங்கா” திட்டத்தின் செயல்முறைகள் மற்றும் நடைமுறைகள் குறித்து மட்டக்களப்பு மாவட்டத்தின் அரச திணைக்கள உயர் அதிகாரிகளுக்கான தெளிவூட்டல் செயலமர்வு நடைபெற்றது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சமூக ஒழுக்கம், மற்றும் கட்டுப்பாட்டுடன் கூடிய செயல்முறைகள் மூலம் மேம்பட்ட மற்றும் சுத்தமான சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில் ஜனாதிபதி தலைமையில் கடந்த 01ம் திகதி “க்ளீன் சிறிலங்கா” திட்டம் ஆரம்பிக்கப்பட்டு பல்வேறு பகுதிகளில் இதன் செயற்பாடுகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன.
அதனடிப்படையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, ஜனாதிபதி செயலகத்தின் பணிப்பாளர் ஏ. கவிதா தலைமையில் தெளிவூட்டல் நிகழ்வு அமைக்கப்பட்டது.
இச்செயலமர்வு, மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் மாவட்ட அரசாங்க அதிபருமான திருமதி ஜஸ்டினா முரளிதரனின் ஏற்பாட்டில், ஒல்லாந்தர் கோட்டையில் உள்ள பழைய மாவட்ட செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்கள், திருமதி சுதர்சனி ஶ்ரீகாந்த், திருமதி.நவரூபரஞ்ஜினி முகுந்தன் (காணி), உதவி மாவட்ட செயலாளர் ஜீ. பிரணவன், கல்வி, சுகாதாரம், விவசாயம், உள்ளூராட்சி மன்றங்கள் உள்ளிட்ட துறைச் செயலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.
“க்ளீன் சிறிலங்கா” ஒரு தேசிய கலாசார மாற்ற திட்டமாக காணப்படுவதோடு, இது சமூகத்தில் துப்புரவு, ஒழுக்கம், மற்றும் வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இச்செயலமர்வின் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த திட்டம் விரைவாகவும் தகுந்த முறையிலும் செயல்படுத்தப்படுவதற்கான முன்னோடி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.