மட்டக்களப்பின் பாசிக்குடா கடலில் நீராடச் சென்ற 65 வயது ரஷ்ய நாட்டு சுற்றுலா பயணி ஒருவர் இன்று (10) கடல் அலையால் இழுத்துச் செல்லப்பட்டு மூழ்கி உயிரிழந்தார் என கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் ரஷ்ய நாட்டு குடியரசைச் சேர்ந்த கரிசன் ஓ என அடையாளம் காணப்பட்டுள்ளார். இலங்கைக்கு சுற்றுலா வந்த அவர், சம்பவதினத்தன்று காலை பாசிக்குடா கடலில் நீராடியபோது திடீரென கடலலைகளால் இழுத்துச் செல்லப்பட்டார்.
இந்த அனர்த்தத்தைப் பார்த்த அங்கிருந்த கடற்படையினர் உடனடியாக செயல்பட்டு அவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்த பின்னர் அவரை அருகிலுள்ள வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
வைத்தியசாலையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் உயிரிழந்துள்ளதாக அறிவித்தனர். அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.