தமிழ் அமுதம் கலை வட்டத்தின் ஏற்பாட்டில் திருமலை மதிவதனி அவர்களின் நான்கு நூல்களின் அறிமுக நிகழ்வு திருகோணமலை பொது நூலக மண்டபத்தில் நேற்று முன்தினம் (29) காலை 9.30 மணி அளவில் இடம்பெற்றது.
மூன்று சிறுவர் இலக்கியமுடன் ஒரு மொழிபெயர்ப்பு நூல் எனும் நான்கு நூல்களின் அறிமுக விழாவாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்விற்கு அழைப்பாளர்களாக, திரு. க. யோகானந்தன் (இலக்கிய ஆளுமை) அவர்களும், திரு. ந. வசந்தகுமார் (தி/தி குச்சவெளி வி.ம.வி அதிபர்) அவர்களும், திருமதி அ. ஜெயனேசன் (தி/தி சண்முகா இந்து மகளிர் கல்லூரி ஆசிரியர்) அவர்களும், செல்வி. ந. ரோகினிதேவி (கலைவாணி முன்பள்ளி தலைமை நிர்வாகி) அவர்களும், திருமதி பி. சுதர்சன் (ஜீனியஸ் முன்பள்ளி தலைமை நிர்வாகி) அவர்களும், திருமதி நா. சுமதி (செம்மொழி கலா மன்ற செயலாளர்) அவர்களும் வருகை தந்திருந்தனர்.
தமிழ் அமுதம் கலை வட்டத்தின் தலைவர் சம்பூரணி அவர்களின் தலைமையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இந்நூல் வெளியீட்டு நிகழ்வில், அகவணக்கம், தமிழ்த்தாய் வாழ்த்து, மங்கல விளக்கேற்றல் என சம்பிரதாயபூர்வமாக நிகழ்வுகள் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந் நிகழ்வினை தமிழ் அமுதம் கலை வட்டத்தின் செயலாளர் திரு அ.டனுர்சன்(திரியாயூரன்) அவர்கள் தொகுத்திருந்தார். மேலும், வரவேற்புரையினை செல்வி யுதேசிகா (தமிழ் அமுதம் கலைவட்டம்) அவர்களும், வரவேற்பு நடனத்தை செல்வி.ரீ.ரிலக்சி அவர்களும் தலையுரையினை தமிழ் அமுதம் கலைவட்ட தலைவர் சம்பூரணி வழங்கியிருந்தனர்.
தமிழ் அமுதம் கலைவட்ட தலைவரின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சற்று வித்தியாசமாக, விழா ஏற்பாட்டு குழுவினரால் சிறுவர் இலக்கிய நூல்கள் என்பதனை கருத்தில் கொண்டும் சிறுவர்களை கெளரவிக்கும் வகையிலும் நூலாசிரியரின் அவதானிப்புடன் நிகழ்விற்கு வருகை தந்திருந்த சிறுவர்களின் கரங்களினாலேயே இந் நூல்கள் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். தொடர்ந்து, அதன் முதற்பிரதியினை காலபூஷணம் கிண்ணியா சபீனா அவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.