26.8 C
Jaffna
December 13, 2024
Pagetamil
தமிழ் சங்கதி முக்கியச் செய்திகள்

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர்கள் ஒதுங்கி, புதியவர்களுக்கு வழிவிட யோசனை: புதிய அணிகள் இணைய பேச்சு!

கடந்த பொதுத்தேர்தலில் ஏற்பட்ட பெரும் சறுக்கலை தொடர்ந்து, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கட்டமைப்பு ரீதியில் பெரும் மாற்றங்களை செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த பொதுத் தேர்தலில் சங்கு சின்னத்தில் போட்டியிட்ட  ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினர் ஒரேயொரு நாடாளுமன்ற ஆசனத்தையே வென்றிருந்தனர். தமது கூட்டணியில் 5 கட்சிகள் அங்கம் வகிப்பதாக அவர்கள் கூறியிருந்தாலும், அவற்றில் பல வெறும் லெட்டர் ஹெட் கட்சிகள் மட்டுமே. ஒரு நூறு வாக்குகளையே திரட்ட முடியாதவை.

இந்த கட்சிகளை கூட்டணியில் வைத்திருந்து, தேர்தல் அரசியலில் நீடிக்க முடியாது என்பதை, அந்த கூட்டணியிலுள்ள பிரதான தரப்புக்கள் உணர்ந்துள்ளன. இதனால், எதிர்வரும் தேர்தல்களில் புதிய கட்டமைப்புடன் களமிறங்க வேண்டுமென தீவிரமாக செயற்பட ஆரம்பித்துள்ளன.

சங்கு கூட்டணியிலுள்ள என்.சிறிகாந்தா தலைமையிலான தமிழ் தேசிய கட்சியும், ஜனநாயக போராளிகள் கட்சியும் பெயரளவிலான கட்சிகள். கடந்த பொதுத்தேர்தலில் அந்த கட்சிகளுக்கும், ஈ.பி.ஆர்.எல்.எவ் தரப்பினருக்கும் சம அளவில் ஆசனப்பங்கீட்டை மேற்கொண்டு தவறிழைத்ததே ரெலோ, புளொட் செய்த பெரும் தவறு.

கையை சுட்டுக்கொண்ட பின்னர், இந்த தவறுகளை திருத்த சங்கு அணி முயற்சிக்கிறது. தற்போது ஜனநாயக போராளிகளையும், தமிழ் தேசிய கட்சியையும் பிரதான பங்காளிகளாக கொள்ளாமல் இருப்பதென அந்த கட்சிகள் தீர்மானித்துள்ளன. அந்த கட்சிகளின் நிலைமைக்கு ஏற்ப மாத்திரமே ஆசன ஒதுக்கீடு மேற்கொள்வதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன் அர்த்தம்- எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் அந்த தரப்பினரால் முன்வைக்கப்படும் வேட்பாளர் பட்டியல் பரிசீலிக்கப்பட்டு, பொருத்தமானவர்கள் மட்டுமே கூட்டணியின் பட்டியலில் இணைக்கப்படுவார்கள். அனேகமான சபைகளில் இந்த தரப்பினருக்கு ஒதுக்கீடு இருக்காது.

மூத்த தலைவர்கள் ஒதுங்கல்

இனிமேல் தேர்தல் அரசியலிலும், தீவிர அரசியலிலும் இருக்க மாட்டேன்- கட்சியை புதிய தலைமுறையினரிடம் கையளிக்கவுள்ளேன் என, புளொட் தலைவர் த.சித்தார்த்தன், தனது கட்சி மட்டத்தில் அறிவித்து விட்டார்.

ஈ.பி.ஆர்.எல்.எவ் செயலாளர் சிவசக்தி ஆனந்தனும், இதேபோன்ற நிலைப்பாட்டை கட்சிக்குள் அறிவித்துள்ளார்.

இனிமேல் தேர்தலில் போட்டியிடுவதில்லையென ரெலோவின் பொதுச் செயலாளர் கோவிந்தன் கருணாகரமும் அறிவித்துள்ளார்.

ஆனால், சங்கு கூட்டணியில் உள்ள பெரும்பாலான- நீண்டகால தலைவர்கள் இப்படியான முடிவுக்கு வரவில்லை. தொடர்ந்து தேர்தல்களில் போட்டியிடவும், கட்சியை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கவும் விரும்புகிறார்கள்.

புதிய கூட்டணி முயற்சி

சங்கு அணியில் புதிய கட்சிகளை இணைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், பழைய முகங்கள் கட்சி ஆதிக்கத்தை தக்க வைத்திருக்கும் நிலையில்- புதியவர்கள் கூட்டணியில் இணைய தயக்கம் காட்டுகிறார்கள்.

தற்போதைய நிலையில்- மு.சந்திரகுமார் தலைமையிலான சமத்துவக்கட்சி, தமிழ் மக்கள் கூட்டணியில் அதிருப்தியில் உள்ள வி.மணிவண்ணன் தரப்பு, ஜனநாயக தமிழரசு கூட்டணியாக செயற்படும் ஈ.சரவணபவன் தரப்பு, பொ.ஐங்கரநேசன் தரப்பு ஆகியன சங்கு அணியில் இணையும் பேச்சில் ஈடுபட்டுள்ளன.

ஆனால், பழைய முகங்கள் நீடிப்பதை அவர்கள் விரும்பவில்லை. ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்டமைப்பை முற்றாக மாற்ற வேண்டுமென அவர்கள் கோருகிறார்கள். மூத்த தலைவர்கள் அனைவரும் ஒதுங்கி, கட்சிகளின் இரண்டாம் மட்ட தலைவர்கள் பொறுப்பேற்று- புதிய சக்தியாக செயற்பட வேண்டுமென அவர்கள் விரும்புகிறார்கள்.

ரெலோ, புளொட்டில் உள்ள இரண்டாம் மட்ட தலைவர்களும் அதை வரவேற்று, புதிய அணியாக களமிறங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களாக இது தொடர்பான சந்திப்புக்கள் யாழ்ப்பாணத்தில் தீவிரமாக நடந்தது. புளொட்டின் இரண்டாம் கட்ட தலைவரான பா.கஜதீபன், வி.மணிவண்ணன், ஈ.சரவணபவன், சுரேன் குருசாமி தரப்பினர் கடந்த சில நாட்களாக தனித்தனி சந்திப்புக்களில் ஈடுபட்டனர்.

ஈ.சரவணபவனையும், மு.சந்திரகுமாரையும் இணைத்தால், தான் நாடளுமன்ற உறுப்பினராக முடியாது என்பதால்- அவர்களை இணைப்பதை எதிர்த்த சுரேன் குருசாமி- தற்போது அந்த தரப்பினரை இணைப்பதில் ரெலோவுக்கு ஆட்சேபணையில்லையென தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழ் அரசு கட்சியுடன் கூட்டணி பேச்சுக்கள் சரிவராத நிலையில்- விக்னேஸ்வரனுடனும் முரண்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து- இந்த அணியில் இணைய வேண்டும் அல்லது விக்னேஸ்வரனிடம் மன்னிப்பு கேட்டு சரணடைய வேண்டுமென்ற நெருக்கடியில் வி.மணிவண்ணன் தரப்பு உள்ளது. ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் இணைவதெனில், அந்த கூட்டணியின் செயலாளர் பதவியை தனக்கு வழங்க வேண்டுமென ஆரம்பத்தில் வற்புறுத்திய மணிவண்ணன், தற்போது அப்படியொரு நிபந்தனை விதிக்கவில்லை. பொருத்தமான கட்டமைப்பு மாற்றம் செய்தால் சரியென குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த வாரம் பூகம்பம்

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் கட்சித் தலைவர்களின் கூட்டம் அடுத்த வாரமளவில் நடைபெறவுள்ளது. இதில், புதிய கட்டமைப்பு மாற்றங்கள் பற்றிய யோசனைகள் முன்வைக்கப்படவுள்ளன. சங்கு அணியின் தற்போதைய பிரதானிகள் அனைவரும் ஒதுங்கி, புதியவர்கள்- இளையவர்கள் தலைமையேற்க வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்படவுள்ளது.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் செயலாளர், ரெலோ தரப்பினர் இந்த பிரேரணையை முன்வைக்கலமென தெரிகிறது.

ரெலோ தரப்பினர் இந்த பிரேரணையை முன்வைப்பது- ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் தேசிய கட்சிகளை குறிவைத்ததாக இருக்கலாம். ஆனால், ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் புதியவர்களிடம் தலைமையை கையளிப்பாரா என்ற கேள்வியுள்ளது. சங்கு அணியில் வெற்றிபெற்ற ஒரே கட்சித் தலைவர் என்ற ரீதியில் விதிவிலக்கை எதிர்பார்க்கலாம். புளொட் தலைமை மாற்றத்துக்கு தயாராக உள்ளது. எனினும், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் தேசிய கட்சியென்பனவற்றின் தலைவர்கள் ஒதுங்கி வழிவிடுவார்களா என்பதே இப்போதுள்ள மிகப்பெரிய கேள்வி.

ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் தேசிய கட்சி, ஜனநாயக போராளிகள் கட்சியென்பன எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால் இரண்டாம் நிலை- புதிய தலைமுறை  இல்லாமை. ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் புதிய தலைமுறையென்பது- சுரேஸ் பிரேமச்சந்திரனின் தம்பி சர்வேஸ்வரன். சிறிகாந்தா தரப்பின் புதிய தலைமுறையென்பது- எம்.கே.சிவாஜிலிங்கம். (சிறிகாந்தா தரப்பில் கடந்த தேர்தல்களில் சில இளைஞர்களை களமிறங்கினாலும் அவர்கள் கற்றுக்குட்டிகள்- உள்ளூராட்சி தேர்தலில் வட்டாரத்திலும் வெற்றிபெறாதவர்கள்) இந்த பின்னணியில், மேற்படி கட்சிகளின் மாற்றத்தை- புதுவடிவம் பெற எத்தனிக்கும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சகித்து ஏற்றுக்கொள்ளுமா என்பதும் பெரிய கேள்வி.

ஏனெனில், கட்டமைப்பு மாற்றம் நிகழ்ந்தால் மாத்திரமே அரசியல் எதிர்காலம் உள்ளதை உணர்ந்துள்ள ரெலோ, புளொட் மற்றும் புதிய தரப்புக்கள்- முழு வீச்சில் கட்டமைப்பு மாற்றத்தை நிகழ்த்துவது அல்லது- புதிய தரப்பாக செயற்படுவதென தீர்மானித்து, செயற்பட்டு வருகின்றன. எதிர்பார்க்கப்படும் மாற்றத்துடன் ஒத்துழைக்காத தரப்புக்களுடன் முரண்படாமல்- அவர்களை தவிர்த்து விட்டு செயற்படுவதென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முற்றிலும் புதிய இரத்தம் பாய்ச்சி- புதிய நம்பிக்கையுடன் களமிறங்கும்- ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினரின் புதிய முயற்சி வெற்றியளிக்குமா என்பது அடுத்தடுத்த வாரங்களில் தெரிந்து விடும்.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
2

இதையும் படியுங்கள்

யாழில் தொடர் உயிரிழப்புக்களுக்கு எலிக்காய்ச்சலே காரணம்: பரிசோதனையில் உறுதியானது!

Pagetamil

சிரியா முன்னாள் ஜனாதிபதி அசாத் பற்றிய மர்மம் விலகியது: ரஷ்யா புகலிடம் அளித்துள்ளது!

Pagetamil

சிரியா தலைநகரும் கிளர்ச்சியாளர்களிடம் வீழ்ந்தது: அசாத் குடும்பத்தின் 50 ஆண்டுகால ஆட்சி முடிந்தது!

Pagetamil

திருத்தப்பட்ட அரசி விலைகள் அறிவிப்பு!

Pagetamil

இலங்கை தமிழ் அரசு கட்சியுடன் கூட்டணிப் பேச்சு… விந்தன் கட்சியிலிருந்து இடைநிறுத்தம்: ரெலோ தலைமைக்குழு தீர்மானம்!

Pagetamil

Leave a Comment