நாட்டின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக, திருகோணமலை மாவட்டத்தின் மிகப் பெரிய நீர்த்தேக்கமான கந்தளாய் குளத்தின் 04 வான் கதவுகள் இன்று (18.12.2024) திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கந்தளாய் குளத்தின் அதிகபட்ச கொள்ளளவு ஏக்கருக்கு 1,14,000 அடியாக காணப்படுவதாகவும், தற்போது திறக்கப்பட்டுள்ள நான்கு வான் கதவுகள் மூலம், வினாடிக்கு 700 கனஅடி அளவு நீர் வெளியேற்றப்படுவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
நீர் மேலாண்மை மற்றும் விவசாய நிலங்களை பாதுகாக்கும் நடவடிக்கையாகவே இந்த நீர் வெளியேற்றம் மேற்கொள்ளப்படுவதாக பிராந்திய நீர்ப்பாசன பொறியியலாளர் எஸ்.ஏ.சீ.எஸ் சுரவீர தெரிவித்தார். புவியியல் மாற்றங்கள் மற்றும் தொடர்ச்சியான மழையால் ஏற்படும் நீர் நிரம்புதலை கட்டுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட முன்கூட்டிய ஆயத்த நடவடிக்கையாக இதை அவர் தெரிவித்துள்ளார்.
வான் கதவுகளை திறப்பதன் மூலம், நீர் மேலதிகமாக சேகரிக்காமல் வெள்ள அபாயங்களை தடுக்க முடியும் என்றும் குறிப்பிடப்பட்டது. விவசாய நிலங்களை பாதுகாத்தல், நீரின் வெளிச்செல்லலால் ஏற்படும் பாதிப்பை குறைத்தல், எதிர்கால நீர் தேவைகளுக்கான நிலையான மேலாண்மையை நோக்காகக் கொண்டு இத் திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
நீர்தேக்கத்தின் அருகிலுள்ள மக்கள் மற்றும் விவசாயிகள், தாழ்வான பகுதிகளில் நீரின் வேகமான வெளியேற்றம் காரணமாக ஏற்படும் சவால்களை கண்காணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அருகிலுள்ள பகுதிகளில் இயல்பான வாழ்க்கையை மேற்கொள்ள தடை ஏதும் இல்லாவிடினும், நீரின் மட்டம் மற்றும் ஓட்டத்தின் மீது தொடர்ந்து கண்காணிப்பு வைக்கப்படுவதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.