கடந்த காலங்களில் வேலைநிறுத்தங்களை ஏற்பாடு செய்தவர்கள் தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்திருந்ததால் தற்போது நாட்டில் வேலை நிறுத்தங்கள் இல்லை என முன்னாள் அமைச்சரும் காலி மாவட்ட தேசிய ஜனநாயக முன்னணியின் நாடாளுமன்றத் தேர்தலின் வேட்பாளருமான மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
காலியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், ஜனாதிபதி தேர்தலின் போது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இதுவரை நிறைவேற்றவில்லை. “போராட்டங்களையும் தொழிலாளர் அமைதியின்மையையும் ஏற்பாடு செய்தவர்கள் இன்று தேசிய மக்கள் சக்தியின் கீழ் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுகின்றனர். இந்நாட்டின் அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளையும் எதிர்த்தவர்கள் இன்று ஆளும் கட்சியில் இருக்கின்றார்கள்.
பாஸ்போர்ட் பிரச்சினைக்கு இதுவரை அரசு தீர்வு காணவில்லை.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டெடுத்துள்ளார் என தெரிவித்த அவர், எதிர்காலத்தில் ஏற்படும் பொருளாதார அதிர்ச்சிகளை தேசிய மக்கள் சக்தி எவ்வாறு கையாளும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
காஸ் சிலிண்டர் சின்னத்தில் தேர்தலில் போட்டியிடும் திறமையான மற்றும் அனுபவம் வாய்ந்த அணியை கொண்டுள்ளது என்றும், திறமையும் அனுபவமும் உள்ளவர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்ப கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் நாணயக்கார கூறினார்.