களனிப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீட மாணவர் ஒருவர் நேற்று (23) அதிகாலை 3:30 மணியளவில் களனி, பொல்ஹேனி கன்னங்கரா விடுதியின் நான்காவது மாடியின் கூரையிலிருந்து தவறி விழுந்து பலத்த காயங்களுடன் உயிரிழந்துள்ளார்.
பிரின்ஸ் ராஜு பண்டார, களனிப் பல்கலைக்கழகத்தின் வர்த்தக மற்றும் முகாமைத்துவ பீடத்தின் நான்காம் ஆண்டில் கணக்கியல் பிரிவில் கல்வி கற்கும் மாணவன் என்பதுடன் மாணவர்கள் மத்தியில் சண்டா என அறியப்பட்டவர்.
கடந்த 22ஆம் திகதி இரவு விடுதியில் மாணவர்களுடன் விருந்து நடைபெற்றதாகவும் அதில் உயிரிழந்த மாணவனும் கலந்து கொண்டு தனது நண்பர்களுடன் சாப்பிட்டு மகிழ்ந்து 12:30 மணியளவில் தனது அறைக்கு திரும்பியதாகவும் கூறப்படுகிறது.
அவர் மீண்டும் அதிகாலை மூன்று மணியளவில் எழுந்து, தங்குமிடத்தின் ஜன்னலுக்கு வெளியே காலை வைத்து, அதில் உட்கார முற்பட்டு, தரையில் விழுந்துவிட்டதாக இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேல் மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த இளைஞரின் தலையில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக விபத்து குறித்து விசாரணை நடத்திய பொலிஸார் தெரிவித்தனர். சடலம் கிரிபத்கொட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்த மாணவனின் உறவினர்கள் சடலத்தை அடையாளம் காண வந்துள்ளதுடன், பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரிபத்கொட மற்றும் பேலியகொட பொலிஸார் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.