சட்டவிரோதமான முறையில் சொகுசு காரை பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ எதிர்வரும் ஒக்டோபர் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த வாகனம் தொடர்பில் வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஆஜராகியதன் பின்னர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளார்.
சமீபத்தில் கொழும்பில் உள்ள ஹில்டன் ஹோட்டலில் நிறுத்தப்பட்டிருந்த போது பொலிசாரால் கைப்பற்றப்பட்ட BMW கார், சட்டவிரோதமான முறையில் அசெம்பிள் செய்யப்பட்டதாக குறிப்பிட்டு CID விசாரணை மேற்கொண்டது.
ஹோட்டல் வாகன நிறுத்துமிடத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் சொகுசு வாகனம் ஒன்று நிறுத்தப்பட்டிருப்பதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். WP C 24-0430 என்ற இலக்கத் தகடு கொண்ட கறுப்பு நிற BMW, ஜனாதிபதித் தேர்தலுக்கு ஒரு நாள் முன்னதாக, காமினி அபேரத்ன என்ற நபரால் நிறுத்தப்பட்டதாக ஹோட்டல் நிர்வாகிகள் தெரிவித்திருந்தனர்.
அப்போது நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, காமினி அபேரத்ன, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு சொந்தமான வாகனம் என்றும், வாகனம் பின்னர் எடுக்கப்படும் என்று கூறி சாரதியால் விடப்பட்டதாகவும் உறுதிப்படுத்தினார். சோதனையில் சிஐடி அதிகாரிகள் BMW க்குள் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு சொந்தமான பல ஆவணங்களை கண்டுபிடித்தனர், ஆனால் வாகனத்தின் பதிவு தொடர்பான ஆவணங்கள் எதுவும் கிடைக்கவில்லை.
வாகனத்தின் இயந்திர இலக்கத்தை மோட்டார் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட குறுக்கு விசாரணையில் நாவலவில் உள்ள தனியார் நிறுவனமொன்றின் பெயரில் இலக்கத் தகடு பதிவு செய்யப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. நிறுவனத்தின் உரிமையாளரிடம் நடத்திய விசாரணையில், வாகனத்தின் இலக்கத் தகட்டை இந்த வருடம் மார்ச் மாதம் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஊடாக பதிவு செய்திருந்ததாகவும், ஆனால் அது நிறுவனத்திற்கு சொந்தமான வானொலி நிலையத்தில் வாகனம் நிறுத்தப்பட்டிருந்த போது திருடப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
BMW இன் சேஸ் இலக்கமான WBA5E52010G115194 ஐ இலங்கை சுங்கப் பிரிவினர் பரிசோதித்ததில், மேற்படி சேஸ்ஸுடன் கூடிய வாகனம் சட்டப்பூர்வமாக இலங்கைக்குக் கொண்டுவரப்படவில்லை என்பதைக் கண்டறிந்துள்ளது. குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளின் கோரிக்கையின் அடிப்படையில், அரசாங்கப் பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் அதிகாரிகள் வாகனத்தை சோதனையிட்டதன் பின்னர், BMW சட்டவிரோதமான முறையில் அசெம்பிள் செய்யப்பட்டது தெரியவந்தது.