“நான் சினிமாவுக்கு வந்து 21 வருடம் ஆனது பற்றி பேசி என்னை வயதான ஆள் போல காட்டி விட வேண்டாம். என்னுடைய முதல் பத்து வருடங்களில் நான் கொஞ்சம் பரிசோதனை முயற்சிகளான படங்களை நிறைய பண்ணினேன்” என நடிகர் ஜீவா பகிர்ந்துள்ளார்.
ஜீவா, பிரியா பவானி சங்கர் நடித்துள்ள ‘பிளாக்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ஜீவா, “இந்த படத்தின் கதையை என்னிடம் சொன்னபோது உடனே பிடித்து விட்டது. காரணம் பல ஹீரோக்களிடம் சொல்லி அதில் சின்ன சின்ன மாறுதல்களை அழகாக செய்து என்னிடம் வரும்போது ஒரு முழுமையான கதையாக வந்திருக்கிறது என்று நினைக்கிறேன். அதனால் இதில் எந்த திருத்தமோ மாறுதலோ சொல்ல வேண்டிய தேவை ஏற்படவில்லை. இது ஒரு மைண்ட் ட்விஸ்ட்டிங் ஆன கதை.
வலது மூளை இடது மூளை என இந்த படத்தில் சொல்வதைப் பார்க்கும்போது மக்களுக்கு அவர்களது மூன்றாவது கண்ணே திறந்து விடும் என நினைக்கிறேன். குறிப்பாக இளைஞர்களை இந்தப் படம் ரொம்பவே கவர்வதுடன் அவர்களது மூளைக்கும் வேலை வைக்கும். இதை சைக்காலஜிக்கல் திரில்லர் என சொல்லலாம். ஒரு கட்டத்தில் இது ஹாரர் படமோ என்கிற சந்தேகம் கூட படம் பார்ப்பவர்களுக்கு தோணும்.
விவேக் பிரசன்னாவின் காட்சிகள் தான் இந்த படத்தில் ரொம்பவே முக்கியமானவை. படம் பற்றி ரசிகர்களுக்கு எழும் கேள்விகளுக்கான விடைகள் அவரது கதாபாத்திரத்தில் தான் இருக்கின்றன. இது ஒரு ஆங்கில படத்தின் ரீமேக் என்றார்கள். ஆனால் அந்த படத்தை நான் இதுவரை பார்க்கவில்லை. காரணம் அதை பார்த்துவிட்டு இன்னும் ஏதாவது இம்ப்ரூவ் பண்ணுவோம் என நினைத்து தேவையில்லாமல் எதுவும் பண்ணி விடக்கூடாது என்பதால் தான். இந்த படம் பெரும்பாலும் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களிலும் இரவு நேர படப்பிடிப்பாகத்தான் நடத்தினோம்.
நான் சினிமாவுக்கு வந்து 21 வருடம் ஆனது பற்றி பேசி என்னை வயதான ஆள் போல காட்டி விட வேண்டாம். என்னுடைய முதல் பத்து வருடங்களில் நான் கொஞ்சம் பரிசோதனை முயற்சிகளான படங்களை நிறைய பண்ணினேன். அந்த வகையில் அடுத்து வர இருக்கும் எனது படங்களில் இது ஒரு புதுமையான படமாக இருக்கும். பொதுவாகவே நான் திரில்லர் படங்களின் ரசிகன். என்னை பேட்டி எடுத்த காலத்திலிருந்தே பிரியா பவானி சங்கரை தெரியும். படப்பிடிப்பு தளத்தில் கூட இந்த வசனத்தை எப்படி பேசுவது என இயக்குநருடன் சண்டை போட்டுக் கொண்டிருப்பார். அவருடன் பணியாற்றியது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது” என்று கூறினார்.