அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாகியதில் சிறுபான்மையின கட்சிகள் வெளிப்படையாக பங்களிக்கவில்லை. ஆனால், அனுர தரப்பு நீண்டகாலமாக எதிர்க்கட்சி வரிசையில் இருந்து, முக்கிய தமிழ்- முஸ்லிம் கட்சிகளுடன் நெருக்கமான உறவை வளர்த்து வைத்துள்ளது.
கோட்டா ஜனாதிபதியானதில் சிறுபான்மையினங்கள் பங்களிக்கவில்லையென்பதால், அவர் சிங்களவர்களின் ஜனாதிபதியாகவே செயற்பட்டார். அப்போது கோட்டாவுக்கு ஆதரவளித்த ஈ.பி.டி.பி, பிள்ளையான் குழு போன்றவை, கோட்டாவின் முன் நின்று மூச்சுவிடவே திராணியில்லாமல் காலத்தை கழித்துக் கொண்டிருந்தார்கள்.
ஆனால், அனுரவின் காலம் அப்படியிருக்காது என நம்பலாம். அனுரவின் அண்மைய கடந்தகாலத்தை நுணுக்கமாக அவதானிப்பவர்கள், இப்படியொரு தீர்மானத்துக்கு துணிந்து வரலாம்.
அதை உறுதிசெய்வதை போல, தற்போது சம்பவமொன்று நடந்துள்ளது.
வடக்கு ஆளுனர் சார்ள்ஸ் மூட்டை கட்டிவிட்டார். அவர் மீது நிறைய முறைப்பாடுகள் உள்ளன. மாவட்ட அரசாங்க அதிபராக இருந்த போதே, ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான பெரிய கோப்புக்களை கொண்டிருந்தவர். அவரது எதிர்காலம் எப்படியிருக்குமென பொறுத்திருந்து பார்ப்போம்.
விடயம் அதுவல்ல.
சார்ள்ஸ் மூட்டை கட்டியதும், இலங்கை தமிழ் அரசு கட்சியின் ஒரு அணி, அனுரவின் கதவை தட்டியுள்ளது. வடக்கு ஆளுனராக, முன்னாள் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகனை நியமியுங்கள் என கோரியுள்ளது.
அத்துடன், வடக்கிலுள்ள 5 மாவட்டங்களின் அரசாங்க அதிபர்களுடனும் பேசி, அவர்களும் இந்த நியமனத்தினால் திருப்தியடைகிறார்கள் என்ற விபரத்தையும் அனுரவிடம் கூறியுள்ளனர்.
முன்னாள் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன், கடந்த நல்லாட்சி காலத்தில், யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக இருந்த போது, எம்.ஏ.சுமந்திரனின் செல்லப்பிள்ளையாக இருக்கிறார் என அப்போதைய யாழ் மாவட்ட எம்.பிக்கள் பலர், அப்போதைய பிரதமர் ரணிலிடம் நேரடியாகவே முறையிட்டுமுள்ளனர். யாழ் மாவட்டத்தில் ஏனைய எம்.பிக்களிற்கான ஒதுக்கீடுகளை வெட்டிக்கொத்தி, தடுத்து, சுமந்திரனுக்காக பணியாற்றினார் என்ற பெரிய குற்றச்சாட்டு உள்ளது. நல்லாட்சி காலத்தில் அப்போதைய யாழ் எம்.பியொருவர் அப்போதைய அமைச்சர் ஒருவருடன் பேசி, சுன்னாகம் தபால் நிலைய அபிவிருத்திக்கு பணம் ஒதுக்கிய போது, அதில் வேதநாயகன் தலையிட்டு, குளறுபடிகள் செய்து, அந்த நிதியை தடுக்க முனைந்ததாக அப்போது செய்திகளும் வெளியாகியிருந்தன.
ஊழல், அதிகார துஸ்பிரயோகத்துக்கு எதிரான மக்கள் அலையில் ஜனாதிபதியான அனுரகுமார, வடக்கு ஆளுனராக யாரை நியமிக்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.