தமிழ் நாட்டில் 10 ஆண்டுகளின் பின்னர் மீண்டும் உதயசூரியன் உதித்தமை தமிழ் பேசும் நல்லுலகில் மக்கள் அனைவருக்கும் பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது. அதேபோல இலங்கையிலும் விரைவில் உதயசூரியன் (தமிழர் விடுதலைக் கூட்டணி) மலரும் என தெரிவித்துள்ளார் தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி.
தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணி வெற்றிபெற்றதையடுத்து, மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்கிறார். அவருக்கு ஆனந்தசங்கரி அனுப்பி வைத்துள்ள வாழ்த்து செய்தியியே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் அனுப்பி வைத்துள்ள வாழ்த்து செய்தியில்,
தி.மு.க.ஆட்சியில் 10 ஆண்டுகளின் பின் மீண்டும் உதயசூரியன் உதித்தமை தமிழ் பேசும் நல்லுலகில் மக்கள் அனைவருக்கும் பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது. நீங்கள் அடைந்த வெற்றி தமிழர்களுக்கு பெரும் திருப்தியை தந்ததோடு, தங்கள் தந்தை இன்று இல்லாதது வருத்தத்திற்குரியதாகும். இச் சந்தர்ப்பத்தில் நீங்கள் இளைஞனாக இருந்த காலத்தில் நடந்த ஒரு சம்பவம் சரித்திர முக்கியத்துவம் பெற்றமையால் இங்கே குறிப்பிட விரும்புகின்றேன்.
ஏறக்குறைய 42 ஆண்டுகளுக்கு மேல் தங்கள் தந்தையார் வகித்து வந்த இதே பதவியை நியாயமற்ற முறையில் அன்றைய அரசு கலைந்த போது சீறியெழுந்த இலங்கை தமிழர் தலைவர் ஜீ.ஜீ.பொன்னம்பலம் அவர்கள் தமிழ் நாட்டிற்கு வந்து நீதி கேட்டு வாதாடி வென்ற வழக்கு நடைபெற்ற போது அன்று இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த நான் அன்றைய வெற்றியில் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைந்தேன்.
ஆகவே இன்று நீங்கள் ஈட்டியுள்ள வெற்றி எனக்கு பல மடங்கு மகிழ்ச்சியை தருகிறது. இனப்பிரச்சனை தீர்விற்கு தங்கள் தந்தையார் கலைஞர் ஐயா அவர்களின் உதவியை பெறும்படி அன்றைய அரசை வேண்டியிருந்தேன். எமது நாட்டுப்பிரச்சனை தீர உங்களின் பங்களிப்பு மிக முக்கியமானது மட்டுமல்ல அவசியமானது என்றும் ஞாபகமூட்டி உங்கள் தந்தையார் ஆற்றிய பணியை எமது விடயத்திலும் நீங்கள் தொடர வேண்டும் என வேண்டி இலங்கை வாழ் தமிழ் மக்களின் சார்பில் எமது மகிழ்ச்சியையும் வாழ்த்தையும் தெரிவிக்கின்றேன். உங்கள் பணி நீண்ட காலம் தொடர வேண்டும். என ஆண்டவனை பிரார்த்திக்கின்றேன்.
எம் நாட்டிலும் விரைவில் சூரியன் உதிக்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். என தெரிவிக்கப்பட்டுள்ளது.