வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் தொடர்பில் போலியான தகவலை பரப்பி, பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக செயற்பட்ட தம்பிராசாவை விளக்கமறியலில் வைக்க சாவகச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டது.
அத்துடன், ரியூப் தமிழ் இணையகுழுவை சேர்ந்த இருவரை பிணையில் விடுவித்து உத்தரவிட்டது.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டிருந்த இராமநாதன் அர்ச்சுனா, நேற்று சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு வந்திருந்தார்.
அவர் தனது பேஸ்புக் மற்றும் தொலைபேசியை செயலிழக்க செய்து விட்டு உறக்கத்துக்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில், அடக்குமுறைக்கு எதிரான அமைப்பின் தலைவர் மு.தம்பிராசா ஒரு புரளியை கிளப்பியுள்ளார். அர்ச்சுனா ஆதரவு தரப்புக்கு தொலைபேசியில் அழைப்பேற்படுத்தி, அர்ச்சுனாவுக்கு ஏதோ ஆபத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன், ரியூப் தமிழ் ஊடகத்தினருக்கும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
பின்னர், தம்பிராசா தனது பேஸ்புக்கில் லைவ் வீடியோவும் வெளியிட்டார். அர்ச்சுனா ஆபத்தில் உள்ளதாகவும், அவர் தற்கொலை செய்தாரா என்ற ரீதியிலும் அந்த வீடியோவில் குறிப்பிட்டிருந்தார்.
அத்துடன், 119 என்ற பொலிஸ் அவசர இலக்கத்துக்கும் இந்த விடயத்தை அறிவித்தார்.
இதையடுத்து, அர்ச்சுனாவின் குழுவை சேர்ந்த சிலர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்குள் சென்று அட்டகாசத்தில் ஈடுபட்டனர். பொலிஸ் அவசர இலக்கத்துக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து சாவகச்சேரி பொலிசார், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு சென்றனர்.
மருத்துவர் விடுதியில் அர்ச்சுனாவின் அறைக்கதவை உடைத்துக் கொண்டு பொலிசார் உள்ளே நுழைந்த போது, அர்ச்சுனா அசந்து தூங்கிக் கொண்டிருந்தார்.
இதையடுத்து, போவித்தகவலை பரப்பி மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சித்த குற்றச்சாட்டில் தம்பிராசா கைது செய்யப்பட்டார்.
அந்த நேரத்தில் வைத்தியசாலைக்குள் புகுந்து படம்பிடித்துக் கொண்டிருந்த ரியூப் தமிழ் இணையகுழுவை சேர்ந்த இருவரையும் பொலிசார் கைது செய்தனர். அவர்கள் இன்று சாவக்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டபோது, தம்பிராசாவை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.