ஈழத்தமிழர்கள் 13வது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரத்தை பெறுவதற்கான வாய்ப்பு இல்லை. ஆகவே, தற்போதுள்ள பிரதான 3 தமிழ் வேட்பாளர்களுடன் பேச்சு நடத்தி, கிடைக்கக்கூடிய அதிகபட்ச நன்மைகளை பெறுவதே புத்திசாலித்தனம்.
தமிழ் பொதுவேட்பாளர் என்ற முட்டாள்த்தனமான நடவடிக்கையில் இறங்கி, வாய்ப்புக்களை வீணடிக்காதீர்கள் என இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு ஆலோசனை கூறியுள்ளார்.
நேற்று முன்தினம் (29) கொழும்பிலுள்ள இந்திய ஹவுஸில் தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்த போது இதனை தெரிவித்தார்.
செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன், செ.கஜேந்திரன் ஆகியோருக்கு இந்த ஆலோசனை வழங்கப்பட்டது.
இந்த சந்திப்புக்கு அழைக்கப்பட்ட த.சித்தார்த்தன், கவி.விக்னேஸ்வரன், மாவை சேனாதிராசா ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. சி.சிறிதரன் சந்திப்பில் சிறிதுநேரம் கலந்து கொண்டு விட்டு, தனது வெளிநாட்டு சுற்றுலாவுக்கான விமானம் புறப்படும் நேரம் நெருங்குவதாக தெரிவித்து விட்டு சந்திப்பில் ஆரம்ப கட்டத்திலேயே வெளியேறி விட்டார்.
தமிழ் பொதுவேட்பாளர் விவகாரத்தை முட்டாள்த்தனமாக அணுகுமுறை என இந்திய பாதுகாப்பு ஆலோசகர் வர்ணித்துள்ளார்.
தமிழ் பொதுவேட்பாளரை ஆதரிக்கும் செல்வம் அடைக்கலநாதன் அந்த சந்திப்பில் சங்கடத்தை உணர்ந்த போது, “செல்வம் அடைக்கலநாதன் தமிழ் பொதுவேட்பாளர் தரப்பில்தான் நிற்கிறார். ஆனால், கட்சிக்குள் ஏற்பட்ட நெருக்கடியால்த்தான் அவர் விருப்பமின்றி அந்த தரப்பில் நிற்கிறார்“ என அவரை காப்பாற்றும் விதமாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்ததாக சந்திப்பில் கலந்துகொண்ட ஒருவர் தமிழ் பக்கத்திடம் தெரிவித்தார்.
முன்னதாக இந்த சந்திப்பில் கலந்து கொண்ட செல்வராசா கஜேந்திரன் தமது கட்சியின் நிலைப்பாடு அடங்கிய கடிதமொன்றை அஜித் தோவலிடம் கையளித்திருந்தார்.
13வது திருத்தத்தின் மூலம் தமிழ் மக்கள் பொலிஸ் அதிகாரத்தை பெறுவதற்கான வாய்ப்பில்லையென்பதால், அதிகபட்ச நிலைப்பாடு எடுத்து வாய்ப்புக்களை வீணடிக்காமல், புத்திசாலித்தனமாக செயற்பட வேண்டுமென அஜித் தோவல் ஆலோசனை தெரிவித்தததாக சந்திப்பில் கலந்து கொண்ட ஒருவர் தெரிவித்தார்.