‘மதராசப்பட்டினம்’ படம் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர், இங்கிலாந்தைச் சேர்ந்த எமி ஜாக்சன். பிறகு ‘ஐ’, ‘2.0′, ‘தெறி’, ‘கெத்து’, ‘தங்கமகன்’ என பல படங்களில் நடித்தார். தெலுங்கு, இந்தி மொழிகளிலும் நடித்து வந்தார். தமிழில் கடைசியாக அருண்விஜயின் ‘மிஷன் – சாப்டர் 1’ படத்தில் நடித்தார். இவர் சில வருடங்களுக்கு முன் தொழிலதிபர் ஜார்ஜ் பனயிட்டோவைக் காதலித்தார். இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. ஒரு ஆண்குழந்தையும் பிறந்தது.
இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் பிரிந்தனர். இதையடுத்து அவர் ஆங்கில நடிகர் எட் வெஸ்ட்விக்கைக் காதலித்து வந்தார். எட் வெஸ்ட்விக், சில்ரன் ஆஃப் மென், பிரேக்கிங் அண்ட் என்டரிங், சன் ஆஃப் ராம்போ உட்பட பல படங்களில் நடித்தவர்.
கடந்த ஜனவரி மாதம் இவர்கள் நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர். இவர்கள் திருமணம் இத்தாலியில் நேற்று முன் தினம் நடந்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்களைத் தனது சமூக வலைதளத்தில் எமி ஜாக்சன் பதிவிட்டுள்ளார். இவர்கள் திருமணத்துக்கு இயக்குநர் விஜய் நேரில் சென்று வாழ்த்தியுள்ளார்.