தமிழ் பொதுவேட்பாளர் விவகாரத்தில் சிவில் சமூகமென்ற பெயரில் செயற்பட்ட 7 தனிநபர்களும், கூறிய எதுவும் நடக்காத நிலையில், தமிழ் பொதுவேட்பாளர் விவகாரம் பெரும் தோல்வியடையும் அபாயமுள்ளதால், இந்த விவகாரத்தை ஏன் தொடர வேண்டுமென ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிறைவேற்றுக்குழு கூட்டத்தில் கேள்வியெழுப்பப்பட்டது.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிறைவேற்றுக்குழு கூட்டம் நேற்று (25) வவுனியாவில் நடந்தது.
இதன்போது, தமிழ் பொதுவேட்பாளர் விவகாரத்தையொட்டிய விடயங்கள் பேசப்பட்டன.
தமிழ் பொதுவேட்பாளர் விவகாரத்தையொட்டிய காரசாரமான வாதப்பிரதிவாதங்கள் நடந்தன.
முன்னதாக, ரெலோ சில ஆட்சேபணைகளை எழுப்பியது.
அண்மையில் சுவிஸ் தூதருடனான சந்திப்பில் ரெலோவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இது பற்றி குறிப்பிட்ட ரெலோ தரப்பினர், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கிய போது இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கை வந்ததாகவும், அப்போது ரெலோ, புளொட்டிற்கு அழைப்பு விடுத்த போது, தமது தரப்பிலிருந்த 5 கட்சிகளையும் அழைத்து சென்றதாகவும், ரெலோ அப்படியான அரசியல் கலாச்சாரத்தை கடைப்பிடிப்பதுடன், தம்முடன் கூட்டிலுள்ளவர்களும் அதையே கடைப்பிடிக்க வேண்டுமென எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தனர்.
இந்த விவகாரத்தில் பிழை நடந்ததாக ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட் தரப்பினர் தெரிவித்தனர்.
பொதுவேட்பாளர் விவகாரத்தில் நிதி இதுவரை கிடைக்கவில்லையென்றும், புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடுங்கள், நிதி வரும், ஏனைய கட்சிகள் வரும் என சிவில் சமூகமென குறிப்பிட்டவர்கள் வாய்ப்பந்தலிட்டனர். தற்போது நிதியே வரவில்லை. கட்சிகளும் வரவில்லை. தமிழ் பொதுவேட்பாளர் பிரச்சாரத்தையே முன்னெடுக்க முடியவில்லை. இதே நிலை தொடர்ந்தால், கேலிக்குரிய தேர்தல் முடிவே வெளிப்படும். தமிழ் பொதுவேட்பாளர் நிறுத்தப்பட்டதையடுத்து, தென்னிலங்கை வேட்பாளர்கள் பேச்சுக்கு அழைப்பு விடுகிறார்கள். இந்த சந்தர்ப்பத்தில் பேச்சுக்களில் கலந்து கொண்டு, தமிழர் தரப்பின் நிபந்தனைகளை தெரிவிக்க வேண்டும் என ரெலோ தரப்பினால் கூறப்பட்டது.
சுரேஸ் பரேமச்சந்திரன் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். நிதி வரவில்லையென்பதை அவர் ஏற்றுக்கொண்டார். ஆனால், பல சுற்று கலந்துரையாடல்களின் பின் பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆரம்பித்ததாகவும், இனிமேல் கைவிட முடியாதென்றும் தெரிவித்தார்.
எடுத்த காரியத்தை என்ன முடிவு வந்தாலும் தொடர வேண்டுமென்றார்.
சிவில் குழுவென கூறப்படுபவர்களால் நிதியை திரட்ட முடியவில்லை, அரசியல் கட்சிகள் என்ன செய்தீர்கள் என அவர்கள் பதில் கேள்வியெழுப்பலாம் என சுரேஸ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டார்.
அதை ரெலோ மறுத்தது. பொதுவேட்பாளர் விவகாரத்தையொட்டிய முதலாவது கூட்டம் நடந்த போதே, ரெலோ இந்த விவகாரத்தை சுட்டிக்காட்டி, பொதுவேட்பாளர் விவகாரத்தில் பெருந்தொகை நிதி தேவை, அதற்கான ஏற்பாடுகள் இருந்தால் மாத்திரமே இதனை ஆரம்பிக்க வேண்டுமென குறிப்பிட்டதை சுட்டிக்காட்டியது.
அப்போது டான் தொலைக்காட்சி உரிமையாளர் நாடகத்தனமாக பேசி, “பணம் எதற்கு? நடந்து திரிந்து பிரச்சாரம் செய்த வரலாறு தமிழர்களுடையது. எல்லோரும் வீடு வீடாக நடந்து சென்று பிரச்சாரம் செய்யலாம்“ என பேசினார். சிவில் சமூகமெனப்படுபவர்கள், “பணம் வந்து கொட்டும்“ என்றார்கள்.
ஜனாதிபதி அழைப்பு விடுத்த சந்திப்பு பற்றிய விவகாரம் பேசப்பட்ட போது, ஜனதிபதியுடனான சந்திப்பை ரெலோ தவிர்க்க வேண்டுமென வினயமாக கேட்பதாக புளொட் சார்பில் கலந்து கொண்ட சிவநேசன், குரு ஆகியோர் கேட்டனர். ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பும் அதை ஆதரித்தது.
ஜனாதிபதியிடமிருந்து வந்ததாக குறிப்பிட்ட கடிதம் குறித்தும் சுரேஸ் பிரேமச்சந்திரன் சந்தேகம் எழுப்பினார். அது ரெலோவுக்கு மட்டும் அனுப்பப்பட்டுள்ளது, நேர்த்தியான கடிதமாக தெரியவில்லையென்றார்.
சுவிஸ் தூதரகத்தில் இருந்து அழைப்பு வந்தது, நாம் கலந்து கொண்டோம் என பொறுப்பற்று ஏனைய தரப்பினர் பதில் சொன்னதை போல நாம் பதில் சொல்லாமல், எமக்கு அனுப்பப்பட்ட கடிதத்தை தகவலுக்காக ஏனையவர்களுக்கும் அனுப்பினோம், சந்தேகம் இருந்தால் ஜனதிபதி செயலகத்துடன் பேசி தீர்த்துக்கொள்ளுங்கள் என ரெலோ தரப்பில் கூறப்பட்டது.
ஜனாதிபதிக்கு பொதுக்கட்டமைப்பினர் பதில் அனுப்பிய போது, அந்த கடிதத்தில் ஒரு மின்னஞ்சலை குறிப்பிட்டதாகவும், அந்த மின்னஞ்சலிற்கு ஜனாதிபதி செயலகத்திலிருந்து கடிதம் வந்தாலே நாம் அழைப்பை பரிசிலீலிப்போம் என ஈ.பி.ஆர்.எல்.எவ் தரப்பில் கூறப்பட்டது.
ஜனாதிபதியுடனான சந்திப்பில் பங்கேற்க வேண்டுமென ரெலோ, ஜனநாயக போராளிகள் கட்சியினர் தெரிவித்தனர்.
இதில் இணக்கப்பாடு எட்டப்படவில்லை. பொதுக்கட்டமைப்பினருடனான சந்திப்பில் இந்த விவகாரம் பற்றி இறுதி முடிவெடுக்கவுள்ளதாக ரெலோ தரப்பில் கூறப்பட்டது.
தமிழ் பொதுவேட்பாளர் பொதுக்கட்டமைப்பினரின் சந்திப்பு இன்று காலை 11 மணிக்கு, யாழ்ப்பாணம், ஆசிர்வாதம் வீதியில் உள்ள பொதுவேட்பாளர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.