27.9 C
Jaffna
December 12, 2024
Pagetamil
இலங்கை கட்டுரை

ஊர் கொளுத்தும் அரசியலும் கொள்ளி கொடுக்கும் தலைவர்களும்

-ஞானக்கூத்தன் –

2022 அரகலய போராட்டத்தின் இடையில் வீடுகள் எரிக்கப்பட்டன என்று ரணில் விக்கிரமசிங்க எப்பொழுதும் 1008 மந்திர உச்சாடனம் சொல்வார். ஆனால் அதை யார் எரியூட்டினார்கள் என்று அவர் இன்றுவரை சொன்னது கிடையாது. அந்த வீடுகளை எரித்தவர்களைப் பயங்கரவாதிகள் என்று நாமாகரணம் சூட்டியதும் கிடையாது. ஆனால் அவரும் அவர் பங்காளியாக இருந்த அரசாங்கங்களும் தமிழர் உரிமைப்போராட்டத்தை ‘திறஸ்தவாதிகளின்’ (பயங்கரவாதிகளின்)போராட்டம் என்று சொல்ல மறந்ததும் கிடையாது.

இலங்கை அரசினதும் உளவுப்படையினதும் ஆத்திரமூட்டல் வரலாறு நீண்டதும் நெடியதும் கிரகிப்பதற்குச் சிக்கலானதுமாகும். அது இயற்கை விஞ்ஞானத்தைப்போல ஆய்வுகூடத்தில் பரிசோதனைக் குழாயில் அமிலத்தையோ காரத்தையோ ஊற்றிப் பரிசோதித்து அறிய முடியாதது. சமூகவிஞ்ஞான உண்மைகளை அறிவதற்கு அருவத்தைக் கிரகிக்கும் சக்தியும், அனுபவமும், அறிவும் வேண்டும். லிற்மஸ் பேப்பரோ பீ.ஏச் பேப்பரோ அந்த சோதனைக்கு உதவாது.

உண்மையில் ராஜபக்சக்களின் ஆட்சியை அகற்றி ரணில் விக்கிரமசிங்காவின் தலைமையிலான ஒரு பொலீஸ் இராணுவ சர்வாதிகாரத்தை நிர்மாணிப்பதற்கான சதியே இந்த எரியூட்டல்கள். இதை அமெரிக்க உளவுப் படையும் இந்திய உளவுப்படையும் இலங்கையில் உச்சியிலுள்ள இராணுவ பொலீசும் சேர்ந்தே செய்தார்கள். அதனால்தான் எரியூட்டியவர்கள் எவரும் இதுவரை கைதுசெய்து நீதிமன்றத்தின் முன் விசாரித்துத் தண்டனை வழங்கப்படவில்லை. பாராளுமன்ற அங்கத்தவர்களின் வீடுகளை இராணுவத்தினரே எரித்தார்கள் என்பது இன்று வெளியாகியுள்ளது. யார் யார் எந்த இராணுவ முகாமிலிருந்தும் பொலீஸ் நிலையத்திலிருந்தும் புறப்பட்டு எரியூட்டினார்கள் என்பது அம்பலமாகியுள்ளது. அதனால்தான் ரணில் அரசாங்கம் அதுபற்றி எந்த விசாரணையும் நடத்தாமல் மவுனம் காக்கிறது.

மற்றைய விடயம்தான், ரணிலின் செப்படிவித்தை பொலீஸ் இராணுவமே பாராளுமன்றத்தை எரியவிடாமற் காப்பாற்றினார்கள என்ற பிதற்றல். அப்படிக் காப்பாற்றப் பட்டதால்தான் இப்பொழுது ஜனாதிபதி தேர்தல் நடாத்தக் கூடியதாக உள்ளது என்கிறார் ரணில். இந்த நாட்டு மக்கள் ரணில் விக்கிரமசிங்கவை 2020 இல் அரசியல் ரீதியாகத் தோற்கடித்து அரசியல் வானிலிருந்தே தோற்கடித்து அகற்றி அன்னியப்படுத்தினார்கள். இலங்கை மக்களுக்கு அவர் ஒரு வேண்டாப்பிரைஜை. ஒரு கிரிமினல். மத்தியவங்கிக் கொள்ளைக்காரன். இப்போது பாராளுமன்றத்தில் பிரதமராக இருக்கும் தினேஸ் குணவர்தன ‘ஹொறா ஹொறா ஹொறா ரணில் ஹொறா’ (திருடன் திருடன் திருடன் ரணில் திருடன்) என்று அப்போது ஒப்பாரி பாடினார்.

2019 ஜனாதிபதி தேர்தற் பிரச்சாரத்தின்போது கோத்தபாய ராஜபக்ச மத்தியவங்கிக் கொள்ளைக்காரன் ரணிலைக் கைது செய்து சிறையில் வைப்பதற்காகத் தனக்கு வாக்களிக்கும்படி மேடை மேடையாகக் கூறினார். ஆனால், யாருக்கு கோத்தபாய தேவைப்பட்டார்களோ, அவர்களே மீண்டும் மக்களின் விருப்பத்துக்கு மாறாக ரணிலை அரியாசனத்தில் வைத்தார்கள். ரணில் விக்கிரமசிங்கவால் இலங்கை மக்கள் ஒருபோதும் ஒரு பயனும் அடையவில்லை. ரணில் விக்கிரமசிங்க இலங்கைத் தீவின் அரசியல் கான்சர்.
அதிகாரத்தின் உச்சியிலுள்ள பொலீசும், இராணுவமும், இலங்கை உளவுப்படையும், அமெரிக்க உளவுப்படையும், இந்திய உளவுப்படையும் சேர்ந்து இரகசியமாகச் சதிசெய்தே ரணில் விக்கிரமசிங்க 2022ல் முதலில் பிரதமராகவும் பின்பு ஜனாதிபதியாகவும் ஆக்கப்பட்டார்.

2020 தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கா தனது சொந்த தேர்தற் தொகுதியிலேயே தோற்கடிக்கப் பட்டவர். இப்படியான மக்களால் முற்றாக நிராகரிக்கப்பட்ட ஒருவரை ஜனநாயகத்தின் பேரால் எவ்வாறு நிறைவேற்று ஜனாதிபதியாக்குவது. அதுவும் மத்தியவங்கிக் கொள்ளைக்காரன். ஒரு நாளும் ரணில் விக்கிரமசிங்க மக்களது மத்திய வங்கிக் கொள்ளைக்காரன் என்ற கூற்றை நிராகரித்தது கிடையாது.

பழி பாவம் செய்வதற்கு அஞ்சாத அயோக்கியன். எந்த இலங்கைப் பிரயையும் ரணில் நாட்டுக்கு நல்லது செய்வான் என்று நம்புவதில்லை. அதுவும் யாழ்ப்பாணத்துக் காசுக்கு வீணி ஊத்திற அரசியல்வாதிகளைத் தவிர எந்தப் பிரஜையும் ரணிலுடன் பேசி நீதிகிடைக்கும் என்று எண்ணும் சித்தப் பிரமை பிடித்தவர்கள் அல்ல.

மத்திய வங்கிக் குண்டுவெடிப்புக்காகப் பிரபாகரனுக்கு 200 வருடச் சிறைத்தண்டனை கிடைத்தது. அதனோடு ஒப்பிடுமிடத்து ரணில் என்ற ஒரு மத்தியவங்கிக் கொள்ளைக்காரனுக்கு 2000 வருடச் சிறைத்தண்டனை கொடுக்க வேண்டும். இலங்கை அரசியல்வாதிகள் கொள்ளையடிக்கும் அத்தனை பணங்களும் மேற்குலக வங்கிகளிலேயே சேமிக்கப்படுவதால் மேற்குநாடுகளுக்கு அதனால் லாபம்.
ஆதலாற்தான் பெரும்பான்மைப் பாரளுமன்ற ஆசனங்களே ஆட்சி நடத்தும் பாராளுமன்ற ஆட்சி முறையில் மக்கள் ஆணை இல்லாத ஒரு தனிமனிதனை ஜனாதிபதியாக்கியதை மேற்குலக அரசியல்வாதிகள் அத்தனை பேரும் வரவேற்றனர். ஒருவர்கூட ரணில் என்ற ஒற்றை மனிதனை ஜனாதிபதியாக்கியதை எதிர்க்கவில்லை. ஒரு மரம் தோப்பாகாது என்பது தமிழ்ப் பழமொழி. ஆனால் ரணில் தனி மரமல்ல. ரணில் என்பவர் மக்கள் விரோத விஷத் தோப்பில் மிகவும் முற்றிய பழமையான கொடிய விருட்சம்.

ரணில் விக்கிரமசிங்க 1977இல் இருந்து பாரளுமன்ற அங்கத்தவராக இருக்கிறார். 6 தடவைகள் பிரதமாராகப் பதவி ஏற்றிருக்கிறார். இரண்டு தடவைகள் எதிர்க்கட்சித்தலைவராக இருந்திருக்கிறார். பல மந்திரிப் பதவிகளை வகித்திருக்கிறார். அவரால் தொட்டறியப்படக் கூடிய எதையும் மக்களுக்கோ நாட்டிற்கோ செய்யவில்லை.
அவர் 1981 இல் யாழ்ப்பாணத்தில் நடத்தப்ப்ட்ட தேர்தல் வன்முறை, யாழ்ப்பாணம் தீவைத்து எரிக்கப்பட்டமை, மற்றும் யாழ். நூலகத்தை எரித்தல் என்பவற்றின் பிரதான சூத்திரதாரிகளில் ஒருவர். (வாசிக்கவும் – 1981 – யாழ்ப்பாணத்தை தீயிடுதல் – நந்தன வீரரத்ன- https://naangalbooks.sellfy.store/p/1981/ )ஒரு புத்தகத்தைக்கூட எரிப்பதை உலக நாகரீகமும் உலகச் சட்டமும் ஏற்றது கிடையாது. இன்றுவரை இதுதான் உண்மையும் மரபும் சம்பிரதாயமும் வாழையடி வாழையாக வந்த வழக்கமும்.

கண்ணைத்தோண்டிய கறுத்த யூலையை நடாத்தி முடித்த யூ.என்.பி அரசாங்கத்தின் மந்திரி. தமிழ்ப் பாராளுமன்ற அங்கத்தவர்கள் அத்தனைபேரையும் பாராளுமன்றத்திலிருந்து துரத்தி 30 வருட உள்நாட்டு யுத்தத்தை மடைதிறந்துவிட்ட மனிதர்களில் ஒருவர்.

1999இல் ஜனாதிபதி சந்திரிகா கொண்டுவந்த இனப்பிரைச்சினைக்கான தீர்வுத் திட்டதை தனது கட்சி அங்கத்தவவர்களை கொண்டு பாராளுமன்றதுக்குள்ளேயே தீ வைத்து கொளுத்தியவர்தான் ரணில் விக்கிரமசிங்க.

1988-1989 பட்டலந்த சிறைமுகாமின் நேரடித் தலைவராக இருந்து 60000 சிங்கள இளைஞர்களைக் கொன்று குவித்த மனிதர்களில் ஒருவர். (வாசிக்க Criminal History of Ranil Wickramasinghe https://nandanaweeraarathne.substack.com/p/the-criminal-history-of-ranil-wickremesinghe).

2019 ஏப்ரல் 21ல் உயிர்த்த ஞாயிறு நரபலியின்போது அவர் நாட்டின் பிரதமர். எங்கள் வாழ்நாளில் எமது நாட்டில் நடந்துமுடிந்த பசுமரத்தாணிபோல் சதா மூளையில் இடிஇடித்துக்கொண்டிருக்கும் சில சம்பவங்களை நினைத்துப் பாருங்கள்.

30 வருட உள்நாட்டு யுத்தம். இந்த யுத்தம் நாட்டின் மூலதனம் அத்தனையையும் அழித்து ஈற்றில் 2022 ஏப்ரல் 12ல் இலங்கை அரசு உத்தியோகபூர்வமாக வங்குறோத்தை (திவாலை) அறிவித்தது. வெட்கமில்லாமல் பட்ட கடனைக் கட்டமாட்டேன் என்று சொன்ன போக்கிரி நாடாகி இலங்கை மக்கள் முழுப்பேரையும் அவமானப் படுத்தியது. இந்த மீளா அவமானத்தைப்பற்றி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எந்த வெட்கமும் கிடையாது. தான் கடன்பெறுவதில் கெட்டிக்காரன் என்று புழுகுவதைத் தவிர மேடைகளிலே அவர் வேறு ஒன்றும் சொல்வதில்லை.

தாங்கொணா வறுமை வந்தால் சபைதனில் செல்ல நாணும்;
வேங்கைபோல் வீரங் குன்றும் விருந்தினர் காண நாணும்
பூங்கொடி மனையகட் கஞ்சும் புல்லருக் கிணங்கச் செய்யும்
ஓங்கிய அறிவு குன்றி உலகெலாம் பழிக்கும்தானே…. – விவேகசிந்தாமணி 21-

பொறுப்பதற்கரிய தரித்திரத்தை இலங்கைக்கு பழைய ஆட்சியாளர்கள் கொண்டுவந்ததால் இலங்கையைப் பிரதிநிதித்துவப் படுத்தும் வெளிநாட்டுத்தூதரக இராஜதந்திரிகளுக்கு. மற்றைய சக இராஜதந்திரிகளைக் காண வெட்கம் உண்டாகும். எங்களை இலங்கைப் பிரையை என்று சொல்லவே வெட்கம் உண்டாகும். வெளிநாடுகளுக்குச் செல்லும் விசா கேட்டால் தரமாட்டார்கள். வர்த்தகர்கள் வெளிநாட்டிலிருந்து விற்பனைப் பண்டங்களை அனுப்பும்படி கோரினால் ஒரு நாட்டு ஏற்றுமதியாளர்களும் அனுப்ப மாட்டார்கள். மத்திய வங்கி வழங்கும் கடன் கடிதம் செல்லுபடியாகாது.

வேங்கைப் புலி போன்ற வீரம் குன்றும்.
வரும் விருந்தினரைக் காண நாணம் உண்டாகும்
பூங்கொடி போன்ற மனைவிக்கே பயப்படும்.
அற்பருக்கே அடங்கி நடக்கும்.
தரித்திரனோடு சேர்ந்தவர்களுக்கும் தரித்திரம் உண்டாகும்.
கற்ற அறிவு குன்றத்தொடங்கும்.

ரணில் விக்கிரமசிங்காவின் பலமே வெட்கப்படத் தெரியாததாகும். அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி. ரணில் விக்கிரமசிங்காவுக்குத் தன்னைப்பற்றித் தானே புழுகுவதுதான் தொழில்.

வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை… குறள்-439-

செருக்கினால் எப்போதும் தன்னைத் தானே புழுகிக் கொள்ளக் கூடாது. நாட்டுக்கு நன்மை தராதவைகளைச் செய்யக் கூடாது.

வெண்மை எனப்படுவது யாது எனின் ஒண்மை
ஊடையம் யாம் என்னும் செருக்கு.- குறள் 844-

புல்லறிவுடைமை என்பது யாது என்று கேட்டால், அது தம்மைத்தாமே நல்லறிவுடையோம் என்னும் செருக்கு.

6 தரம் பிரதமராக இருந்த ரணிலின் செருக்காலும் துரோகத்தாலுமே ஈழவழநாடு நாசமாகப்போனது.

தனக்கு எல்லாம் தெரியும், எல்லாம் நல்லாய்த் தெரியும், எல்லாம் மற்ற எல்லாரையும்விட நல்லாயத் தெரியும் என்ற செருக்கே எல்லாத் துக்கங்களின் தாயாகும்.

ரணில் விக்கிரமசிங்கவுக்கு உலமெல்லாம் ஓடி ஓடி நாட்டை விற்று அல்லது நாட்டை அடைவு வைத்து அறாவட்டிக்குக் கடன் வாங்கத் தெரியுமேயொளிய இலங்கையின் ஆடை ஏற்றுமதிக்கான ஜி பிளஸ் ஒப்பந்தத்தை வெல்ல முடியாது. இலங்கையின் எந்த உற்பத்திப் பண்டத்துக்குமான சந்தையை வெல்ல முடியாது. ஒரு நாட்டின் பிறநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் சந்தைப்படுத்தும் பலமே அரசியலை நிர்ணயிப்பது.

• இலங்கை மீனவர்களுக்கு இத்தாலியிலிருந்தோ ஜப்பானிலிருந்து ஒரு லட்சம் றோலர்களைக் கடனாகப் பெற்றுத் தர முடியுமா.
• பொறியாளர்களுக்கு 1000 கடைச்சல் ஜந்திரங்களைக் கடனாகப் பெற்றுத்தர முடியும்.
• சீனாவிலிருந்து 10 லட்சம் சோலா தகடுகளைக் கடனாகப்பெற்று மின்வினியோகத்தை மின்வெட்டு இல்லாமல் வினியோகிக்க முடியுமா.

பாகிஸ்தான் பிரதமர் அலி பூட்டோ பாகிஸ்தான் முழுவதையும் மின்மயமாக்க முற்பட்டதால் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சதியால் கொல்லப்பட்டார் என்பது ஏகாதிபத்தியங்களின் செருப்பு நக்கிகளுக்கு எப்படித்தெரியப் போகிறது.
பழைய காலனித்துவ நாடுகளை அபிவிருத்தி அடைய விடாமல் சூழ்ச்சி செய்வதே மேற்கு நாடுகளின் இராஜதந்திரம். அதற்காகவே ரணில் விக்கிரசிங்கவும் அவரை அண்டிப்பிழைக்கும் கோமாளிகளும் ஏகாதிபத்தியங்களால் பயிற்றப்பட்டிருக்கிறார்கள்.
உலகத்தை நிதி மூலதனமே ஆளுகிறது. கடுவட்டிக்குக் கடன் கொடுத்து வட்டியைக் கறப்பதற்காகவே மேற்குநாடுகள் ரணிலை ஜனாதிபதியாக்கினர்.

ரணில் விக்கிரமசிங்கவின் மாபெரும் பொய்களில் ஒன்று இலங்கை பொருளாதாரத்தில் வீழ்ந்து மீண்டெழ முடியாத நேரத்தில் மற்றய அரசியல் தலைவர்கள் எல்லாம் நாட்டைக் கைவிட்டு ஓடி ஒளித்தபோது தானே பயப்படாமல் முன்வந்து ஜனாதிபதி பதவியை ஏற்றதாகக் கூறுகிறார்.

எதுவும் தானே உருவாவதில்லை என்பது நுண் உயிரியலின் தந்தையாகிய லூயி பாஸ்டரின் கூற்று. இவரே விசர்நாய்க் கடிக்கு மருந்து கண்டுபிடித்தவர்.

எந்தத் தேசமும் தானே வங்குறோத்து அடைவதில்லை. ஒரு நாட்டை அரசியல் கட்சிகள் வங்குறோத்து அடையச் செய்கின்றன. அரசியல் கட்சிகளின் அரசியல் வேலைத்திட்டங்கள் வங்குறோத்து அடையச் செய்கின்றன. அரசாட்சியை நடாத்திய தலைமைத்துவத் தனிமனித ஆளுமைகள் வங்குறோத்து அடடையச் செய்கின்றன என்று லியொன் ரொக்ஸ்சி அவர் எழுதிய ஸ்பாவில் புரட்சியும் எதிர்ப்புரட்சியும் என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார். (ஆங்கிலப்பதிப்பு-பக்கம் 364)

ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த காலத்திலேயே நாடு அதிகூடின கடனாளி ஆகியது. அவரது ஆட்சிக் காலத்திலேயே தொழிற்சாலைகள் மூடப்பட்டன. அவரது ஆட்சிக்காலத்திலேயே அதிகூடிய வேலையில்லாத் திண்டாட்டம் நிலவியது. அவரது ஆட்சிக்காலத்தில் 60 லட்சம் பேர் வறுமைக்கோட்டின் கீழ் தள்ளப் பட்டார்கள்.

இலங்கை என்ற நாடு ஒரு நாளும் இயற்கை அனர்த்தங்களால் அழிந்து வங்குரோத்து அடையவில்லை. இலங்கையின் பிரதம மந்திரிகளும் ஜனாதிபதிகளுமே அதை அழித்து வங்குரோத்தடைய செய்தார்கள்.

இலங்கையின் ஆகக் கூடிய செலவீனம் இராணுவச் செலவீனமாகும். இலங்கை வரவு செலவுத்திட்டத்தில் 17 வீதம் பாதுகாப்புக்கு ஒதுக்கப்படுகிறது. கல்விக்கும் வைத்திய சேவைக்கும் கூட்டாக மூன்று வீதமே ஒதுக்கப் படுகிறது.

இலங்கைக்குப் 30,000 (முப்பதினாயிரம்) இராணுவமே போதுமானது. இப்போது உள்ள இராணுவத்தின் எண்ணிக்கை 300,000 (மூன்று இலட்சம்) . இது உற்பத்திக்கு உதவாத ஒட்டுண்ணிக் கட்டுமானம். இந்த இராணுவம் இலங்கையின் பொருளாதாரத்தில் ஒரு சதத்தைக் கூட உருவாக்குவதில்லை.
இலங்கையை உலகின் ஆயுத உற்பத்தி விற்பனவுக் கொம்பனிகள் ஆயுதங்களையும் வெடிகுண்டுகளையும் வேண்டிக் குவிக்க நிர்ப்பந்திக்கின்றன. ஒரு சிப்பாய் பள்ளி ஆசிரியரிலும் இரட்டிப்பு சம்பளத்தைப் பெறுகின்றான். ஓர் இராணுவ ஜெனரல் ஒரு பல்கலைக் பேராசிரியரின் கூடிய வருவாயையும் சலுகைகளையும் பெறுகின்றான். இலங்கை ஆட்சியாளர்கள் அன்றும் இன்றும் கோலைவெறி என்ற மனநோயால் பீடிக்கப்பட்டிருக்கிறார்கள்.

22 மில்லியன் சனத்தொகை உள்ள இலங்கைத்தீவில் எல்லைச் சண்டைகள் வருவதற்கான சாத்தியக்கூறுகள் மிக மிக அற்பமாகவே இருக்கின்றன. ஆனால் கொத்தலாவலை என்ற இராணுவப் பல்கலைக் கழகம் பற்றிப் புழுகுவதே அரசியல்வாதிகளின் வேலை. இலங்கை கொத்தலாவலை இராணுவப் பல்கலைக் கழகத்தைப் போடும் பொழுது ஜேர்மனி மின்பற்றறிக்கான ஆராய்ச்சிப் பலகலைக் கழகத்தைப் போட்டது.

இலங்கை மக்களின் மனோநிலையைக் கொலைவெறியில் ததும்பி வழியப் பண்ணியே இலங்கையில் சதா உள்நாட்டு யுத்தக் கலவர நிலைமையைச் சிருஷ்டித்தார்கள்.
கொல்லாமையை உலகுக்குப் போதித்த புத்தத்தை அரசமதமாகக் கொண்ட கொண்ட நாட்டில் கனவிலும் நனவிலும் கொலைத் தொழிலைப்பற்றிப் புகழப்படுகிறது.

ஓர் உட்பகையில்லாத நாட்டைச் சிருஷ்டிக்கும் கைங்கரியம் தெரியாத அரசியற் கலாச்சாரம் அங்கு உருவாகுவதற்கு வகை செய்யப்பட்டன. பகைமை இல்லாமையே ஒரு நாட்டின் பலமும் உலக அங்கீகாரமுமுமாகும்.

நல்ல நினைப்பொழிய நாட்களி ஆருயிரைக் கொல்ல நினைப்பதற்ற
செல்வ வளநாட்டைப் படைபதையே தமிழ் பவுத்தம் செப்புகிறது.
யார் புத்தன்?
தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன்.-74
(எங்கோ னியல்குணன் ஏதமில் குணப்பொருள்
உலகநோன்பிற் பலகதியுணர்ந்து
தன்க்கென வாழாப் பிறர்க்குரியாளன்..
அருளறம் பூண்ட அறக்கதிராளி) -மணிமேகலை.
————————
நாடென்ப நாடா வளத்தன, நாடல்ல
நாட வளந்தரு நாடு. -குறள் 739.
வேற்று நாடுகளை எதற்கும் வேண்டாதபடி, எல்லா வளமும் கொண்டதே நல்ல நாடு என்பர்;
பிறர் உதவியை நாடி அதனால் வளமை வரும் நாடு, நாடே ஆகாது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அரிசி இறக்குமதியில் நெருக்கடி

east pagetamil

கடந்த வருடம் எலிக்காய்ச்சலால் 200 பேர் உயிரிழப்பு!

Pagetamil

இன்றைய வானிலை

Pagetamil

2024 வாக்காளர் பதிவின் அடிப்படையிலேயே உள்ளூராட்சித் தேர்தல்

Pagetamil

ரௌடியை போல நடந்த அர்ச்சுனா: அதிர்ச்சி வீடியோ!

Pagetamil

Leave a Comment