யாழ்ப்பாணம் – அளவெட்டி பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்த ஆண் குழந்தையின் தலையில் தாக்கப்பட்டு காயங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் செயற்கையான முறையில் மரணம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக உடற்கூற்றுப் பரிசோதனையில் அறிக்கையிடப்பட்டுள்ளது.
அந்தக்குழுந்தை கொடூர சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டு வந்தது தெரிய வந்துள்ளது.
குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக குழந்தையின் தாய் தெல்லிப்பளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
சசிரூபன் நிகாஸ் என்ற பிறந்த 45 நாளான குழந்தையொன்று நேற்று முன்தினம் (3) அளவெட்டி பகுதியில் உயிரிழந்தது.
குழந்தைக்கு தாய் பால் ஊட்டிய நிலையில் சில மணி நேரங்களுக்கு பின்னர் குழந்தை மயக்கமுற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டு குழந்தை அளவெட்டி பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டது.
அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த போது குழந்தை உயிரிழந்துள்ளதாக வைத்தியர்களால் தெரிவிக்கப்பட்டது.
குழந்தையின் சடலம் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்ட நிலையில் மரண விசாரணையை வலிகாமம் கிழக்கு பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
குழந்தையின் உடலில் காயங்கள் மற்றும் தளும்புகள் காணப்படுவதன் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று உடல் கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
குழந்தையின் இடது கால் எலும்பு முறிந்திருந்தது தெரிய வந்தது. அது ஏற்கெனவே முறிக்கப்பட்டிருந்தது. குழந்தையின் இடது கை, வளைத்து முறிக்கப்பட்டிருந்தது. குழந்தையின் உடலில் தாக்கப்பட்ட தளும்புகள் காணப்பட்டன. தலையில் தாக்கப்பட்டு மூளையில் இரத்தக்கசிவு காணப்பட்டது.
செயற்கையான முறையில் மரணம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக உடற்கூற்றுப் பரிசோதனையில் அறிக்கையிடப்பட்டுள்ளது.
குறித்த குழந்தையின் தந்தை தங்கு வேலைகளுக்கு சென்று வந்த நிலையில் தாயுடனேயே குறித்த குழந்தை வளர்ந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் குழந்தையின் தாய், தந்தை உள்ளிட்ட சிலரை தெல்லிப்பளை பொலிஸார் விசாரணைகளுக்காக அழைத்துள்ளனர்.