விஜய்சேதுபதி, அனுராக் காஷ்யப், மம்தா, நட்டி என்ற நட்ராஜ் சுப்பிரமணியம், அருள்தாஸ் உட்பட பலர் நடித்துள்ள படம் ‘மகாராஜா’. நித்திலன் சாமிநாதன் இயக்கிய இதை பேஷன் ஸ்டூடியோஸ் சார்பில் சுதன் சுந்தரம் தயாரித்துள்ளார். இந்தப் படம் வரவேற்பைப் பெற்றதை அடுத்து இதன் வெற்றிவிழா சென்னையில் நேற்று நடந்தது. விழாவில் நடிகர் விஜய் சேதுபதி கூறியதாவது:
இந்தப் படத்தின் கதையை கேட்கும்போது பெரிய பிரமிப்பும் நம்பிக்கையும் இருந்தது. ஒவ்வொரு படத்துக்கு முன்னும் இது எப்படிச் சாத்தியமாகப் போகிறது என்கிற கேள்வி எனக்கு இருக்கும். கதை கேட்கும்போது அந்தக் கதை அட்ராக்ட் பண்ணக்கூடிய விஷயங்கள் தெரியும். ஆனால், நடிக்கும்போது அது தெரியாது. எடிட்டர், அவர் அசிஸ்டென்ட் என ஒவ்வொருவரிடமாகக் கேட்டுதான் தெரிந்துகொள்வேன். கேட்கிற ஒவ்வொரு பாசியையும் மொத்த மாலையாகக் கற்பனை பண்ணவும் முடியாது. ஆனாலும் தயாரிப்பாளருக்கு லாபம்கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையோடுதான் இருந்தோம்.
என் முந்தைய படங்கள் சரியாக ஓடவில்லை. அப்போது, தியேட்டரில் பேனர் ஏற்றும்போது, விஜய் சேதுபதிக்கு பேனர் கட்டினால் இனி கூட்டம் வருமா என்ன? என்று சிலர் கேட்டிருக்கிறார்கள். இதுபோன்ற கேள்விகள் என்னைச் சுற்றி ஓடிக்கொண்டிருந்தது. அதற்கு பதில் சொல்வதற்காக இந்தப்படத்தைப் பண்ணவில்லை. அவர்களின் கேள்விக்குப் பதிலாக ‘மகாராஜா’ அமைந்ததில் இயக்குநர் நித்திலனுக்கும் தயாரிப்பாளர் சுதன் சாருக்கும் நன்றி. இவ்வாறு அவர் கூறினார். படக்குழுவினர் கலந்து கொண்டனர்.