26.5 C
Jaffna
December 26, 2024
Pagetamil
இலங்கை முக்கியச் செய்திகள்

கிளிநொச்சி மருத்துவமனையில் பயன்படுத்த ஆளில்லை… யாழில் தனியார் மருத்துவமனையில் செயலமர்வு: வடக்கில் விஸ்பரூபமெடுத்துள்ள கருவுறு சிகிச்சை வணிகம்!

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள நொதேர்ண் சென்ரல் தனியார் மருத்துவமனையில், யாழ்ப்பாணத்திலுள்ள மருத்துவர்களுக்கான செயலமர்வு ஒன்று, அரச மருத்துவ அமைப்புக்களின் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது பற்றிய செய்தியை வெளியிட்டிருந்தோம்.

இந்த செய்தியை வெளியிட்ட பின்னர், மருத்துவத்துறை சார்ந்த பலர் தமிழ் பக்கத்துடன் தொடர்பு கொண்டு பல்வேறு தகவல்களை வெளிப்படுத்தினார்கள். யாழ்ப்பாணத்தில் மருத்துவத்துறை வர்த்தக மயப்பட்டு, ஒரு மாபியாவாக எவ்வாறு தொழிற்படுகிறது என்பது பற்றிய அதிர்ச்சித் தகவல்களாக அவை அமைந்தன.

முதலாவதாக, நேற்று (9) வெளியிட்ட – செயலமர்வு தொடர்பாக செய்தியையொட்டிய திருத்தம் ஒன்றுள்ளது.

கருத்தரித்த குழந்தைகளை ஸ்கானிங் செய்து குழந்தைகளின் குறைபாட்டை கண்டறியும் நவீன ஸ்கானிங் கருவியொன்று நொதேர்ன் சென்ரல் தனியார் மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ளதாக குறப்பிட்டிருந்தோம். வடக்கில் இதேவகையான ஸ்கானிங் கருவி கிளிநொச்சி பொது மருத்துவமனையிலும் நிறுவப்பட்டுள்ளது.

“இது பிந்திய தயாரிப்பு வடிக கருவியென்பது உண்மைதான். ஆனால், கருவிலுள்ள குழந்தைகளை ஸ்கான் செய்து, குழந்தைக்குள்ள பாதிப்பை கண்டறிய, தற்போது யாழ் மாவட்டத்தின் ஏனைய அரச மருத்துவமனைகளில் உள்ள அல்ட்ரா சவுண்ட் ஸ்கானிங் கருவிகளே போதுமானவை. ஒரு பிள்ளை மாத்திரம் உள்ள தாயொருவரை அரச மருத்துவமனைகளில் ஸ்கானிங் செய்ய 45 நிமிடங்கள் தொடக்கம் 75 நிமிடங்கள் வரை ஆகிறது. குழந்தைக்கு ஏதேனும் குறைபாடு கண்டறியப்பட்டால், கருவில் உள்ள போதே சிகிச்சையளிக்கக்கூடிய குறைபாடுகளெனில், கருவில் வைத்தே சிகிச்சையளிக்கப்படும். இதயம், நுரையீரல் உள்ளிட்ட சில வகை குறைபாடுகள் கண்டறியப்பட்டால், குழந்தை பிரசவித்த உடனேயே சிகிச்சையளிக்கக்கூடிய மருத்துவமனைகளில் பிரசவத்திற்காக தாயை மாற்றலாம். கருவிலேயே குழந்தையின் குறைபாட்டை கண்டறியும் ஸ்கான் வசதியால் உள்ள நன்மை இதுதான்“ என்றனர் சுகாதாரத்துறை வட்டாரங்கள்.

கருவிலுள்ள குழந்தைக்கு எந்தவகையான குறைபாடு கண்டறியப்பட்டாலும், கருவை கலைக்க இலங்கை சட்டத்தில் அனுமதியில்லை. குழந்தையின் குறைபாட்டுக்கு சிகிச்சையளிப்பதே ஒரே வழி. கருவிலுள்ள குழந்தையின் குறைபாட்டை கண்டறிய தற்போது அரச மருத்துவமனைகளில் உள்ள ஸ்கான் வசதிகளே போதுமானவை.  யாழ்ப்பாணத்தில்- போதனா மருத்துவமனை உள்ளிட்ட பல மருத்துவமனைகளில் பல வருடங்களாக கருத்தரித்தல் சிகிச்சை தொடர்புடைய சேவைகள்- கருவிலுள்ள குழந்தைகளை ஸ்கான் செய்வது உள்ளிட்ட வசதிகள் சிறப்பாக செயற்பட்டு வருகிறது.

கருவிலுள்ள குழந்தையின் குறைபாடு கண்டறியப்பட்டால், கருவை அழிக்க அனுமதிக்கும் நாடுகளில் இந்தவகை ஸ்கானர்கள் உதவலாம். அந்த நாடுகளின் தேவைக்கு தயாரிக்கப்பட்ட ஸ்கானர்களை இலங்கைச்சூழலில் பயன்படுத்துவதும் பெற்றோருக்கு தேவையற்ற மனஅழுத்தத்தை ஏற்படுத்தலாம்.

கருவிலுள்ள குழந்தையின் குறைபாடுகள் கண்டறியப்பட்டால், அரச மருத்துவமனைகளிலேயே மேம்பட்ட சிகிச்சைக்கு செல்ல வேண்டியிருக்கும். அதனால், ஸ்கான் செய்வதற்கும் அரச மருத்துவமனைகளிற்கு செல்வதே, குழந்தையின் எதிர்காலத்துக்கு பலனுள்ளதாக அமையும்.

இன்றைய நவீன யுகத்தில் புதிய புதிய அப்டேற் வெர்சன்கள் வெளியாகிக் கொண்டிருப்பது சாதாரணமான விடயம். அவ்வாறான ஒன்றையே நொதேர்ன் சென்ரல் தனியார் மருத்துவமனையில் நிறுவி, விளம்பரப்படுத்தி, கல்லா கட்ட முயற்சிக்கிறார்கள் என்கிறார்கள் மருத்துவத்துறை சார்ந்தவர்கள்.

கருவுரு சிகிச்சை இன்று யாழ்ப்பாணத்திலும் பெருமளவு வர்த்தக மயப்பட்டு, ஒரு மாபியாவாக உருமாறி வருகிறது.

“கருவுறு சிகிச்சை யாழ்ப்பாணத்திலும் அறிமுகமானது வரவேற்கப்பட வேண்டிய ஒன்றுதான். ஆனால், குறுகிய காலத்தில் அது ஒரு வர்த்தக மாபியாவாக உருவாகி விட்டதுதான் ஆபத்தாகியுள்ளது. முன்னைய காலத்தில் குழந்தையில்லாத பெற்றோர்கள் சில பல வருடங்களின் பின்னரும் குழந்தை பிரசவிப்பார்கள். தற்போது திருமணம் முடிப்பவர்கள் கருவுறு சிகிச்சையை பற்றி யோசித்துக் கொண்டுதான் திருமணம் செய்யும் நிலைமை உருவாகி வருகிறது. அவ்வளவுக்கு இது தொடர்பான விளம்பரங்களால் மக்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது குழந்தை பெறப்போவதாக தம்பதியினர் ஒரு ஆலோசனைக்கு இந்த சிகிச்சை நிலையங்களுக்கு சென்றாலே, கருவுறு சிகிச்சையையே ஊக்கப்படுத்தும் அபாயம் உருவாகி வருகிறது“ என சுகதாரத்துறை முக்கியஸ்தர் ஒருவர் வேதனையுடன் குறிப்பிட்டார்.

ஏனெனில், கருவுறு சிகிச்சை பெறும் ஒவ்வொருவரிலிருந்தும் கொமிசன் பணத்தை குறிப்பிட்ட மருத்துவ நிலையங்கள் பெற்றுக்கொள்கின்றன. யாழ்ப்பாணம்- வடக்கில் குறைந்தளவிலான கருவுறு சிகிச்சை தொடர்பான மருத்துவர்களே உள்ள நிலையில், அவர்களின் சேவையும், தேவையும் இன்றியமையாததாகும். இவர்களில் பலர் பாராட்டும் படியான சேவைகளை மேற்கொண்டு வருகிறார்கள். எனினும், தனியார் சிகிச்சை நிலையங்கள் வழியாக உருவாகியுள்ள கருவுறு சிகிச்சை மாபியா பற்றியே இங்கு குறிப்பிடுகிறோம்.

யாழ்ப்பாணத்திலுள்ள கருவுறு மருத்துவ சிகிச்சை நிலையமொன்றை நடத்தும் மருத்துவரொருவர் மாதம் ரூ.50 இலட்சம் ரூபா கொமிசன் பணத்தை பெறுவதாக ஒரு தகவல் உள்ளது.

யாழ்ப்பாணத்தில் டெஸ்ட் ட்யூப வழியான கருவுறு சிகிச்சைக்கான முழுமையான நிபுணத்துவம் கொண்ட மருத்துவர்கள் யாரும் கிடையாது. சிங்கள மருத்துவர் ஒருவரே யாழ்ப்பாணத்துக்கு வந்து அந்தவகை கருவுறு சிகிச்சையை மேற்கொள்கிறார். அவ்வாறு சிகிச்சையளிக்கப்பட்ட தாய்மாரையும், கருவிலுள்ள குழந்தைகளையும் கண்காணிக்கும் பணியை யாழ்ப்பாணத்திலுள்ள மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.

மருத்துவர்கள் சிலர் இணைந்து வெளிநாட்டில் கொள்வனவு செய்த, ரூ.3.5 கோடி பெறுமதியான ஸ்கானர் ஒன்று தொடர்பான செயலமர்வு ஜூன் 17ஆம் திகதி நொதேர்ன் சென்ரல் தனியார் மருத்துவமனையில் நடைபெறவுள்ளதை நேற்று குறிப்பிட்டிருந்தோம். இந்த செயலமர்வு, யாழ் மருத்துவ சங்கம், மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மகப்பேற்று மற்றும் பெண்நோயியல் மருத்துவத் துறை என்பனவற்றின் ஒத்துழைப்புடன் நடக்கிறது.

வடக்கில் மருத்துவர்களுக்கான இவ்வாறான செயலமர்வுகள் இதுவரை அரச மருத்துவமனைகளில் மட்டுமே நடைபெற்று வந்தன. முதல்முறையாக தனியார் மருத்துவமனையொன்றில் இந்த செயலமர்வு திட்டமிடப்பட்டுள்ளது. இது, அந்த தனியார் மருத்துவமனைக்கான விளம்பர முயற்சியென்றே பல தரப்பினரும் சந்தேகப்படுகிறார்கள். யாழ்ப்பாண மருத்துவ சங்கத்தின் முக்கிய பிரதானியொருவர், குறிப்பிட்ட மருத்துவமனையில் பங்குகளை வைத்துள்ளதால், மருத்துவ சங்கத்தின் பெயர் பாவிக்கப்பட்டிருக்கலாம் என வைத்தாலும், தனியார்துறையை ஊக்குவிக்கும் விதமாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடம் ஏன் செயற்பட துணிந்தது என்பதுதான் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ள கேள்வி.

இதேவகையான- அல்லது இதையொத்த வகையான இயந்திரம் கிளிநொச்சி பொது மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ளது. அண்மையில் கிளிநொச்சிக்கு ஜனாதிபதி விஜயம் செய்தபோது திறக்கப்பட்ட பெண்கள் விடுதியில் இந்த ஸ்கானர் உள்ளது. என்றாலும், அந்த இயந்திரத்தை பயன்படுத்துவதில் உரிய பயிற்சிபெற்ற நிபுணத்துவமுடையவர்கள் இல்லையென்பதால், அதனால் சிறப்பான பலனை அடைய முடியாமலுள்ளதாக கிளிநொச்சி மருத்துவர் ஒருவர் தெரிவித்தார்.

வெளிநாட்டில் பயிற்சிபெற்றுவிட்டு அண்மையில் நாடு திரும்பிய வைத்தியர் ஒருவர் மூலமாகவே நொதேர்ன் சென்ரல் தனியார் மருத்துவமனையில், இந்த இயந்திரத்தின் மூலம் பயிற்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இப்பொழுது இதில் பலமான கேள்வியொன்று எழுகிறதல்லவா?… இந்த செயலமர்வை திட்டமிட்டவர்கள், உண்மையான மருத்துவ சேவை நோக்கமுடையவர்கள் என்றால், அந்த செயலமர்வை கிளிநொச்சி பொது மருத்துவமனையிலல்லவா நடத்தியிருக்க வேண்டும்?. அப்படி நடத்தாமல் யாழ் நகரில் தனியார் மருத்துவமனையில் இந்த செயலமர்வை நடத்தியது, அவர்களின் வர்த்தக நோக்கம் கருதியென்றல்லவா பொருள்படும்.

யாழ் மருத்துவர் சங்கத்தை விட்டுவிடுவோம். யாழ்ப்பாண பல்கலைக்கழக மகப்பேற்று மற்றும் பெண்நோயியல் மருத்துவத் துறை ஏன் இந்த சர்ச்சைக்குரிய செயலமர்வில் பங்கேற்றது. அங்குள்ள யாராவது இந்த கருவுறுதல் மருத்துவ மாபியாவுடன் தொடர்புபட்டுள்ளார்களா என்ற கேள்வி சாதாரண மக்களுக்கு எழுவது தவிர்க்க முடியாததல்லவா?.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மனைவியை சுட்டுக்கொல்ல துப்பாக்கியுடன் தலைமறைவான திருகோணமலை கடற்படை சிப்பாய் கைது!

Pagetamil

பொது மன்னிப்பில் ரஷ்ய பெண்ணும் விடுதலை

Pagetamil

சுனாமி 20: ‘பேபி 81’ இற்கும் 20 வயது!

Pagetamil

சுனாமி 20 வது ஆண்டு: இன்று தேசிய பாதுகாப்பு தினம்!

Pagetamil

மதுபோதையில் வாகனம் செலுத்திய 251 பேர் கைது

east tamil

Leave a Comment