27.9 C
Jaffna
December 12, 2024
Pagetamil
கட்டுரை முக்கியச் செய்திகள்

பொதுவேட்பாளர் அபத்தம் 2: யார் இந்த யாழ்ப்பாணத்து அரிஸ்டோட்டில்கள்?… வேட்பாளர்களை தெரி்வு செய்வது மட்டும்தான் இவர்களின் வேலையா?

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்தியே தீர வேண்டுமென வெளிநாட்டு தூதரகங்களில் பணம் பெற்றுக்கொண்டு இயங்கும் சிலரும், ராஜபக்ச ஆதரவாளர்களும் குடிமைச்சமூகம் என்ற பெயரில் விக்ரமாதித்தன்களாக முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அது சாத்தியமேயற்றது… மீறி நடந்தாலும், தமிழ் மக்களை அரசியல் ரீதியாக மேலும் பலவீனப்படுத்தும் என தெரிந்தும், சொந்த நலன்களுக்காக சிலர் இந்த மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்க துணிந்து விட்டனர்.

பொதுவேட்பாளர் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள இந்த தரப்பினர், அண்மையில் யாழ் வணிகர் கழகம், கூட்டுறவு சங்கத்தினரை சந்தித்து பேசியிருந்தனர். கூட்டுறவு சங்கத்தினர் பொதுவேட்பாளருக்கு ஆதரவளிப்பதாக பகிரங்க அறிவித்தல் வெளியானது. யாழ் வணிகர் கழகமும் அதே நிலைப்பாடுதான். ஆனால் அதை இப்போதே அறிவிப்பதை அவர்கள் விரும்பவில்லையாம். அவர்கள் வணிகர்கள் அல்லவா. இது தமிழ் தேசிய வணிகம்.

தமிழ் பொதுவேட்பாளருக்கு தற்போது உகந்த சூழல் இல்லையென்பது, சாதாரண அரசியலறிவு உள்ள அனைவருக்கும்- கடந்த தேர்தல் முடிவுகளை ஒப்பிடுமளவுக்கு எண் கணித அறிவுள்ள அனைவருக்கும் புரியும். தோல்வியடையும் களத்தில் ஆடாமல் இருப்பதும் வெற்றிதான் என்ற எளிய அணுகுமுறையையும் சுட்டிக்காட்டினோம்.

பொதுவேட்பாளர் என்ன கொள்கையின் அடிப்படையில் நிறுத்தப்பட போகிறார்? பொதுவேட்பாளருக்கு மக்கள் அமோகமாக வாக்களித்து விட்டார்கள் என வைத்தாலும், அதை வைத்து அடுத்த என்ன செய்யப் போகிறார்கள்? அந்த அரசியல் போராட்டத்தை யார் தலைமை தாங்க போகிறார்கள்? மக்கள் வாக்களிக்காமல் அரசியல் தோல்வி ஏற்பட்டால் அடுத்து என்ன செய்யப் போகிறார்கள்? அந்த தோல்விக்கு யார் பொறுப்பேற்கப் போகிறார்கள்?- இவ்வாறு பல கேள்விகளை எழுப்பியிருந்தோம்.

பொதுவேட்பாளர் பிரச்சாரகர்கள் யாருமே அதற்கு பதிலளிக்கவில்லை. காரணம்- விடை அவர்களுக்கும் தெரியாது என்பதே உண்மை. விடை சொல்ல முடியாத யாழ்ப்பாணத்து அரிஸ்டோட்டில்கள்- பொதுவேட்பாளரை எதிர்ப்பவர்கள் அறிவில்லாதவர்கள் என்று கட்டுரை எழுதுகிறார்கள்.

பொதுவேட்பாளர் பிரச்சாரகர்களான யாழ்ப்பாண அரிஸ்டோட்டில்கள் தம்மைத்தாமே சில கேள்விகளை கேட்டுக்கொள்ள வேண்டும்.

இந்த அரிஸ்டோட்டில்கள் யாழ்ப்பாணத்துக்கு வரும் சில தூதர்களை சந்திக்கிறார்கள்… தூதரகங்களில் பணம் பெற்று எழுதுகிறார்கள், பேசுகிறார்கள், தேர்தல் காலங்களில் தமிழ் மக்களுக்கு வேட்பாளர்களை அறிமுகம் செய்கிறார்கள். தமிழ் மக்களுக்கு தேர்தல் காலங்களில் வேட்பாளர்களை அறிமுகம் செய்வது மட்டும்தான் இவர்களின் வேலையா?

இவர்களில் யார் இம்முறை வீதிகளில் நின்று முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறினார்கள்? அல்லது குடித்தார்கள்?… காணி சுவீகரிப்பு, காணாமல் ஆக்கப்பட்டவர்கள், நினைவுதின உரிமை என மாதம் மூன்று போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இதில் எந்த போராட்டங்களில் இவர்கள் கலந்து கொண்டனர்?

அல்லது, கடந்த 40 வருடங்களில் இவர்களின் ஏதேனுமொரு போராட்டப் பங்களிப்பு உள்ளதா?

இந்த அரிஸ்டோட்டில்கள் அரசவை புலவர்களை போல, அந்தந்த சீசனிற்கு தக்கதாக எழுதியும், பேசியும் வாழ்க்கையை ஓட்டிவிட்டு, தலையில் துண்டைப் போட்டுக்கொண்டு தப்பியோடியதை விட வேறென்ன செய்தார்கள்?

1976இல் வட்டுக்கோட்டை தீர்மானத்தை நிறைவேற்றிய தமிழர் விடுதலைக் கூட்டணியினர், அடுத்த 5 வருடங்களின் பின்னர் அந்த தீர்மானத்தின் பிள்ளைகளாலேயே இலக்கு வைக்கப்பட தொடங்கினார்கள். சுதந்திர தமிழீழத்துக்கான பிரகடனம் செய்த அந்த தலைவர்கள், ஒன்றரை தசாப்தத்துக்கும் அதிக காலமாக தமது சின்னத்தில் சுதந்திரமாக வடக்கு, கிழக்கில் அரசியல் செய்யவோ, தேர்தலில் போட்டியிடவோ முடியாமல் திண்டாடினார்கள். பின்னர் பிரபாகரன் வழங்கிய மதிய போசனத்தில் ஆனையிறவு இறால் சாப்பிட்டே பாவமன்னிப்பு பெற்றனர்.

ஒப்பீட்டளவில் அரசியல் பலமிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியே, தான் முன்னெடுத்த அரசியலில் அள்ளுண்டு போனது. இன்று தமிழர்களை திரட்டப் போவதாக கூறும் உதிரிகளிடம் எந்த அரசியல் பலமுமில்லை. பொதுவேட்பாளரை ஆதரிக்கும் அரசியல் கட்சிகளும் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாதவை.  இந்த தரப்பினர் எதிர்கால தேர்தல்களில் வெற்றிபெறவும், அரிஸ்டோட்டில்கள் தாம் பெற்ற பணத்திற்காகவும், அரசியல் கட்சிகளை வழிநடத்துகிறோம் என்ற வெட்டி பந்தாவுக்காகவும் மட்டுமே முன்னெடுக்கப்படும் தமிழ் பொதுவேடே்பாளர் வெற்றியடையாத கோசம் என்ற போதும், அதன் எதிர்மறை விளைவுகளையும் ஆராய வேண்டும். 1976 இல் மக்களை திரட்ட வட்டுக்கோட்டை பிரகடனம் போல, 2024 இல் மக்களை திரட்ட தமிழ் பொதுவேட்பாளர் நிறுத்தப்படுகிறார். தமிழ் பொதுவேட்பாளரை நிறுத்தக் கோருபவர்களின் அடிமனதில் தமிழீழ ஆசையிருக்கலாம். அதற்காக அவர்கள் உழைக்கக்கூடும். ஆனால், ஆயுதப் போராட்டம் ஒன்றின் மூலமாக அல்லாமல், தனிநாட்டை அடைய முடியாது. தனிநாடு எங்கள் இலக்கல்ல என யாழ்ப்பாணத்து அரிஸ்டோட்டில்கள் கூறினால், அதற்கடுத்த இப்போதைக்கு சாத்தியமான தீர்வுகள் அனைத்துமே- ஜனாதிபதி முறைமையின் கீழானவையே. ஆகவே, எந்த தீர்வை பெறுவதானாலும், பெற்றாலும்… நாம் ஜனாதிபதி தேர்தலை எதிர்கொண்டே ஆக வேண்டும். தமிழீழத்தை தவிர்ந்த வேறெந்த தீர்வை பெற்றாலும் எதிர்கொண்டே ஆக வேண்டிய ஜனாதிபதி தேர்தலை எப்படி புத்திசாலித்தனமாக அணுகுகிறோம் என்பதே தமிழ் சமூகத்தினதும், தமிழ் தேசியத்தினதும் வெற்றி.

தமிழ் தேசிய அரசியலில் இருந்து மக்கள் வேகமாக விலகிச் செல்கிறார்கள், மக்கள் மதமாக, சாதியாக, ஊராக பிரிந்து நிற்கிறார்கள்- அவர்களை ஒன்றிணைக்கும் சர்வரோக நிவாரணியே தமிழ் பொதுவேட்பாளர் என, அதன் பிரசாரகர்கள் சொல்கிறார்கள்.

தமிழ் மக்கள் தமிழ் தேசிய பரப்பிலிருந்து விலகிச் செல்வதாக குறிப்பிடுவது தவறானது. அவர்கள் தமிழ் தேசிய கட்சிகளில் அயர்ச்சியடைந்துள்ளனர், தமிழ் தேசியம் குறித்த குழப்பத்தில் உள்ளனர் என ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தோம்.

இதையொட்டி இன்னொரு முக்கிய விடயத்தையும் குறிப்பிட வேண்டும். தமிழ் மக்களின் இனவிடுதலை போராட்டம் மிக நீண்டதுடன், பெரும் இழப்புக்களையும் சந்தித்தது. இது மக்களை அயர்ச்சியடைய வைத்துள்ளது. அரசியல் உரிமைக்காக தமது சக்திக்கு மீறிய விலையை கொடுத்து விட்டதாக இன்றைய நவீன உலகத்தின் சவால்களை சந்திக்கும் போது, அவர்கள் உணர்கிறார்கள். அதனால்தான் மிகப்பெரும்பாலான முன்னாள் போராளிகள் இன்றைய அரசியல் விவகாரங்களில் இருந்து ஒதுங்கியுள்ளனர்.

மக்களை தியாகம் செய்ய கோரும், வழிநடத்துபவர்கள் பாதுகாப்பாக இருந்து கொண்டு மக்களை அணிதிரட்டும் அரசியல் செய்ய முயன்றதே, கடந்த 15 ஆண்டுகளில் தமிழ் தேசிய அரசியலின் வீழ்ச்சிக்கு காரணம்.

இப்பொழுது தமிழ் மக்களை திரட்சியடைய செய்யப் போவதாக கூறும் பொதுவேட்பாளர் பிரச்சாரகர்களும் இதையேதான் வேறுவார்த்தைகளில் செய்ய முயல்கிறார்கள். அதாவது- அவர்கள் எந்த ரிஸ்க்கும் எடுக்காமல், பாதுகாப்பான வாழ்க்கையை அமைத்துக் கொண்டு, மூடிய அறைக்குள் கூட்டங்களை நடத்தி, மக்களை திரட்டி போராடப் போகிறார்களாம். பொதுவேட்பாளர் பிரசாரகர்கள் அண்மையில் நடத்திய சந்திப்பொன்றில், பொதுவேட்பாளருக்கு மக்கள் ஆதரவளிப்பார்களா என கட்சியொன்றின் பிரதிநிதி சந்தேகம் எழுப்ப, அதற்கு பிரச்சாரகள் சொன்ன பதில்- “ஓம். வாக்களிக்க வைக்கலாம். மக்களை உசுப்பேற்றி வாக்களிக்க வைக்கலாம்“ என்றார்கள்.

வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றியவர்களுக்கும், பொதுவேட்பாளர் பிரச்சாரகர்களுக்கும் உள்ள ஒரே வேற்றுமை- உருவ வேற்றுமை மாத்திரமேயென்பதற்கு இதுவே உதாரணம்.

தாம் பாதுகாப்பான வாழ்க்கையை அமைத்துக் கொண்டு, மக்களை உசுப்பேற்றி அணி திரட்டும் ஆபத்தான அரசியலை- தமிழ் தேசியத்தின் பெயரால் செய்ய முயல்கிறார்கள். கடந்தகாலம் பற்றிய எந்த பட்டறிவுமில்லாமல் செய்யப்படும் இந்த அரசியலை ஆதரிக்கும் அரசியல் கட்சிகள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும். குடிகாரன் பேச்சைப் போல இந்த குடிமைச்சமூகத்தின் பேச்சிற்கு எந்த வலுவுமில்லை. பொதுவேட்பாளர் விவகாரத்தில் மக்கள் பிரதிநிதித்துவமுடைய அரசியல் கட்சிகள் இதுவரை பங்காளிகளாவில்லை. அவர்கள் சரியான முடிவை தொடராமல் விட்டால், வரலாற்று கறையை சுமப்பார்கள்.

மற்றும்படி, இப்போது பொதுவேட்பாளரை ஆதரிப்பவர்களை பற்றி கவலையடைய வேண்டியதில்லை. அவர்கள் யாரும் மக்கள் பிரதிநிதித்துவத்தை கொண்டிராதவர்கள். அவர்களுக்கு அப்பொழுது வேறுவேலைகளுமில்லை. அதனால் பொழுதுபோக்கும் இருக்காது. எவ்வளவு காலத்துக்குத்தான் வீடுகளில் இருந்து அறிக்கை விட்டுக் கொண்டிருப்பது?. அதனால் ஆர்வமாக இந்த களத்தில் ஆடத் தொடங்கியுள்ளனர். இந்த களத்தின் மூலம் மீண்டும் தேர்தல்களில் வெல்ல ஏதேனும் வாய்ப்பிருக்கலாம் என்பது அவர்களின் நம்பாசை.

தம்மை பிரமுகர்களாக மற்றவர்கள் கருத வேண்டும், அரசியல் கட்சிகளை வழிநடத்துகிறோம் என்ற வெட்டி பந்தாவுக்காக- சிவில் சமூகமென்ற பெயரில் யாழ்ப்பாண அரிஸ்டோட்டில்கள் பொதுவேட்பாளரை நிறுத்த முயல… தேர்தலில் வெற்றியடைய ஏதேனும் வழி கிடைக்குமா என்ற நோக்கத்துடன், தோல்வியடைந்த அரசியல்வாதிகள் அதை ஆதரிக்கிறார்கள் என்ற எளிய உண்மை புலப்படுத்தும் செய்தி எவ்வளவு ஆபத்தானது? உயிர்களாலும், சதைகளாலும், இரத்தம், வியர்வை, கண்ணீரால் கட்டமைக்கப்பட்ட தமிழ் மக்களின் விடுதலைப் போராட்ட அரசியல் என்பது, வெற்று பந்தா, தேர்தல் வெற்றிகளுக்காகவெல்லாம் தரப்பினர் கையாளும் விதமான பலவீனமான அம்சங்களுடையது என்ற செய்தியையே இவர்கள் பரப்ப முயல்கிறார்கள்.

தமிழ் மக்களை ஒற்றுமைப்படுத்தப் போவதாகவும், மக்களை ஒற்றுமைப்படுத்த இதுதான் கடைசிச் சந்தர்ப்பம் என்றும் யாழ்ப்பாணத்து அரிஸ்டோட்டில்கள் கூறுகிறார்கள்.

மக்களை ஒற்றுமைப்படுத்த மேற்கொள்ளும் முயற்சி- சீழ் பிடித்த காயத்தை மறைக்க தோலை இழுத்து தைக்கும் தவறான முயற்சியன்பதை ஏற்கெனவே சுட்டிக்காட்டியிருந்தோம். மக்களை ஒற்றுமைப்படுத்துவதற்கு முன்னர் கட்சிகள் சிவில் அமைப்புக்களை வலுப்படுத்துவதே அவசியமானது. தூதரகங்களில் பணம் வாங்கிக் கொண்டு எழுதும், பேசும் யாழ்ப்பாணத்து அரிஸ்டோட்டில் வகையறாக்களை அகற்றி, உண்மையான செயற்பாட்டியக்கமொன்றை கட்டியெழுப்ப வேண்டும். தெளிவான அரசியல் வரைபடமொன்றை தயாரித்து, அரசியல் கட்சிகளிடையே ஒருமித்த நிலைப்பாடு ஏற்படுத்தப்பட வேண்டும். மக்களை தியாகம் செய்ய கோரும் அரசியலுக்கு மாற்றாக, தலைவர்கள் அதை செயற்படுத்த வேண்டும்.

இதை செய்வது எங்களுக்கு கஸ்டம் என்பதால், தேர்தல் வெற்றிக்காக மக்களை ஒன்றிணைக்க போகிறோம் என மேற்கொள்ளப்படும் பொதுவேட்பாளர் முயற்சி வெற்றியீட்டினால், தமிழ் மக்கள் மேலுமொரு அரசியல் பின்னடைவையே சந்திப்பார்கள்.

What’s your Reaction?
+1
3
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2

இதையும் படியுங்கள்

யாழில் தொடர் உயிரிழப்புக்களுக்கு எலிக்காய்ச்சலே காரணம்: பரிசோதனையில் உறுதியானது!

Pagetamil

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர்கள் ஒதுங்கி, புதியவர்களுக்கு வழிவிட யோசனை: புதிய அணிகள் இணைய பேச்சு!

Pagetamil

சிரியா முன்னாள் ஜனாதிபதி அசாத் பற்றிய மர்மம் விலகியது: ரஷ்யா புகலிடம் அளித்துள்ளது!

Pagetamil

சிரியா தலைநகரும் கிளர்ச்சியாளர்களிடம் வீழ்ந்தது: அசாத் குடும்பத்தின் 50 ஆண்டுகால ஆட்சி முடிந்தது!

Pagetamil

திருத்தப்பட்ட அரசி விலைகள் அறிவிப்பு!

Pagetamil

Leave a Comment