2021 மே 3 முதல் மே 20 வரை இந்தியாவில் முழுமையான ஊரடங்கு விதிக்கப்படுவதாகக் கூறி சமூக ஊடகங்களில் வைரல் பதிவுகள் வெளியானதையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையின் மத்தியில் அரசாங்கம் இது குறித்த குழப்பத்தை நீக்கியது.
மார்ச் இறுதியில் ஆரம்பித்து, மகாராஷ்டிரா உள்ளிட்ட நாட்டின் குறிப்பிட்ட சில மாநிலங்களில் கொரோனா இரண்டாவது அலை வேகமெடுக்கத் தொடங்கியது. பின்னர் இது படிப்படியாக நாடு முழுவதும் பரவியது.
இறையில் நிலைமையில் டெல்லி உள்ளிட்ட வட இந்தியாவின் பல பகுதிகளில், மருத்துவ ஆக்சிஜன், படுக்கைகள் மற்றும் மருந்துப் பொருட்கள் பற்றாக்குறை மிகப்பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இந்தியா கொரோனா இரண்டாவது அலையில் தத்தளித்து வரும் நிலையில், பல நாடுகளும் இந்தியாவுக்கு கைகொடுத்து உதவி வருகின்றன.
இந்நிலையில் மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில், மாநில அரசுகள் முழு ஊரடங்கு, இரவு ஊரடங்கு, வார இறுதி ஊரடங்கு என நிலைமைக்கு ஏற்றவாறு கட்டுப்பாடுகளை விதித்து, கொரோனாவை கட்டுப்படுத்தும் பணியை முடுக்கி விட்டுள்ளன.
இதற்கிடையே, ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிந்துள்ள நிலையில் நாளை மறுநாள் மே 2’ஆம் தேதி ஐந்து மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன் மத்திய அரசு மே 3’ஆம் தேதி முதல் மே 20’ஆம் தேதி வரை நாடு தழுவிய முழு ஊரடங்கை அறிவிக்க உள்ளதாக சமூக ஊடகங்களில் பதிவுகள் காட்டுத் தீயாய் பரவி வருகின்றன.
இந்நிலையில், மத்திய அரசின் கீழ் இயங்கும் பத்திரிகை தகவல் பணியகம் (பிஐபி) ஒரு உண்மைச் சரிபார்ப்பில், இந்தியாவில் மே 3’ஆம் தேதி முதல் முழுமையான ஊரடங்கை அரசாங்கம் விதிக்க உள்ளதாக வெளியான தகவல் முற்றிலும் போலியானது என்றும், மத்திய அரசு இதுபோன்ற எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
“சமூக ஊடகங்களில் வைரலாகிவிட்ட ஒரு பதிவில், மே 3 முதல் மே 20 வரை நாட்டில் முழுமையான ஊரடங்கு விதிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. #பிஐபி உண்மை சரிபார்ப்பு: இந்த கூற்று போலி. மத்திய அரசு அத்தகைய அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை.” என பிஐபி ஒரு ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது




