இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர், செயலாளர் தெரிவுக்காக நடந்த வாக்கெடுப்புக்களின் மூலம், கட்சி சில கூறுகளாக பிளவுபட்டுள்ளமையை யாரும் மறுதலிக்க முடியாது என வடமாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் இன்று (21) நடத்திய ஊடகச் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
அந்தச் சந்திப்பில் அவர் தெளிவுபடுத்திய விடயங்கள் பற்றி தெரிவித்தவை வருமாறு,
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கட்சியின் அமைப்பு விதி அல்லது யாப்பின் விதி 7 அ(3) இன்படி பொதுச்சபையினால் தெரிவு செய்யப்படுவார்.
அமைப்பு விதி 13(ஆ) பொதுச் செயலாளரின் கடமைகள் மற்றும் பொறுப்புக்களை விபரிக்கிறது. இதன்படி, இவர் கட்சியின் பிரதம செயல் ஆற்றும் உத்தியோகத்தர் ஆவதுடன் கட்சியின் சகல கிளைகளை ஒருமுகப்படுத்தி இணைப்பதுடன் மத்திய அலுவலகத்திற்கு பொறுப்பாகவும் இருப்பார். மிகப் பிரதானமாக பொதுச் செயலாளர் எல்லா விடயங்களிலும் தலைவருக்கு உதவி செய்வதுடன் தலைவரோடு ஆலோசித்து கட்சியின் கருமங்களை நடத்துவார்.
விதி 9(அ)வின்படி கட்சியின் முதல்வர் தலைவரே. இதன்படி நிறைவேற்று அதிகாரம் தலைவருக்குரியது. விதி 13(அ)02 இன்படி பொதுச் செயலாளருக்கும் இணைப் பொருளாளருக்கும் கட்சியை நடத்தும் விடயத்தில் ஆலோசனை கூறுவதும் வழி நடத்துவதும் தலைவரின் கடமையும் அதிகாரமும் ஆகும்.
இவற்றின்படி பொதுச் செயலாளர் ஒரு நிர்வாக அதிகாரியே தவிர தனித்துவமான நிறைவேற்று அதிகாரம் கொண்டவரல்லர் என்பது தெளிவு.
பொதுச் செயாலளர் ஒருவர் தாமாக பதவி விலகினாலோ, மத்திய செயற்குழுவினால் பதவி நீக்கம் செய்யப்பட்டாலோ அல்லது மரணித்தாலோ பதவி வறிதாக்கப்பட்டு வெற்றிடமாகும்.
விதி 13 (ஈ) 02 இன்படி பொதுச் செயலாளர் தமது கடமைகளை நிறைவேற்ற முடியாதவிடத்து துணைச் செயலாளர் அவரது கடமைகளை பதில் கடமை மூலம் நிறைவேற்றுவார். இது ஒரு நடைமுறை ஒழுங்காகும்.
எனினும் பொதுச் செயலாளர் பதவி வறிதாக்கப்பட்டு வெற்றிடமானால் அது விதி 13(உ)வின்படி மத்திய செயற்குழுவினால் நிரப்பப்படும். வெற்றிடம் பொதுச்சபையினால் தான் தெரிவுசெய்யப்படும் என்ற பரவலாக கூறப்படும் கருத்து தவறானது.
மேலும் 2024 ஆம் ஆண்டு தேர்தல்கள் ஆண்டாக இருப்பதால் தேசிய பட்டியல் போன்ற விடயங்களில் தனித்து அதிகாரம் உள்ளவர் என்பதால் இப்பதவி முக்கியத்துவம் பெறுவதாக கூறுவதும் தவறு.
இந்தக் கருத்து 2020 ஆம் ஆண்டின் பாராளுமன்ற தேசியப் பட்டியல் நியமனத்தை அப்போதைய பொதுச் செயலாளர் கடசியின் முறைப்படியான அங்கீகாரம் எதுவும் இல்லாம் தலைவரின் ஒப்புதலின்றி மேற்கொண்டதை உதாரணமாக கொண்டதன் அடிப்படையில் எழுந்திருக்காலம். அதுவும் தவறான கருத்து. கட்சித் தலைவரினதும் கட்சியின் அங்கீகாரமும் பெறாத அந்த நியமனத்தை இரண்டு நாட்களுக்குள்ளே ஆட்சோபித்திருந்தால் அந்த நியமனத்தை இரத்துச் செய்திருக்கலாம். ஆனால் அது பிரதேச வாதத்திற்கு இடமளிக்கும் என்பதாலேயே அவ்வாறு செய்யவில்லை.
கட்சியின் தலைவர் உள்ளிட்ட சகல பதவிகளுக்குமான தெரிவு வாக்கெடுப்பு போட்டி மூலம் இடம்பெறுவது முழுமையாக தவிர்க்கப்படல் வேண்டும் என்ற எனது ஆணித்தரமான கருத்தை நான் பதிவு செய்ய விரும்புகிறேன். அவ்வாறுதான் கடந்த 74 வருடங்களாக நிகழ்ந்து வருகின்றது என்றும் கூறினார்.
மேலும், இம்முறை இடம்பெற்ற வாக்கெடுப்பு தெரிவு முலம் கட்சி சில கூறுகளாக பிளவுபட்டுள்ளமையை யாரும் மறுதலிக்க முடியாது. இந்த விடயத்தில் ஒரு பிரபல தேசிய பத்திரிகையின் நீண்ட கால ஆசிரியரான வீரகத்தி தனபாலசிங்கம் தமது கட்டுரை ஒன்றில்
“கட்சியின் தலைவரை ஏகமனதாகவே தெரிவு செய்யும் பாரம்பரியத்தை தந்தை செல்வா ஏன் உறுதியாகக் கடைப்பிடித்து வந்தார் என்பது இப்போது எல்லோருக்கும் புரியும். தலைவர் பதவிக்கு அந்த ஆனானப்பட்ட அமிர்தலிங்கமும் இராசதுரையும் போட்டி போடத் தலைப்பட்டபோது அவர்களைச் சாதுரியமாகக் கையாண்ட தந்தை செல்வா எங்கே…..” என்று கூறிய கருத்துடன் நான் முழுமையாக உடன்படுகிறேன் என்றும் ஜனநாயகம் என்ற பெயரில் கட்சிக்குள் பிளவை ஏற்படுத்தக்கூடிய எந்த பதவிக்கும் வாக்கெடுப்பு தேர்தல் கட்சி நலன் கருதி இடம்பெறக்கூடாது என்பதே எனது திடமான நிலைப்பாடு. அப்படி ஒரு நிகழ்வு இடம்பெற்றால் அதில் நான் நிச்சயமாக கலந்து கொள்ள மாட்டேன் என்பதையும் பதிவு செய்து கொள்கிறேன் என்றும் அந்த ஊடகச் சந்திப்பில் தெரிவித்தார்.