ற்றுலா ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதலாவது ரி20 ட் போட்டியில் இலங்கை அணி 4 ஓட்டங்களால் வெற்றி ப்பெற்றுள்ளது.
தம்புள்ளையில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது.
இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 160 ஓட்டங்களை பெற்றது.
துடுப்பாட்டத்தில் இலங்கை அணியின் முன்வரிசை வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் வீழ்ந்தாலும், அணித்தலைவர் வனிந்து ஹசரங்க அதிரடியாக மட்டையை சுழற்றி 32 பந்துகளில் 67 ஓட்டங்களை பெற்றார். சதீர சமரவிக்கிரம 25, தனஞ்ஜய டி சில்வா 24 ஓட்டங்களை பெற்றனர். இலங்கை கடைசி 4 விக்கெட்டுக்களையும் வெறும் 14 ஓட்டங்களில் இழந்தது.
பந்து வீச்சில் ஆப்கானிஸ்தான் அணி சார்பில் ஃபசல்ஹக் பாரூக்கி 3 விக்கெட்டுக்களையும், நவீன் உல் ஹக் மற்றும் அஸ்மத்துல்லா ஒமர்சாய் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 156 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது.
அந்த அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அணியின் தலைவர் இப்ராஹிம் சத்ரான் ஆட்டமிழக்காமல் அதிகபட்சமாக 67 ஓட்டங்களை பெற்றார்.
இலங்கை அணி சார்பில் பந்துவீச்சில் மதீஷ பத்திரன 4 விக்கெட்டுக்களையும், தசுன் சானக 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். கடைசி ஓவரில் ஆப்கான் வெற்றியீட்ட 11 ஓட்டங்கள் தேவைப்பட்டது. முன்னதாக 3 ஓவர்களில் 38 ஓட்டங்களை வாரி வழங்கியிருந்த பினுர பெர்னாண்டோ கடைசி ஓவரை வீசி, 6 ஓட்டங்களை மட்டுமே வழங்கியிருந்தார்.
ஆட்டநாயகன் மதீஷ பத்திரன.
இதன்படி மூன்று போட்டிகள் கொண்ட இந்த ரி20 தொடரில் 1-0 என இலங்கை அணி முன்னிலையில் உள்ளது.