25.4 C
Jaffna
December 24, 2024
Pagetamil
இந்தியா

ஜெயலலிதாவின் நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்க பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட தங்க, வைர நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்க‌ளை தமிழக‌ அரசிடம் ஒப்படைக்க கர்நாடக அரசுக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 1991-96-ம் ஆண்டு வரை தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மீது வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடி சொத்துக் குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து தமிழக லஞ்ச‌ ஒழிப்புத் துறை போலீஸார், ஜெயலலிதாவின் இல்லத்தில் நடத்திய சோதனையில் தங்க, வைர‌ நகைகள், வெள்ளிப் பொருட்கள், ரத்தின கற்கள், கைக்கடிகாரங்கள் உட்பட என ஏராளமான பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் கடந்த 2014-ம் ஆண்டு ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய நால்வருக்கும் தலா 4 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதமும், மற்ற மூவருக்கும் தலா ரூ.10 கோடி அபராதமும் விதித்தது. இவ்வழக்கின் மேல்முறையீட்டு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடந்தபோது, ஜெயலிதா உயிரிழந்தார். சசிகலா உள்ளிட்ட மூவரும் பெங்களூரு மத்திய சிறையில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தனர்.

இந்நிலையில், பெங்களூருவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி கடந்த ஆண்டு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில், கர்நாடக அரசின் கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விட வேண்டும். அந்த தொகையில் இவ்வழக்குக்காக கர்நாடக அரசு செலவு செய்த பணத்தை வழங்க வேண்டும். மீதியுள்ள பணத்தை மக்களின் நலத்திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என கோரினார்.

இதற்கிடையே, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா மற்றும் அவரது சகோதரர் தீபக் ஆகியோர் தனித்தனியாக மனுக்களை தாக்கல் செய்தனர். அதில், ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விடக்கூடாது. அவற்றை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரினர். இந்த மனுக்கள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், இவ்வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஹெச்.ஏ.மோகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “ஜெயலலிதாவின் வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட தங்க, வரை நகைகள் மற்றும் வெள்ளி பொருட்க‌ளை கர்நாடக அரசு ஏலம் விட அனுமதிக்க முடியாது. அதற்கு பதிலாக அந்த நகைகளை கர்நாடக அரசு, தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும்.

கர்நாடக அரசின் உள்துறை செயலர் மற்றும் போலீஸ் அதிகாரி மேற்பார்வையில் தமிழக அரசின் உள்துறை செயலாளர் மற்றும் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநரிடம் வழங்க வேண்டும். இந்த நகைகளை சரிப்பார்த்து பெற்றுக்கொள்ள தமிழக அரசு கூடுதலாக அதிகாரி ஒருவரையும் நியமிக்க வேண்டும். ஜெயலலிதா மீதான வழக்கை நடத்திய செலவினங்களுக்காக கர்நாடக அரசுக்கு தமிழக அரசு ரூ. 5 கோடி வழங்க வேண்டும்” என உத்தரவிட்டார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

12 இளைஞர்களை காதலித்து ஏமாற்றிய பெண்: 19 வயது இளைஞருடன் ஓட்டம்

Pagetamil

இன்ஸ்டா காதலால் விபரீதம்: நீரில் மூழ்கி 3 பேர் பலி!

Pagetamil

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் ஏன்? – மத்திய அரசு முன்வைக்கும் காரணங்கள்

Pagetamil

கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கர் கைது

Pagetamil

உலகப் புகழ்பெற்ற தபேலா மேதை ஜாகிர் உசேன் மறைவு

Pagetamil

Leave a Comment