ஐக்கிய மக்கள் சக்தியினால் தனது கட்சி உறுப்புரிமையை இரத்துச் செய்ய எடுத்த தீர்மானத்தை இரத்துச் செய்யும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை ஒத்திவைக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இந்த மனு மீதான விசாரணை இன்று காமினி அமரசேகர, குமுதுனி விக்கிரமசிங்க மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் நடைபெறவிருந்தது.
எவ்வாறாயினும், நீதியரசர் குழாமிலிருந்த குமுதுனி விக்கிரமசிங்க சுகயீனமுற்ற காரணமாக இந்த மனு மீதான விசாரணையை ஒத்திவைக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, மனு மீதான விசாரணையை பெப்ரவரி 9ஆம் திகதிக்கு ஒத்திவைக்க நீதிமன்றம் முடிவு செய்தது.
இருபதாவது அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்றுவதற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போது, திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்ததன் மூலம் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக குற்றம் சுமத்தி, டயானா கமகேவின் கட்சி உறுப்புரிமையை பறிக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்திருந்தது.
டயானா கமகே இந்த தீர்மானம் சட்டத்திற்கு எதிரானது எனவும் அதனை செல்லுபடியற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும் எனவும் கோரியிருந்தார்.