இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
செஞ்சுரியன் கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் நாணயச்சுழற்சியை இழந்து முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 245 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து தென்னாபிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 408 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. டீன் எல்கர் 185 ரன்கள் விளாசினார். மார்கோ யான்சன் 84 ரன்கள் எடுத்தார். இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக 4 விக்கெட்களை கைப்பற்றி இருந்தார் பும்ரா.
163 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது இந்தியா. விராட் கோலி, 82 பந்துகளில் 76 ரன்கள் எடுத்து ஆறுதல் தந்தார். கில், 26 ரன்கள் எடுத்திருந்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர். 34.1 ஓவர்களில் 131 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது இந்தியா. அதன் மூலம் தென்னாபிரிக்கா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இரண்டு போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது தென்னாபிரிக்கா.