நானாட்டான் – முத்தரிப்புத்துறை பிரதான வீதியில் நேற்று (25) மாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் மேலும் ஒரு இளைஞர் படுகாயமடைந்த நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள முத்தரிப்புத்துறை கிராமத்தில் இருந்து நானாட்டான் நோக்கி மோட்டார் சைக்கிள் ஒன்றில் இரண்டு இளைஞர்கள் பயணித்துள்ளனர். வீதியில் உள்ள வளைவு ஒன்றில் மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து பாலத்தினுள் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன் போது மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற முத்தரிப்புத்துறை கிராமத்தைச் சேர்ந்த வயது 28 வயதுடைய இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததோடு, மற்றைய இளைஞர் படுகாயமடைந்துள்ளார்.
படுகாயமடைந்த இளைஞர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதோடு, உயிரிழந்தவரின் சடலம் மன்னார் பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முருங்கன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.