இந்திய அணியின் முன்னாள் கப்டனான தோனி தன்னுடைய திருமணத்திற்கு ரெய்னாவை எப்படி அழைத்தார் என்பது குறித்து ரெய்னாவே பேசியிருக்கும் ஒரு வீடியோ இணையத்தில் பயங்கர வைரலாக ஓடிக்கொண்டிருக்கிறது.
தோனியும் ரெய்னாவும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் ஏறக்குறைய ஒரே சமயத்தில்தான் இந்திய அணியில் அறிமுகமானார்கள். அதேமாதிரி சென்னை அணியிலும் ஆரம்பத்திலிருந்தே ஒன்றாகப் பல ஆண்டுகளுக்கு ஆடியிருந்தார்கள். தன்னுடைய சுயசரிதை புத்தகத்தில் தோனியைத் தன்னுடைய மூத்த சகோதரர் போன்றவர் என ரெய்னா புகழ்ந்திருப்பார்.
2010 இல் தோனிக்கும் சாக்ஷிக்கும் திருமணம் நடந்திருந்தது. இந்நிலையில் இந்த திருமணத்திற்கு தோனி தன்னை எப்படி அழைத்தார் என்பது குறித்து ரெய்னாவே பகிர்ந்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது, “ஒரு நாள் தோனி என்னை போனில் அழைத்தார், ‘எங்கே இருக்கிறாய்?’ எனக் கேட்டார். ‘நான் லக்னோவில் இருக்கிறேன்’ எனப் பதில் கூறினேன். அதற்கு அவர், ‘டேராடூனில் எனக்குத் திருமணம் நடக்கப் போகிறது. இதை யாரிடமும் சொல்லிவிடாதே. சீக்கிரமாகக் கிளம்பி வா. நான் உனக்காகக் காத்திருப்பேன்’ எனக் கூறினார்.
நானும் உடனடியாக உடுத்தியிருந்த இயல்பான உடையோடு கிளம்பி விட்டேன். அங்கு சென்று தோனியின் உடை ஒன்றை வாங்கி அணிந்துதான் திருமணத்தில் கலந்துகொண்டேன்” என ரெய்னா கூறியிருக்கிறார்.
இந்த வீடியோதான் இப்போது இணையத்தில் வைரலாகப் பரவிவருகிறது.
ஜூலை 4, 2010 இல் டேராடூனில் நடந்த தோனியின் திருமணம் அத்தனை பிரமாண்டமாக நடந்திருக்கவில்லை. தோனிக்கு மிகவும் நெருக்கமான உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே அந்தத் திருமணத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வை பற்றிதான் ரெய்னா இப்போது பகிர்ந்திருக்கிறார்.
ரெய்னா கிரிக்கெட்டிலிருந்து முழுமையாக ஓய்வு பெற்றுவிட்டாலும் தோனியும் ரெய்னாவும் அடிக்கடி சந்தித்துக் கொள்வது உண்டு. சமீபத்தில் தோனியின் வீட்டில் அவர் ஏற்பாடு செய்திருந்த இரவு விருந்தில் ரெய்னா பங்கேற்ற படங்களும் இணையத்தில் வைரலாகின.