இந்தியாவுடனான விமான சேவையை ரத்து செய்த அவுஸ்திரேலியா அரசு, ஐபிஎல்லில் விளையாடி வரும் தங்கள் நாட்டு வீரர்களுக்கு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
உலக நாடுகளை பின்னுக்கு தள்ளி, ஒருநாள் சராசரி கொரோனா பாதிப்பில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. நேற்று 3.50 லட்சத்திற்கும் அதிகமான பாதிப்புகள் பதிவாகிய நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 3.23 லட்சமாக குறைந்துள்ளது. அதேபோல, தொற்று பாதிப்பிற்கு உள்ளாகி 2,771 பேர் உயிரிழந்துள்ளனர். 2,51,827 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.
இதனிடையே, இந்தியா – அவுஸ்திரேலியா இடையே பயணிகள் விமான சேவை மே 15ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவித்தது. இந்தியாவில் தொற்று பரவலின் வேகம் அதிகரித்து இருப்பதால், அவுஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிஸன் இந்தத் தடையை வெளியிட்டார்.
இந்த நிலையில், இந்தியாவில் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வரும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள், தங்களின் சொந்த செலவில் மீண்டும் தாயகம் திரும்ப வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார். ஏற்கனவே, ஆண்ட்ரூ டை, கேன் ரிச்சர்ட்சன், ஆடம் ஸாம்பா ஆகிய அவுஸ்திரேலிய வீரர்கள், ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளனர்.
இதனிடையே, ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு ஆஸ்திரேலிய வீரர்கள், தாயகம் திரும்ப தனி விமானத்தை அனுப்ப கிறிஸ் லின் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்திற்கு கோரிக்கை விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.