இலங்கையின் சிசுக்களை தத்தெடுப்பதற்காக வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்வதில் ஈடுபட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் குழுவொன்று தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட நோர்வே பிரஜை ஒருவரிடமிருந்து வெளிநாட்டுக்கு சிசு கடத்தல் மோசடி தொடர்பில் முறைப்பாடு கிடைத்துள்ளதாகவும், அதன் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர்.
இலங்கை சிசுக்களை வெளிநாட்டவர்களுக்கு தத்தெடுப்பதற்காக சட்டவிரோதமாக விற்பனை செய்யும் மோசடி தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸிடம் வியாழக்கிழமை (23) அறிவித்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நீதிமன்றில் முன்வைக்கப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், கண்டியில் இருந்து வெளிநாட்டவர்களுக்கு தத்தெடுப்பதற்காக விற்பனை செய்வதற்காக இந்த சிசு கடத்தல் நடவடிக்கையை திட்டமிட்ட குற்றவாளிகள் கும்பல் மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. . குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்வைத்த உண்மைகளை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான், உடனடியாக விசாரணைகளை மேற்கொண்டு, மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் அனைவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளார்.