விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் கருத்துக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
நற்பெயரை சேதப்படுத்தும் அமைச்சரின் அவதூறு கருத்துகளுக்கு பதிலடி கொடுப்பதன் மூலம் தனது நற்பெயரையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாக்க தீர்க்கமான நடவடிக்கை எடுத்துள்ளதாக கிரிக்கெட் அமைப்பு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
எனவே இலங்கை கிரிக்கெட் நிறுவனம் சார்பில் 2.4 பில்லியன் ரூபா நட்டஈடு வழங்கக் கோரி கடந்த (13ஆம் திகதி) இலங்கை கிரிக்கெட் தலைவர், உப தலைவர் மற்றும் பொருளாளர் ஆகியோர் இணைந்து கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தனர்.
விளையாட்டுத்துறை அமைச்சரின் தொடர்ச்சியான பொய்யான மற்றும் தீங்கு விளைவிக்கும் அறிக்கைகளை பரப்புவது இலங்கை கிரிக்கெட்டின் நன்மதிப்பை உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் கணிசமான அளவில் சேதப்படுத்தியுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உயர்மட்டத் தலைமையானது அதன் அனைத்து முயற்சிகளிலும் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் நியாயமான ஆட்டத்தை உறுதிப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் இருப்பதாக தொடர்புடைய அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விளையாட்டு அமைச்சரினால் இலங்கை கிரிக்கெட்டிற்க்கு ஏற்பட்டுள்ள தேவையற்ற பாதிப்பை சரிசெய்வதே இந்த சட்ட நடவடிக்கையின் நோக்கமாகும்.
கிரிக்கெட் நிறுவனம் மற்றும் அதன் உறுப்பினர்களின் நற்பெயரைப் பாதுகாக்க இந்த நடவடிக்கை அவசியம் என இலங்கை கிரிக்கெட் நிர்வாகக் குழு நம்புவதாகவும் அவர்கள் தமது அறிவிப்பில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
வீரர்கள், அதிகாரிகள் மற்றும் விளையாட்டு ரசிகர்களுக்கு சாதகமான சூழலை உருவாக்குவதன் மூலம் விளையாட்டின் உயிர்ச்சக்தியை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவதாக கிரிக்கெட் நிறுவனம் தனது அறிவிப்பில் சுட்டிக்காட்டியுள்ளது.
விளையாட்டு அமைச்சருக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்டுள்ள சட்ட நடவடிக்கைகள், அதன் அமைப்பின் கொள்கைகளைப் பாதுகாப்பதற்கும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளில் இருந்து அதன் பங்குதாரர்களைப் பாதுகாப்பதற்கும் அர்ப்பணிப்புடன் இருப்பதை அடிக்கோடிட்டுக் காட்டுவதாக கிரிக்கெட் அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த சட்ட நடவடிக்கைகளின் ஊடாக இலங்கை கிரிக்கெட் விளையாட்டு மற்றும் அதன் ஆதரவாளர்களின் நலன்களுக்கு முன்னுரிமை வழங்கும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.