சொந்த நாட்டு மக்களையே பொஸ்பரஸ் குண்டுகள் மூலமாகவும், கொத்துக் குண்டுகள் மூலமாகவும், வான்வழிக் குண்டுகளாலும் கொன்றொழித்த இலங்கை அரசுக்கு பாலஸ்த்தீன- இஸ்ரேல் யுத்தத்தினை நிறுத்தும் படி கோருவதற்கு எந்தவிதமான யோக்கியதையோ அருகதையே இல்லை என்று மட்டக்களப்பு மாவட்ட பாராளுமுன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.
இன்றைய தினம் (20) மட்டக்களப்பிலுள்ள அவரது அலுவலகத்தில் நடத்திய ஊடக சந்திப்பில் மேலும் தெரிவித்ததாவது.
வடக்கு கிழக்கு தழுவிய ஹர்த்தாலுக்கு தமிழ்த் தேசியக் கட்சிகள் அழைப்பு விடுத்திருக்கிறார்கள். தமிழ் தேசிய கட்சிகளின் அழைப்பை ஏற்று ஹர்த்தாலை அனுஷ்டித்த உறவுகளுக்கு நான் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன்.
அதுமாத்திரமல்லாமல் உண்மையிலேயே முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியாக இருந்து தனக்கு அச்சுறுத்தல் எனக் கூறி நாட்டை விட்டு வெளியேறிய நீதவானுக்காக மாத்திரம் அல்லாமல் வடக்கு கிழக்கிலே நடைபெறும் அத்துமீறல்களுக்கும் பௌத்தமயமாக்கல்களுக்கும் மட்டக்களப்பில் நடைபெறும் மேய்ச்சல் தரைப்பிரச்சினை அனைத்தையும் உள்ளடக்கியே நாங்கள் இன்றைய தினம் தமிழ் பேசும் மக்களை ஹர்த்தாலை அனுஷ்டிக்கும்படி கேட்டிருந்தோம். அந்த வகையில் அனைத்து மக்களுக்கும் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறோம்.
அத்தோடு இன்றைய தினம் மின்சாரக் கட்டணம் 18 வீதத்தினால் உயர்த்தப்படுகின்றது. அதாவது சர்வதேச நாணய நிதியம் இலங்கை அரசாங்கத்திற்கு இரண்டாவது கட்ட நிதி உதவி கொடுப்பதற்காக இலங்கையின் திறைசேரியில் பணம் இருக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்கமைய அந்த பணத்தை வைத்துக் கொள்வதற்காக எங்களுடைய நாட்டு மக்களின் வயிற்றில் அடித்து அவர்களது மின்சாரக் கட்டணத்தினை 18 வீதத்தினால் உயர்த்தி அந்தப் பணத்தைச் சேகரித்து சர்வதேச நாணய நிதியத்திற்குக் காட்டுவதற்காக கடந்த கொரோனாக் காலமிருந்தே கஸ்ரப்பட்டுக் கொண்டிருக்குமு; மக்களின் வயிற்றிலடிக்கும் ஒரு செயலாகவே நாங்கள் இதை பார்க்கின்றோம்.
அந்த வகையில் அரசாங்கம் தொடர்ச்சியாக இந்த நாட்டு மக்களை வஞ்சித்து கொண்டு வருகின்றது. அந்த வஞ்சிப்புக்கு எதிராக நாங்கள் எங்களுடைய கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
முக்கியமாக இந்த பத்திரிகையாளர் மகாநாட்டை நான் கூட்டியதற்கான காரணம், இன்றைய தினம் பாராளுமன்றத்தில் விசேடமாக ஒரு ஒத்திவைப்புப் பிரேரணை வந்திருக்கிறது.அதாவது, மத்திய கிழக்கு நாடுகளிலே இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக ஒரு யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்று உலக நாடுகளிடமும் போர் செய்து கொண்டிருக்கும் அந்த பலஸ்தீனம் இஸ்ரேல் நாடுகளிடம் அந்தப் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு வேண்டி இந்த ஒத்திவைப்பு பிரேரணையைக் கொண்டுவந்து விவாதம் நடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.
நான் கேட்பது என்னவென்றால் கடந்த 14 வருடங்களுக்கு முன்பு 2009ஆம் ஆண்டு எங்களது யுத்த முடிவுற்ற நேரம் வரைக்கும் முள்ளிவாய்க்காலில் நடைபெறாத விடயமா?
இன்று மத்திய கிழக்கு நாடுகளில் வருகிறது. 14 வருடங்களுக்கு முன்பு 7சதுர கிலோமீட்டருக்குள்ளே 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களை திறந்த வெளி சிறைச்சாலையில் அடைத்து வைத்ததை போல், அவர்களை அந்த 7 சதுர கிலோமீட்டருக்குள் அவர்களை வைத்து பொஸ்பரஸ் குண்டுகள் மூலமாகவும், கொத்துக் குண்டுகள் மூலமாகவும் வான்வழி மூலமாகவும் அழித்து அதிலே ஒரு லட்சத்து 40 ஆயிரம் மனித உயிர்களை பலி எடுத்த இந்த இலங்கை அரசாங்கம், அதுவும் சொந்த நாட்டிலே சொந்த மக்களை பலி எடுத்த இந்த இலங்கை அரசு எவ்வாறு போரா முடிவுக்குக் கொண்டுவரும்படி கோர முடியும்.
இஸ்ரேல்- பலஸ்த்தீனம் ஆகிய இரண்டு நாடுகள் போர் புரிகிறார்கள். மனித உயிர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். மனித உயிர்கள் பலி எடுக்கப்படக் கூடாது என்பதில் எங்களுக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை. ஆனால் இந்த போரை நிறுத்தும்படி கேட்பதற்கோ இலங்கை அரசாங்கத்திற்கு எந்த விதமான தார்மீக உரிமையும் இல்லை. எந்தவிதமான யோக்கியதையும் இல்லை. எந்த விதமான அருகதையும் இல்லை. அதாவது பாலஸ்தீனத்தில், இஸ்ரேலில் மனிதர்கள் கடத்தப்படுகின்றார்கள். அவர்கள் கொலை செய்யப்படுகின்றார்கள். அது சர்வதேச சட்டத்திற்கு முரணானது என்று கூறும் இலங்கை அரசாங்கம் தங்களது உறவினர்களால் தங்களது கண்முன்னே கையளிக்கப்பட்ட உறவுகள் கூட இன்று படுகொலை செய்யப்பட்டிருப்பதாக சந்தேகங்கள் இருக்கின்றன.
கொக்குத்தொடுவாய் போன்ற பிரதேசங்களில் அகழ்ந்தெடுக்கப்படுகின்ற சடலங்கள் உறவினர்களால் கையளிக்கப்பட்டவர்கள், சரணடைந்தவர்களதாக இருக்கலாம் என்கின்ற சந்தேகம் இருக்கும்போது, இலங்கை அரசாங்கத்திற்கு எந்தவிதமான அருகதையுமில்லை. நாங்கள் மனித உயிர்ப்பலிக்கு எதிரானவர்கள். பாலஸ்தீனம் – இஸ்ரேலிடையே நடக்கும் போர் நிறுத்தப்பட வேண்டும். அங்கு மனித உயிர்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்பதில் எங்களுக்கு எந்தவிதமான ஆட்சேபனையுமில்லை. ஆனால் இலங்கை அரசுக்கு இதைக் கேட்பதற்கு எந்தவிதமான யோக்கியதையும் இல்லை என்பதைத்தான் நாங்கள் கூறுகின்றோம்.
அத்தோடு 2009இல் அத்தனை உயிர்களையும் பலி கொடுத்த இலங்கை அரசு இன்றுவரை இந்த இனப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரமான தீர்வை காணாமல் தொடர்ச்சியாக மனித உயிர்களை பலி கொடுத்ததற்கு மேலாக வடகிழக்கு பிரதேசங்களை பௌத்தமயமாக்கி இங்கு சிங்களவர்கள் தான் ஆதியிலிருந்து வாழ்ந்தார்கள் என்பதை உறுதிப்படுத்துவதற்காக கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும் இந்த அரசுக்கு, அங்கே ஒரு சமாதானம் வேணும் என்று கேட்பதற்கு எந்தவிதமான அருகதையும் யோக்கியதையும் இல்லை என்பதை நான் தெரிவித்துக் கொள்ளவிரும்புகிறேன்.