முன்னாள் உலகின் நம்பர் ஒன் வீராங்கனை தீபிகா குமாரி தலைமையினான இந்திய அணி மெக்சிகோவை வீழ்த்தி உலகக்கோப்பை வில்வித்தை முதல் ஸ்டேஜ் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றது.
உலகக்கோப்பை வில்வித்தை போட்டி குவாதாமாலா நகரில் நடக்கிறது. இதன் முதல் ஸ்டேஜ் போட்டியில் கலப்பு பிரிவு போட்டியில் இந்தியாவைச் அடானு தாஸ், அங்கிதா ஜோடி அமெரிக்கா அணியை வீழ்த்தி 6-2 என வீழ்த்தி வெண்கலப்பதக்கம் வென்றது.
சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பின் உலகக்கோப்பை அரங்கில் களமிறங்கிய இந்திய அணி முதலில் 2-4 என்ற செட்கணக்கில் பின் தங்கியிருந்தது. ஆனால் பின் எழுச்சி பெற்ற இந்திய வீராங்கனைகளான தீபிகா குமாரி, அங்கிதா பாகத், கோமாலிகா பாரி ஆகியோர் அடுத்த இரண்டு செட்களையும் கைப்பற்றி 4-4 என சமன் செய்தனர்.
பின் வெற்றியாளரை தீர்மானிக்கும் ஐந்தாவது மற்றும் கடைசி செட்டியில் சிறப்பாக செயல்பட்ட இந்திய பெண்கள் அந்த செட்டை 27-26 என வென்று கடந்த 2014க்கு பின் முதல் முறையாக இந்திய பெண்கள் ரிக்கர்வ் பிரிவில் தங்கப்பதக்கம் வென்று சாதித்தனர். மேலும் உலகக்கோப்பை அரங்கில் இந்திய பெண்கள் வெல்லும் ஐந்தாவது தங்கப்பதக்கமாக இது அமைந்தது. முன்னதாக ஷாங்காய் (2011), மெடிலின் (2013), ரோகிலாவ் (2013), மற்றும் ரோகிலாவ் (2014) என நான்கு தங்கப்பதக்கங்களை இந்திய பெண்கள் அணி வென்றுள்ளது.
இந்நிலையில் தீபிகா குமாரியும் தனது ஐந்தாவது தங்கத்தை வென்று அசத்தினார். இதுகுறித்து தீபிகா கூறுகையில், “சுமார் 7 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தங்கப்பதக்கம் வென்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார். உலகக்கோப்பை அரங்கில் இந்திய பெண்கள் அணி தங்கப்பதக்கம் வென்ற போதும் இந்தியப் பெண்கள் அணி ஒலிம்பிக்கிற்கான வாய்ப்பை இன்னும் பெறவில்லை. வரும் ஜூன் மாதம் பாரீஸில் நடக்கவுள்ள உலகக்கோப்பை மூன்றாவது ஸ்டேஜ் தான் ஒலிம்பிக் போட்டிகளுக்கு பங்கேற்கவுள்ள கடைசி வாய்ப்பாகும் இதற்கு இந்த வெற்றி இந்திய பெண்களுக்கு புது உற்சாகம் அளிக்கும் விதத்தில் அமைந்துள்ளது.
இதேபோல் பெண்கள் ஒற்றையர் பிரிவு தனிநபர் பிரிவில் இந்தியாவின் தீபிகா குமாரி, அமெரிக்காவின் மெக்கன்சி பிரவுனை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் அடானு தாஸ் தங்கப்பதக்கம் வென்றார். இதையடுத்து வரும் மே மாதம் சுவிட்சர்லாந்தில் நடக்கவுள்ள உலகக்கோப்பை வில்வித்தை ஃபைனல் போட்டிக்கு இவர்கள் நேரடியாக தகுதி பெற்றனர்.