ஒட்டோமான் பேரரசின் ஆர்மீனிய படுகொலையை இனப்படுகொலையாக அறிவித்தது அமெரிக்கா: 1915 இல் நடந்தது என்ன?

Date:

ஓட்டோமான் பேரரசினால் ஆர்மீனியர்கள் மீது நடத்தப்பட்ட படுகொலையை, இனப்படுகொலையாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

துருக்கியர்களின் ஓட்டோமான் பேரரசுக்கு எதிராக முதல் உலகப் போர் சமயத்தில் ஆர்மீனியர்கள் செயற்படுவதாக கூறி, ஆர்மேனியர்களை படுகொலை செய்யத் தொடங்கியது.

1915 – 1916-ம் ஆண்டுகளில் 15 இலட்சம் ஆர்மீனியர்கள் படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

தற்போதைய ஆர்மீனியா உட்பட பல நாடுகள் இதை இனப்படுகொலை என கூறுகின்றன. ஆனால் ஓட்டோமான் பேரரசுக்கு பின்னர் ஆட்சிக்கு வந்த தற்போதைய துருக்கி குடியரசு இதனை இனப்படுகொலை என கூறுவதை மறுக்கிறது. மேலும் 1915 – 1916 ஆம் ஆண்டுகளில் 3 இலட்சம் ஆர்மீனியர்கள் மட்டுமே கொல்லப்பட்டதாகக் கூறி வருகிறது.

இந்த நிலையில் ஓட்டோமான் பேரரசு காலத்தில் ஆர்மீனியர்கள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வை இனப்படுகொலை என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார். ஓட்டோமான் பேரரசின் படுகொலையை இனப்படுகொலை என அறிவித்த முதல் அமெரிக்க ஜனாதிபதி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.‌

ஜோ பைடன் இதுகுறித்துக் கூறுகையில் ‘‘ஒட்டோமான் கால ஆர்மீனிய இனப்படுகொலையில் இறந்த அனைவரின் வாழ்க்கையையும் நாங்கள் நினைவில் கொள்கிறோம். இதுபோன்ற ஒரு கொடுமை மீண்டும் நிகழாமல் தடுக்க நம்மை மறுபரிசீலனை செய்கிறோம். இனப்படுகொலை என அறிவிப்பதின் நோக்கம், குற்றம் சாட்டுவது அல்ல, என்ன நடந்ததோ அது மீண்டும் நிகழாமல் இருக்க உறுதி செய்வதாகும்’’ என்றார்.

இதனிடையே அமெரிக்காவின் இந்த அறிவிப்புக்கு துருக்கி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் இதுதொடர்பாக துருக்கியில் உள்ள அமெரிக்க தூதரை நேரில் அழைத்து சம்மன் வழங்கியுள்ளது துருக்கி அரசு.

துருக்கியின் துணை வெளிவிவகார அமைச்சர் செடாட் ஓனல், அமெரிக்க தூதர் டேவிட் சாட்டர்ஃபீல்டிடம் இந்த அறிக்கைக்கு எந்த சட்டபூர்வமான அடிப்படையும் இல்லை என்றும், ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் கடுமையான கண்டனத்திற்குரியது, அமெரிக்காவின் அறிவிப்பு சீர்செய்ய முடியாதளவில் உறவை மோசமாக்கும் என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

1915இல் நடந்தது என்ன?

19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஒட்டோமான் பேரரசின் சுமார் இரண்டு மில்லியன் ஆர்மீனியர்கள் தேசியவாத அபிலாஷைகளை வலியுறுத்தத் தொடங்கினர்.

ஒட்டோமான் பேரரசின் குர்துகள், மற்றும் படைப்பிரிவுகளால் கிழக்கு அனடோலியாவில் 1894-1896ல் பல்லாயிரக்கணக்கான ஆர்மீனியர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
இஸ்தான்புல்லில், ஓகஸ்ட் 1896 இல் ஆர்மீனிய போராளிகள் ஒட்டோமான் வங்கியைக் கைப்பற்றிய பின்னர் கிழக்கு துருக்கி. கொன்ஸ்டான்டினோப்பிள் உள்ளிட்ட பகுதிகளில் மேலும் பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர்.

முதலாம் உலகப் போரில் ஒட்டோமான்கள் கிழக்கு அனடோலியாவில் ரஷ்ய படைகளை எதிர்த்துப் போராடியபோது, ​​பல ஆர்மீனியர்கள் படையெடுக்கும் ரஷ்யப் படைகளுக்கு உதவும் குழுக்களை உருவாக்கினர். இதனால் ஓட்டோமான் பேரரசின் கோபம் அதிகரித்தது.

ஏப்ரல் 24, 1915 அன்று, ஒட்டோமான் பேரரசு நூற்றுக்கணக்கான ஆர்மீனிய புத்திஜீவிகளைக் கைது செய்து கொன்றது.

மே 1915 இல், ஒட்டோமான் தளபதிகள் கிழக்கு அனடோலியாவிலிருந்து ஆர்மீனியர்களை பெருமளவில் நாடு கடத்தத் தொடங்கினர். சிரியா மற்றும் மெசொப்பொத்தேமியா நோக்கி இலட்சக்கணக்காணவர்கள் இடம்பெயர்ந்து கூட்டம் கூட்டமாக சென்றனர். இதில் சுமார் 1.5 மில்லியன் பேர் படுகொலைகள், பாலைவனத்தில் பட்டினி மற்றும் சோர்வு காரணமாக இறந்தனர் என ஆர்மீனியர்கள் குறிப்பிடுகிறார்கள்.

எனினும், தற்போதைய துருக்கி அரசு அத மறுத்து, 3 இலட்சம் பேரே கொல்லப்பட்டதாக தெரிவிக்கிறது.

spot_imgspot_img

More like this
Related

இஸ்ரேலும் ஹிஸ்புல்லாவும் சண்டையை நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளன: ட்ரம்ப்

இஸ்ரேலும் ஹிஸ்புல்லாவும் சண்டையை நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்...

தானசாலை வரிசையில் நின்றவர்களை மோதிக்கொன்ற வாகன சாரதி மீது கொலைக்குற்றச்சாட்டு!

மீகொடவில் உள்ள வெசக் தானசாலையில் வரிசையில் நின்றிருந்த மக்கள் கூட்டத்தின் மீது...

‘நீதிபதி இடமாற்றத்துடன் எனக்கு தொடர்பேயில்லை’: மறுக்கிறார் ஆளுனர்!

யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதியின் இடமாற்றத்துக்கும், வடக்கு மாகாண ஆளுநருகும் எந்தவொரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்