யாழ்ப்பாணம் ‘நாவாந்துறை ஊர்ச்சட்டத்தை’ மீற அனுமதிக்கமாட்டோம் என தெரிவித்து, பிரான்ஸில் தமிழ் எழுத்தாளர் டானியல் ஜெயந்தன் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.
நாவாந்துறையிலிருந்து புலம்பெயர்ந்து பிரான்ஸில் வசிக்கும் சிலரே தாக்குதல் நடத்தியுள்ளனர்.
எழுத்தாளர் டானியல் ஜெயந்தன், தற்போது பிரான்ஸில் வசிக்கிறார். யாழ்ப்பாணம் நாவாந்துறையை சேர்ந்தவர். மூத்த எழுத்தாளர் டானியல் அன்ரனியின் மகன்.
சில மாதங்களின் முன்னர் வயல்மாதா என்ற சிறுகதை தொகுப்பை வெளியிட்டிருந்தார். அந்த சிறுகதை தொகுப்புக்கு நாவாந்துறையை சேர்ந்த டானியல் அன்ரனியின் உறவினர்களும், நண்பர்களும், அறிமுகமானவர்களுமான கிறிஸ்தவ குடும்பங்கள் சில எதிர்ப்பு தெரிவித்தன.
அந்த சிறுகதை தொகுப்பை மீளப்பெறுமாறு வலியுறுத்தினர். அத்துடன், பிரான்ஸின் நெவர் பகுதியில் உள்ள தேவாலயமொன்றில் ஆராதனையின் பின்னர் ஒன்றுகூடியவர்கள், டானியல் அன்ரனியின் வீட்டை முற்றுகையிட்டதுடன், வயல்மாதா சிறுகதை தொகுப்பை தீயிட்டும் எரித்திருந்தனர்.
அத்துடன், நாவாந்துறை மக்கள் சார்ந்த சமூக ஊடக வலையமைப்பு்களிலும் தீவிர எதிர்ப்பிரச்சாரம் செய்யப்பட்டது. இதையடுத்து, நாவாந்துறை ஊர்சார்ந்த எந்த சங்கங்கள், அமைப்புக்களிலும் டானியல் ஜெயந்தன் அங்கம் வகிக்கக்கூடாது என பகிரங்க அறிவித்தல் விடுக்கப்பட்டு, அவர் ஊரைவிட்டு ஒதுக்கப்பட்டார்.
இந்த பின்னணியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (17) அங்குள்ள விளையாட்டு மைதானமொன்றில் நாவாந்துறையை சேர்ந்த சிலரால் அவர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.
இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த- அந்த பகுதியில் வசிக்கும் புலம்பெயர்ந்தவர்கள் கிரிக்கெட் ஆடும் மைதானத்திலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நாவாந்துறை ஊர் சங்கத்தால் விலக்கப்பட்டால், இங்கு விளையாட முடியாது என தெரிவித்து, நாவாந்துறையை சேர்ந்த சிலர் கிரிக்கெட் மட்டை, விக்கெட்டினால் டானியல் ஜெயந்தனை தாக்கியுள்ளனர். இதை தடுக்க முனைந்த அவரது சகோதரனும் தாக்கப்பட்டார்.
தலை, கையில் கடுமையாக தாக்கப்பட்ட எழுத்தாளர் டானியல் ஜெயந்தன், அங்குள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றார்.
உண்மை சம்பவ பின்னணி?
வயல் மாதா சிறுகதை தொகுப்பு வெளியான போது, ஓரிரு வருடங்களின் முன்னர் நடந்த உண்மை சம்பவமொன்றை அடிப்படையாக கொண்டு அந்த கதை எழுதப்பட்டுள்ளதாக, ஊர் மக்கள் குற்றம்சாட்டியிருந்தனர்.
நாவாந்துறையை சேர்ந்த கிறிஸ்தவ அருட்சகோதரி ஒருவர், வவுனியா மாவட்டத்தின் செட்டிக்குளம் பகுதியில் தங்கியிருந்த சமயத்தில் கடத்தப்பட்டதாக கூறப்பட்டது. பின்னர்தான் தெரிய வந்தது- அது கடத்தல் அல்ல, தனது பாடசாலைக்கால காதல் தொடர்பினால் அவர் துறவறத்திலிருந்து வெளியேறி, குடும்ப வாழ்க்கைக்குள் நுழைந்தது. அவர் துறவறத்திலிருந்து வெளியேற விரும்புவதாக சிலபல தடவைகள் குடும்பத்தினரிடம் தெரிவித்த போதும், அவர்கள் அதை பொருட்படுத்தவில்லையென்றும் கூறப்பட்டது.
கடுமையான ‘கிறிஸ்தவ ஒழுக்கத்தை’ பின்பற்றும் கரையோர சமூக மக்கள் மத்தியில் இந்த சம்பவம் ஒரு கரும் புள்ளியாக அமைந்தது. அவர்கள் அதனையொரு ‘துன்பியல் சம்பவமாக’ கருதி, மறக்க முனைந்து கொண்டிருக்கிறார்கள். அந்த சம்பவமே கதையில் இடம்பெற்றுள்ளது என்பது அவர்களின் குற்றச்சாட்டு.
கதைமாந்தர்களின் உண்மையான பெயர்கள் இடம்பெற்றுள்ளது, ஆபாசமாக வர்ணிக்கப்பட்டுள்ளார்கள், தூசண வார்தைகள் இடம்பெற்றுள்ளது என்பது கிராம மக்களின் குற்றச்சாட்டு.
ஆனால் எழுத்தாளர் டானியல் ஜெயந்தன் அதை மறுத்துள்ளார். வயல்மாதா கதை முழுமையான கற்பனை கதையென்றும், அப்படியொரு சம்பவம் நடந்ததா என்பதே தனக்கு தெரியாது என்றும் குறிப்பிட்டுள்ளார். கற்பனை கதையில் வரும் பாத்திரங்கள் எப்படி இன்னொரு சம்பவத்துடன் தொடர்புடைய உயிர்வாழும் நபர்களாக அமைய முடியும் என்பது அவருடைய கேள்வி.