இரத்தினபுரி கொடமுல்ல பிரதேசத்தில் சிகரெட்டுக்கு ஒரு ரூபாவை குறைவாக கொடுத்ததால் ஏற்பட்ட தகராறில் இருவர் கொல்லப்பட்ட சம்பவத்தின் சூத்திரதாரி பத்து வருடங்களின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரத்தினபுரி கொடமுல்ல சந்தியில் கடையொன்றை நடத்தி வந்த ஏ.எல்.ரத்னசிறி பெரேரா (69) மற்றும் எம்.கமலா அம்பேசிங்க (62) ஆகியோரே கடந்த 2013 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 30 ஆம் திகதி அவர்களது கடையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர்.
பத்து வருடங்களாக இரட்டைக் கொலை மர்மமாகவே இருந்தது.
பத்து வருடங்களாக இரட்டைக் கொலை மர்மமாகவே இருந்தது. திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் தொடர்பில் இரத்தினபுரி குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின்படி கைது செய்யப்பட்டுள்ளார்
பத்து வருடங்களுக்கு முன்னர் கொடமுல்ல பிரதேசத்தில் தம்பதி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர், தீர்க்கப்படாத சம்பவம் தொடர்பில் அறிந்திருந்தமையினால், திருட்டு சந்தேகநபர் மீது சந்தேகப்பட்டுள்ளார்.
கொலை நடந்த தினங்களில் இவரே சில துணிகளை எரித்துள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளதுடன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.
அதற்குள் சந்தேக நபர் அப்பகுதியில் இருந்து தப்பியோடிவிட்டார்.
10 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த இரட்டைக் கொலைச் சம்பவம் குறித்து சந்தேகநபரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியபோது மர்மம் வெளியானது.
தேயிலை தொழிற்சாலை ஒன்றின் சாரதியான சந்தேகநபர், வேலை முடிந்து நள்ளிரவில் கொடமுல்ல சந்திக்கு வந்து மது மற்றும் போதைப்பொருள் உட்கொண்டுள்ளார். சிகரெட் வாங்க விரும்பினார். ஆனால் கடைகள் மூடியுள்ளன. ஒரு கடையை தட்டி திறக்க வைத்து, 2 சிகரெட் வாங்கியுள்ளார். ஒரு ரூபாய் குறைவாக கொடுத்துள்ளார்.
கடைகாரர் எதிர்ப்பு தெரிவித்து, முழுமையான பணத்தை தருமாறும் இல்லாவிட்டால் சிகரெட்டை திருப்பி தருமாறும் கேட்டுள்ளார்.
கடை உரிமையாளருக்கும் சந்தேகநபருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து, கடையின் வாசலில் இருந்த தடியால் கடை உரிமையாளரைத் தாக்கியதுடன், கடை உரிமையாளரும் சந்தேக நபரை விளக்குமாறினால் தாக்கியுள்ளார்.
பின்னர், கடையின் வாழைப்பழம் வெட்டும் கத்தியால் கடை உரிமையாளரையும் அவரது மனைவியையும் வெட்டிவிட்டு தப்பிச் சென்றதாக சந்தேகநபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
பின்னர், திருட்டுச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.