சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்துமாறான தமிழர்களின் கோரிக்கையை ஐக்கிய இராச்சிய சனல் 4 ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் செய்திக் காணொளி மீள வலியுறுத்துகிறது என நாடு கடந்த அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் நாடு கடந்த அரசாங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்-
I. காத்திரமான உள்ளூர்த் தீர்வில்லாததால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்துதல்
சிறீலங்காவில் குறைந்தது 350 பேரைக் கொன்ற 2019 ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுக்குப் பின்னால் ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சிறீலங்காவின் பாதுகாப்பு புலனாய்வு துறையின் உயர் அதிகாரிகள் உள்ளதைக் காண்பிக்கும் காணொளியொன்றை ஐக்கிய இராச்சியத்தின் சனல் 4 கடந்த திங்கட்கிழமை வெளியிட்டிருந்தது. பாதுகாப்பு மற்றும் அரசியல் உயர் மட்டங்களின் அங்கத்தவர்கள் சம்பந்தப்பட்டுள்ள நிலையில், எதிர்கட்சித் தலைவர் உள்ளடங்கலாக சிங்கள சமூகத்திடமிருந்து இவ்விடயமானது சர்வதேச விசாரணையொன்றுக்கு பாரப்படுத்தப்பட வேண்டுமென கோரிக்கைகள் விடப்பட்டுள்ளன.
சிறீலங்கா அரசானது இன ரீதியாக நடுநிலையானதல்ல. ஆகையால், யுத்தத்தின்போதும் 2009ஆம் ஆண்டு முடிவடைந்த யுத்தத்தின் பின்னரும் சிறி லங்கா தேசத்தால் புரியப்பட்ட குற்றங்களுக்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்துமாறு 2011ஆம் ஆண்டு முதல் தமிழர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். சிறீலங்காவின் அரசியல், இராணுவத் தலைவர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு பாரப்படுத்துவதற்கான கையெழுத்து இயக்கமொன்றை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஆரம்பித்த நிலையில், கடந்த 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான மூன்று மாதங்களில் உலகளாவிய ரீதியில் 1.6 மில்லியன் கையெழுத்துக்களை அது பெற்றிருந்தது.
ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் மிஷெல் பஷ்லெட், தனது கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் திகதி அறிக்கையில் பொறுப்புக்கூறல் தொடர்பாக பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
குற்றவியல் பொறுப்புக்கூறல் பாதிக்கப்பட்டவர்களுக்கான தீர்வை வழங்குவதற்கான நடவடிக்கைகளில் முன்னோக்கிச் செல்ல உறுப்பு நாடுகள் பல்வேறு தெரிவுகளைக் கொண்டுள்ளன.சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு சிறீலங்காவின் நிலையைப் பாரப்படுத்துவதை நோக்கிச் செல்லும் நடவடிக்கைகளுடன் எடுப்பதுடன், சிறீலங்காவில் அனைத்துத் தரப்புக்களாலும் புரியப்பட்ட சர்வதேசக் குற்றங்களுக்கான விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளை தமது நீதிமன்றங்களுக்கு முன்னால் உலகளாவிய நியாயாதிக்கத்தின் கீழ் உறுப்பு நாடுகள் மேற்கொள்ள முடியும்.
பச்லெட்டின் கருத்தை மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் முன்னாள் உயர்ஸ்தானிகர்கள் நால்வராலும், சிறீலங்காவுக்கு விஜயம் செய்த மற்றும் அறிக்கைகளை வரைந்த ஒன்பது முன்னாள் சிறப்பு விசாரணையாளர்கள், சிறீலங்கா மீதான பொதுச்செயலாளர் நாயகத்தால் அமைக்கப்பட்ட குழுவின் சகல உறுப்பினர்கள் மூவரும் கடிதமொன்றில் கடந்த 2021ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 18ஆம் திகதி வழிமொழிந்திருந்தனர்.
சிறீலங்கா அரசின் கைகளில் சித்திரவதை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினரொருவருக்குச் சார்பாக ஏகமனதான தீர்ப்பொன்றை ஐக்கி நாடுகளின் மனித உரிமைகள் குழு (UN Human Rights Committee ) இவ்வாண்டு ஏப்ரல் மாதம் 12ஆம் திகதி வழங்கியதாக மனித உரிமைகள் சபைக்கான தனது அறிக்கையில் ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் வொல்கர் துர்க் ( Volker Türk ) நேற்று முன்தினம் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினரால் வைக்கப்பட்ட குற்றச்சாட்டை சிறீலங்கா அரசு மறுத்திருந்தது. எனினும் அதன் மறுப்பை சகல 17 நீதிபதிகளும் நிராகரித்திருந்தனர். இது தவிர, உள்ளூர்த் தீர்வுகளை பிரதிவாதி பெறலாமெனவும் சிறீலங்கா அரசு வாதாடியது. எனினும் உள்ளூர்த் தீர்வுகள் பயன்றதென நீதிபதிகள் குழாம் குறிப்பிட்டிருந்தது .
மிலேச்சத்தனதிற்கு காரணமான பொலிஸாரை சுயாதீனமாக, முழுமையாக விசாரிக்குமாறு சிறீலங்காவுக்கு மனித உரிமைக்குழு உத்தரவிட்டிருந்தது. மேலும் பாதிக்கப்பட்டவருக்கு போதுமானளவு நட்டஈட்டை சிறீலங்கா கட்டாயம் செலுத்துவதோடு, இவ்வாறான நடவடிக்கைகள் மீண்டும் இடம்பெறாதவாறு அதன் சட்டங்களை மாற்ற வேண்டும் எனவும் மனித உரிமைக்குழு தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தது . எனினும், மனித உரிமைகள் குழுவின் தீர்ப்பில் கூறப்பட்ட எந்த ஒரு நடவடிக்கையையும் சிறி லங்கா இன்றுவரை எடுக்கவில்லை.
மனித உரிமைகளுக்கான முன்னாள் உயர்ஸ்தானிகர் அல் ஹுஸைன் கடந்த 2015ஆம் ஆண்டு றோம் பிரகடனத்தை சிறீலங்கா ஏற்றுக் கொள்ளும்படி கோரியிருந்தார். சிறிலங்கா றோம் பிரகடனத்தை பின்னோக்கி (retrospectively ) ஏற்றுக்கொள்வது யுத்தத்தின் இறுதிக் கட்டங்களில் சிறீலங்காவால் புரியப்பட்ட இனவழிப்பு, மனித குலத்துக்கெதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள் மற்றும் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்களை விசாரணை செய்து தண்டனை வழங்கும் நியாயாதிக்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு வழங்குமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நம்புகின்றது.
சிங்கள சமூகத்திடமிருந்து சர்வதேச விசாரணையைக் கோரும் அழைப்பானது அவ்வாறான நடவடிக்கையை நடைமுறைப்படுத்துவது சாத்திமாகுமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நம்புகின்றது. இத்தருணத்தை சர்வதேச சமூகம் பற்றிப் பிடித்துக் கொள்ள வேண்டும்.
II. பாரிய மனிதப் புதைகுழிகள்
கடந்த 30 ஆண்டுகளில் 32 பாரிய மனிதப் புதைகுழிகள் (முல்லைத்தீவு கொக்குத்தொடுவாயில் இறுதியாகக் கண்டுபிடிக்கப்பட்டது 33ஆவது) இலங்கைத் தீவில் அடையாளங்காணப்பட்டுள்ளன.
காணமலாக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு இது தீர்க்கப்படாத துயரக் கதையொன்றாகும். தங்களது உறவுகளை ஒருபோதும் கண்டுபிடிக்காமலே அத்துயரத்துடன் அவர்களது உறவினர்கள் வாழ்ந்து இறக்கின்றனர்.
நீதித்துறை உள்ளிட்ட சிறீலங்கா அரச நிறுவனங்களில் ஆழமாக வேரூன்றியிருக்கும் இனவாதம் காரணமாக உள்ளூர்ப் பொறிமுறைகள் மூலம் தமிழ் மக்கள் ஒருபோதும் நீதியைப் பெறமாட்டார்கள். அந்தவகையில், அகழ்ந்தெடுத்தலுக்கு சர்வதேசப் பொறிமுறையொன்று, ஆதாரப் பாதுகாப்பு, இறுதியாக நீதி மற்றும் பொறுப்புக்கூறல் கட்டாயம் ஆகும்.
அகழ்ந்தெடுத்தல் தொடர்பான சர்வதேசப் பொறிமுறைகான அதிகாரத்தை இலங்கை மீதான மனித உரிமைகள் சபையின் 2021ஆம் ஆண்டு தீர்மானத்தின் (A/ HRC/Res/51/1), எட்டாவது பந்தி வழங்குகின்றது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உறுதியாக நம்புகின்றது. இப்பந்தி மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம் எதிர்கால பொறுப்புக்கூறல் நடைமுறைகளுக்கு தேவையான தகவல் மற்றும் சாட்சியங்களை சேகரிக்க, உறுதிப்படுத்த, ஆராய, பேண அதிகாரம் வழங்குகின்றது.
III. எந்தவொரு பெளத்தர்களும் வசிக்காத தமிழ்ப் பகுதிகளில் அரசாங்க ஆதரவுடன் பெளத்த விகாரைகளின் நிர்மாணம் – திட்டமிடப்பட்ட குடிப்பரம்பல் மாற்றம்
யுத்தம் 14 ஆண்டுகளுக்கு முன்னர் முடிவடைந்த பின்னரும் தமிழ்ப் பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் நிலை நிறுத்தப்பட்டுள்ள பாதுகாப்புப் படைகளின் ஆதரவில், வரலாற்று ரீதியிலான தமிழ்ப் பகுதிகளில் பல பெளத்த விகாரைகள் நிர்மாணிக்கப்படுகின்றன.
இந்த பெளத்த விகாரைகள் நிர்மாணிக்கப்படும் தமிழ்ப் பகுதிகளில் பெளத்தர்கள் எவரும் வசிக்கவில்லை.
பெளத்த விகாரைகள் நிர்மாணிக்கப்பட்ட பின்னர் புத்த பிக்குகள் வழிபாடுகளை நடத்துவதற்காக செல்வர். தொடர்ந்து அனைத்தும் சிங்களவர்களான பெளத்த மக்கள் பாதுகாப்புப் படைகளின் ஆதரவுடன் சென்று தமிழ்ப் பகுதிகளில் குடியேறுவர். இதன் காரணமாக குடிப்பரம்பலில் மாற்றம் ஏற்படுவதுடன், சிங்களக் குடிமக்களாலும், பாதுகாப்பு படைகளாலும் தமிழர்கள் சூழப்பட்டு தமிழ்ப் பகுதிகள் பெரும்பான்மை சிங்களப் பகுதிகளாக மாறும்.
சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்தே வரலாற்று ரீதியிலான தமிழ்ப் பகுதிகளில் தமிழ்ச் சனத்தொகையைக் குறைப்பதற்கான தொடர்ச்சியான சிறீலங்கா அரசாங்கங்களின் கொள்கையான குடிப்பரம்பல் மாற்ற முயற்சியால் தமிழ் அரசியல் பிரதிநித்துவம் வலுவிழக்கின்றது .
உயர்ஸ்தானிகர் தனது அறிக்கையில் குறிப்பிட்டது போன்று உதவித் திட்டங்களைப் பேரம்பேசும்போது, அமுல்படுத்தும்போது பொறுப்புக்கூறல் உள்ளடங்கலான சிறீலங்காவின் மனித உரிமைகள் நிலையை சர்வதேச நிதி நிறுவனங்கள் கவனத்தில் எடுக்க வேண்டும்.
IV. அரசியல் செயற்பாடுகள் காரணமாக பாராளுமன்றத்தின் தமிழ் உறுப்பினருக்கெதிரான கடும் அச்சுறுத்தல்கள்
கொழும்பில் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாரின் தனியார் வசிப்பிடத்தை சில சிங்கள புத்த பிக்குகள், சிங்கள பாராளுமன்ற உறுப்பினரால் தலைமை தாங்கப்பட்ட பாரிய சிங்களக் கூட்டமொன்று இவ்வாண்டு ஓகஸ்ட் மாதம் 26ஆம் திகதி சூழ்ந்தது. கஜேந்திரகுமாரின் தந்தையான குமார் பொன்னம்பலம் கடந்த 2000ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஐந்தாம் திகதி சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார். அப்போது முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கா பதவியில் இருந்தார். இன்றுவரை எவரும் நீதிக்கு முன் நிறுத்தப்படவில்லை. இது தமிழர்களால் அமைதியான அரசியற் செயற்பாடுகளுக்கு ஸ்ரீலங்கா தீவில் எவ்வெளியுமில்லை என்பதை வெளிக்காட்டுகிறது.
V. 13ஆவது திருத்தம்
உயர்ஸ்தானிகரின் அறிக்கையில் 13ஆவது திருத்தம் தொடர்பான அவரது கருத்து குழப்பத்தை ஏற்படுத்துகிறது. தனது அறிக்கையில் உயர்ஸ்தானிகர் 13ஆவது திருத்தம் தொடர்பாக பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:
தமிழ் அரசியல் கட்சிகள், புலம்பெயர்க் குழுக்களுடன் கலந்துரையாடல், உண்மையைக் கண்டறிதல் மூலம் மேம்பட்ட நல்லிணக்கத் தெரிவுகள், 13ஆம் திருத்தத்தில் குறிப்பிடப்பட்டது போன்று அதிகாரப் பகிர்வுக்கான ஏனைய அரசியல் தீர்வுகள் தொடர்பான ஜனாதிபதியின் நோக்கத்தை மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகம் வரவேற்கிறது.
சட்டப் புத்தங்களிலுள்ள சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே சட்ட ஆட்சியாகும். ஏற்கெனவே உள்ள சட்டத்தை அமுல்படுத்துவதற்கு தமிழ் அரசியல் கட்சிகளுடனான கலந்துரையாடல் ஏன் தேவைப்படுகிறது? இந்நேரத்தில் 13ஆம் திருத்தத்தின் சாதக, பாதகங்களையோ அல்லது 13ஆவது திருத்ததின் மூலம் இந்தியாவின் இராஜதந்திர வகிபாகத்தை சிறீலங்கா அரசாங்கம் மட்டுப்படுத்துவது குறித்தோ நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கருத்துத் தெரிவிக்க விரும்பவில்லை. சிறீலங்கா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் 13ஆவது திருத்தம் குறித்து கூறப்பட்ட அண்மைய கருத்துகளானவை தமிழர்களையும், சர்வதேச சமூகத்தையும் ஏமாற்றவே ஆகும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நம்புகின்றது. இந்த ஏமாற்றுப் பொறியில் உயர்ஸ்தானிகரும் வீழ்ந்து விட்டாரோ என நாங்கள் அஞ்சுகின்றோம்.
13ஆவது திருத்தத்தை அமுல்படுத்தாமைக்கான உண்மையான காரணமானது சிங்கள அரசியல் சமூகம் ஒருபோதும் இதை அமுல்படுத்த அனுமதிக்காது.
VI . பொதுவாக்கெடுப்பு
ஜனநாயகக் கோட்ப்பாடுகளின் அடிப்படையிலும், சர்வதேச சட்டங்கள், குறிப்பாக இன்று மரபுவழிச் சட்டமாக கருதப்படுகின்ற நாடுகளுக்கிடையிலான நட்புறவு தொடர்பான ஐக்கிய நாடுகள் பொதுச்சபை தீர்மானம் 2625 (1970) அடிப்படையிலும், சர்வதேச மனித அரசியல் சமூக உரிமைகள் பிரகடனத்தின் அடிப்படையிலும், சர்வதேச நடைமுறை அடிப்படையிலும் தமிழ் தேசிய பிரச்சனை சர்வதேச அனுசரணையுடனான பொதுவாக்கெடுபின் மூலமே தீர்க்கப்படவேண்டுமென உலகத்தமிழர்கள் திடமாகக் கருதுகின்றார்கள். 2013 ஆம் ஆண்டு தமிழக சட்டசபை ஈழத்தமிழரின் அரசியல் எதிர்காலம் ஸ்ரீலங்கா தீவில் உள்ள தமிழர்கள் மத்தியிலும் புலத்தில் வாழும் ஈழத்தமிழர்கள் மத்தியிலும் பொதுவாக்கெடுப்பின் மூலமே தீர்மானிக்கப்பட வேண்டுமென ஏகமானதாகத் தீர்மானம் நிறைவேற்றியிருந்தது.
– என குறிப்பிடப்பட்டுள்ளது.