ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் அருகே மிகவும் பிரசித்தி பெற்ற சிம்மாச்சலத்தில் உள்ள ஸ்ரீ வராஹ லட்சுமி நரசிம்ம ஸ்வாமி வரி தேவஸ்தானம் உள்ளது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று இக்கோயிலில் உண்டியல் பணம் எண்ணப்பட்டது. அப்போது, அதில் ஒரு பக்தர், ரூ.100 கோடிக்கான காசோலையை காணிக்கையாக வழங்கி இருப்பது தெரியவந்தது. இதனை பார்த்து கோயில் அதிகாரிகள், ஊழியர்கள் மிகவும் ஆச்சரியப்பட்டனர். உடனே இதனை தேவஸ்தான நிர்வாக அதிகாரியிடம் கொண்டு சென்று காண்பித்தனர். அவர் அதனை கோயில் சார்பில் வங்கி கணக்கில் வரவு வைக்கும்படி உத்தரவிட்டார்.
அதன்படி, ஊழியர் இருவர் தேவஸ்தான வங்கி கணக்கில் அந்த காசோலையை வழங்கினர். அதனை சரிபார்த்த வங்கி அதிகாரிகள், அதில் ரூ.17 மட்டுமே இருப்பு உள்ளதாக தெரிவித்தனர். இதனை கேட்ட சிம்மாச்சல தேவஸ்தான அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
ராதாகிருஷ்ணா எனும் ஆந்திராவை சேர்ந்த பக்தர்தான் இந்த செயலை செய்தது என வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். அவர் இச்செயலை வேண்டுமென்றே செய்தாரா? அல்லது வேறு ஏதாவது விஷயமா? அந்த பக்தர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமா ? வேண்டாமா? என சிம்மாசலம் தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.